பெஞ்சமின் பிராங்க்ளின்
- அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் பெஞ்சமின் பிராங்க்ளின். அறிவியல், அரசியல், வர்த்தகம், எழுத்து எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். தான் கால்பதித்த அத்தனை துறைகளிலும் வெற்றி பெற்றவர்.
- 1706 ஜனவரி 17 அன்று பாஸ்டன் நகரில் பிறந்தார் பிராங்க்ளின். அவருடன் சேர்த்து அவர் பெற்றோருக்கு 17 குழந்தைகள். தந்தை மெழுகுவர்த்தி, சோப்பு தயாரித்து விற்பனை செய்தார். பிராங்க்ளினால் ஓர் ஆண்டுகூடப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் வசதி இல்லை. தந்தைக்கு உதவியாளராக மாறினார். தந்தையிடம் தொழிலைக் கற்றார். படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தானே 4 மொழிகளைக் கற்றார். 7 வயதிலேயே கவிதைகளை எழுத ஆரம்பித்தார். அண்ணனின் அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அவருக்கு ஏராளமான புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
- 17 வயதில் அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஸ்டனை விட்டு ஃபிலடெல்பியாவுக்குச் சென்றார். அங்கு சொந்தமாக அச்சுத் தொழிலைத் தொடங்கினார் பிராங்க்ளின். ‘கெசட்’ என்கிற பத்திரிகையை ஆரம்பித்தார். முதன்முதலில் சந்தா திட்டத்தை உருவாக்கினார். கடின உழைப்பாலும் திறமையாலும் நகரத்தின் முக்கிய நபராக உயர்ந்தார் பிராங்க்ளின்.
- பட்டம் விட்டு மின்சாரத்தை ஆராய்ச்சி செய்தார். மழை பெய்யும் போது புயல் மேகத்தில் பட்டத்தைப் பறக்கவிட்டார். பட்டத்தில் இருந்த கயிற்றின் வழியே மின்சாரத்தைக் கடத்திக் காட்டினார். இதன் மூலம் மின்னல் என்பது மின்சாரம் என்று உறுதிப்படுத்தினார். மின்னலை ஈர்க்கும் இடிதாங்கியைக் கண்டறிந்தார். இதன் மூலம் உயர்ந்த கோபுரங்கள், கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டன.
- நேர்மின்னோட்டம், எதிர்மின்னோட்டம் பற்றிய கோட்பாடுகளை உருவாக்கினார். கிட்டப்பார்வை, தூரப்பார்வை என இரண்டு பார்வைக் குறைபாடும் உள்ளவர்களின் குறையை நிவர்த்தி செய்ய பைஃபோகல் கண்ணாடியைக் கண்டறிந்தார். தனித்தனி கண்ணாடியாக அணியாமல், ஒரே லென்சில் இரண்டு குறைகளையும் நிவர்த்தி செய்தார்.
- குறைந்த செலவில் அதிக வெப்பம் உருவாக்கும் அடுப்புகளை வடிவமைத்தார். அதற்கு ‘பிராங்க்ளின் அடுப்பு’ என்று பெயர்.
- கடல் நீரோட்டங்களின் வெப்பநிலை மாற்றங்களை ஆய்வு செய்தார். வளைகுடா நீரோட்டத்தை வரைபடமாக்கினார். அதில் வெப்பம் பரவும் விதம் பற்றிய கோட்பாடுகளை உருவாக்கினார். கடல் பயண உபகரணங்கள், கப்பலுக்கான திசைகாட்டிகள், கடலின் ஆழத்தை அளக்கும் கருவிகள் போன்றவற்றையும் உருவாக்கினார்.
- காகிதத்தில் கரன்சி நோட்டு அச்சடிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார். நடமாடும் நூல் நிலையத்தை அறிமுகப்படுத்தினார். தபால்துறையில் மாற்றம் செய்தார். அமெரிக்காவின் முதல் ‘தீ விபத்து காப்பீட்டு’ நிறுவனத்தை உருவாக்கினார். உலகப் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைகழகத்தை நிறுவினார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார்.
- அரசியலிலும் தன் பங்களிப்பைச் செலுத்தினார் பிராங்க்ளின். பாரிஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்காற்றினார். இதன்மூலம் போர் முடிவுக்கு வந்து, அமெரிக்காவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.
- அரசியல்சட்டத்தை இயற்றும் பொறுப்பு பிராங்க்ளின் உள்ளிட்ட மூவர் குழுவுக்கு வந்தது. அவர் மேற்பார்வையில் இயற்றப்பட்டதுதான் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம். அப்போதே தபால்தலை வெளியிட்டு பிராங்க்ளின் கெளரவிக்கப்பட்டார்.
- 1790, ஏப்ரல் 17 அன்று 84 வயதில் மறைந்தார். ‘இறந்த பிறகும் வாழ வேண்டும் என்றால் சிறந்த படைப்பை எழுத வேண்டும். அல்லது பிறர் நம்மைப் பற்றி எழுதும் அளவுக்கு வாழ வேண்டும்’ என்று கூறிய பிராங்க்ளின், இரண்டையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 – 2024)