TNPSC Thervupettagam

பேரறிவுச் சிலை

January 1 , 2025 3 days 33 0

பேரறிவுச் சிலை

  • இந்தியத் துணைக்கண்டத்தின் பெருநிலவெளியும் முந்நீர்ப் பெருங்கடற்பரப்பும் கைகுலுக்கிக் கொள்ளும் குமரிமுனையில் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே குன்றென நிமிர்ந்து நிற்கும் குறியீடாக அய்யன் திருவள்ளுவரின் பேரறிவுப் பெருஞ்சிலை. இந்தச் சிலை இல்லாத குமரிக் கடலைக் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு உலகத் தமிழரின் உள்ளுணர்வில் அழகாக, ஆழமாக வேரூன்றிவிட்டது இந்தப் பெருஞ்சிலை.

வரலாற்றுச் சிறப்பு:

  • 2,000 ஆண்டு​களுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட உலக இலக்கியம்; பொது யுகத்தின் 2,000 ஆண்டுகள் முடிந்து அடுத்த 1,000 ஆண்டு​களில் உலகம் அடியெடுத்து​வைக்கும் மிக முக்கியமான ‘மைல்கல்’ நாள் (01.01.2000); மூன்று கடல்கள் சந்திக்கும் முன்வாசல் போன்ற நீர்முற்​றத்தில் திருவள்​ளுவர் சிலை. இடமும் நாளும் எப்படிப் பொருந்​திவந்​துள்ளன அந்த வரலாற்றுத் தருணத்​திற்காக. இப்போது 25 ஆண்டு​களாகி​விட்டன. வெள்ளி​விழாக் கோலம்!
  • திருவள்​ளுவருக்குக் குமரி​முனையில் சிலை எழுப்பும் திட்டத்தை, 1975 டிசம்பர் மாதம் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்​தார். இறுதியில் 2000ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள்தான் சிலையைத் திறக்க முடிந்தது. இடையில் 25 ஆண்டுகள், பல அரசியல் நிகழ்வுகள், மாற்றங்கள், அதனால் நேர்ந்த தாமதங்கள்.
  • பின்னோக்கிப் பார்க்கையில் இந்தத் தாமதம்​கூடப் பொருத்​த​மானது என்றே தோன்றுகிறது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை எழுப்பிய, குறளோ​வியம் படைத்த கருணாநிதி, தான் திட்ட​மிட்ட வரலாற்றுச் சிறப்பு​மிக்க பணியை அவரே முடித்துத் திறந்​து​வைத்தார் என்பது சிறப்பு அல்லவா! அதுவும் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான நாளில்.

குறளின் பெருமைகள்:

  • திருக்​குறள் - தமிழில் எழுதப்பட்ட உலக இலக்கியம். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்​நாடு’ என்ற பாரதியின் வரிகள் பொருத்தமான புகழ்​மகுடம். திருக்​குறள் ஒரு வெளிப்​படையான இலக்கியம், அதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை. விரிந்து பரந்த உலகப் பார்வையும் குறிப்​பிட்ட சமயச் சார்பின்​மையும் திருக்​குறளின் தலையாய பண்புகள். அதனால்தான் அடையாளங்களை எல்லாம் கடந்து நிற்கும் அற்புத​மாகத் திருக்​குறள் உலகத்தால் கொண்டாடப்​படு​கிறது.
  • திருக்​குறள் ஒரு மந்திரமோ தந்திரமோ அல்ல; உண்மையில் சொல்லப்​போனால் அது ஒரு சுதந்​திரம். ‘தெய்​வத்தான் ஆகாதெனினும் முயற்​சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று மனித முயற்​சியின் மகத்துவம் பேசிய மகாசாசனம். குமரி​முனையில் இந்தப் பேரறிவுச் சிலை திறப்பு​விழாவில் இந்தச் சிலையை உருவாக்கிய கணபதி ஸ்தபதி குறிப்​பிட்​டதைச் சுட்டிக்​காட்டி, “கடலும் மலையும் உள்ளவரை இந்தச் சிலை இருக்​கும்” என்று கருணாநிதி பெருமிதத்​துடன் பேசினார். அதற்குப் பின் 2004ஆம் ஆண்டு நேர்ந்த ஆழிப்​பேரலையின் சீற்றத்​தையும் எதிர்​கொண்டு திருவள்​ளுவர் சிலை இந்தியத் துணைக்​கண்​டத்தின் தென்கோடி இயற்கைச் சூழலில் இயல்பாகப் பொருந்தி அதன் ஓர் அங்கம்போல் ஆகிவிட்டது.

மக்களின் குரல்:

  • இந்தச் சிலையின் கட்டமைப்​புக்குப் பின்னால் திருக்​குறளின் அமைப்பு சார்ந்த ஒரு திட்ட​மிடல் உள்ளது என்பதை உணரும்போது வியப்பாக இருக்​கிறது. சிலையின் அறபீடம் 38 அடி- ஏனெனில், திருக்​குறளின் அறத்துப்​பாலில் 38 அதிகாரங்கள்; திருவள்​ளுவரின் முழு உருவச்சிலை 95 அடி, ஏனெனில் பொருட்பால் (70), இன்பத்​துப்பால் (25) இரண்டும் சேர்த்து 95 அதிகாரங்கள்.
  • அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலின் குறியீடாக 30 அடி உயரம் கொண்ட இயற்கையான பாறை. அதன் மீது அறம் என்ற பீடத்தில் நிற்கும் திருவள்​ளுவர். திருக்​குறளின் அடிப்படை திசை அறம்தான். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்பதே திருக்​குறள் முன்வைக்கும் தெளிவு.
  • திருக்​குறள் நமது சமகாலத்தில் கொண்டாடப்​படு​வதுபோல ஆட்சி அதிகார அமைப்பு​களால் ஒருபோதும் கொண்டாடப்​பட்​டிருக்க​வில்லை. இத்தகைய முன்னெடுப்பு மக்களாட்​சியில் மட்டும்தான் சாத்தியம். திருக்​குறளைத் தனது தலையில் தூக்கி​வைத்துக் கொண்டாடிய ஒரு பேரரசனின் பெயரை நம்மால் நினைவுகூர முடியுமா? ஏனெனில், திருக்​குறள் அடிப்​படையில் குடிமக்​களின் குரலாகவே ஒலிக்​கிறது.
  • அதனால்​தான், ‘இரந்தும் உயிர்​வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றி​யான்’ என்று பகிர்தல் அறம் பற்றி அவ்வளவு உறுதியான குரலில் உரத்துப் பேச முடிகிறது; ‘பகுத்​துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற சொல்லாடல் பகிர்ந்​து​கொள்​ளுதல் அறத்தின் அடிநாதம். ‘பிறப்​பொக்கும் எல்லா உயிர்க்​கும்’ என்பது சமத்துவக் குரல். கேடில் விழுச்​செல்வம் கல்வி மட்டும்தான் என்ற புரிதல்தான் கல்விப் பரவலாக்கம் என்கிற இலக்கில் நம்மை வழிநடத்தும் தெளிவு.

வாசல்​தோறும் வள்ளுவம்:

  • அச்சுக்​கலையின் வரவுக்குப் பின்னால், அதிலும் குறிப்பாக மக்களாட்சி என்ற மாண்பு நமது சமுதா​யத்தில் மலர்ந்​ததற்குப் பின்னால் திருக்​குறள் மக்களைச் சென்றுசேர்ந்​திருக்​கிறது. பேருந்​துகளில் திருக்​குறளை எழுதி​வைத்தது வெறும் குறியீடு அல்ல. ஆகச் சிறந்த மக்கள் இலக்கி​யத்தை மக்களின் அருகே கொண்டு​செல்லும் திட்ட​மிட்​டப்பட்ட செயல். பாடத்​திட்​டத்தில் திருக்​குறள். பேருந்து, ஆட்டோ நிறுத்​தங்​களில் திருக்​குறள், திருமண அழைப்​பிதழ்​களில் திருக்​குறள், இணையத்தில் ஏராளமான திருக்​குறள் செயலிகள். இப்படி வாசல்​தோறும் வள்ளுவம் தெளிக்​கப்​படு​கிறது என்ற உணர்வு உற்சாகமளிக்​கிறது.
  • இதற்கிடை​யில், அடையாளங்​களைக் கடந்த திருவள்​ளுவர் மீது ‘புற அடையாளங்களை’ இட்டுக்​கட்டி நிரப்பி, கையகப்​படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று​வரு​கின்றன. ஆனாலும் இது புதிதும் அல்ல. மக்கள் ‘அய்யன்’ என்று அன்புடன் அணுக்கமாக அழைக்கும் திருவள்​ளுவரின் இயற்பெயர் ‘மாதானுபங்கி’ என்று கட்டுக்​கதைகளைக் கட்டவிழ்த்து​விட்ட காலத்​திலிருந்தே இந்த மடைமாற்று முயற்சிகள் தொடங்கி​விட்டன.

பொதுமுறை:

  • ‘தமிழ் வேதமாகிய திருக்​குறள்’ என்ற கருத்​தாக்​கத்தின் அடிப்​படை​யில்தான் திருக்​குறளை ‘பொதுமறை’ என்று அழைக்கும் மரபு தொடங்​கியது. வேதம் என்பது மறைபொருள். உலகப் பொதுமறை என்பதில் திருக்​குறள் ஒரு குறிப்​பிட்ட சமய வட்டத்​துக்குள் நின்று பேசவில்லை என்று உணர்த்த நாம் விரும்​பு​கிறோம். ஆனால், யதார்த்த உலகம் வேறு வகையில் இயங்குகிறது.
  • இங்கே மறையாக, மறைபொருளாக, மறைவாக இயங்கும் எதுவும் பொதுவாக இருப்​ப​தில்லை. உண்மை​யில், பொதுவாக இருக்கும் எதுவும் மறையாக, மறைவாக இருப்பது இல்லை. அதனால் திருக்​குறளைப் ‘பொதுமறை’ என்பதைவிட ‘பொது​முறை’ என்பதே பொருத்தம் என்றுகூடத் தோன்றுகிறது.
  • ‘முறை’ என்கிற சொல் குடும்பம், சுற்றம், உற்றார் உறவினர், ஒழுங்கு, சட்டம், வழக்கம், வாடிக்கை மரபு, இயல்பு, கட்டளை, நீதி போன்ற பொருள்​களில் சமூக அமைப்பில் உள்ள பல்வேறு படிநிலைகளையும் தழுவிய சொல்லாகத் தனிமனிதரில் தொடங்கி ஆட்சி வரை விரிவான, ஆழமான பொருட்​பரப்பைக் கொண்டது. திருக்​குறளில் ‘முறை’ என்ற சொல் 13 குறட்​பாக்​களில் பயன்படுத்​தப்​பட்​டுள்ளது. அரசாட்​சியின் ஆணிவேரான அடிப்​படையே அரசனின் ‘முறைசெய்து காப்பாற்றும்’ அறமும் திறனும்​தான்.
  • அடையாளங்​களுக்கு அப்பால் நின்று பேசுவது போன்ற மெய்யறிவும் விடுதலையும் வேறு எதுவும் இருக்​கிறதா? அது வள்ளுவன் தனக்குள் உணர்ந்த உலகப் பொறுப்பு. எல்லைகளற்றது வானம். அதனால்தான் அது அழகாக இருக்​கிறது. தமிழ்ச் சமூகத்தை வழிநடத்துவது திருக்​குறள் என்னும் திசைகாட்டும் கருவி​தான். திருக்​குறள் உண்மையில் திருவள்​ளுவர் என்கிற தனிமனிதரின் குரல் அல்ல; ஓர் உயர் நாகரி​கத்தின் ஒட்டுமொத்தத் தெளிவின் திரள்​.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories