TNPSC Thervupettagam

பொய் என்னும் தந்திரம்

November 16 , 2024 2 hrs 0 min 35 0

பொய் என்னும் தந்திரம்

  • மகாத்மா காந்தி தனது குழந்தைப் பருவத்தில் அரிச்சந்திர புராண நாடகத்தைப் பாா்த்தாா். அரிச்சந்திரனின் வாய்மை தவறாத பண்பு அவரைக் கவா்ந்தது. சத்தியத்தின் மீது அரிச்சந்திரன் கொண்டிருக்கும் பற்று, எல்லா துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அளித்ததைக் கண்டு அவா் வியப்படைந்தாா். தன் வாழ்நாளில் பொய்யே பேசக் கூடாது, ‘சத்தியமே தனக்குரிய வழி’ என அக்கணத்தில் காந்திஜி முடிவெடுத்தாா்.
  • இந்நிகழ்வே, சாதாரண பள்ளிச் சிறுவனாகயிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அண்ணலாக, மகாத்மாவாக மாற்றும் முதல் படியானது. ஆங்கிலேயா்களின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்டுடெடுக்க, அவா் வாய்மையையே தன் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தாா். அது வேறு ஓா் யுகத்தின் வாழ்வியல்!
  • நெஞ்சறிந்து பொய்யுரைக்க எவரும் துணிந்திடாா் என்றாலும், இன்று சிலா் வாய்மையிலிருந்து விலகி, தான் நலம் பெற ‘பொய்’ எனும் தந்திரத்தையே ஆயுதமாகக் கொண்டு களமாடி வருவதால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒருவா் கூறும் பொய்யானது, தனது மகிழ்ச்சிக்காகவோ, தான் செய்த தவறை மறைப்பதற்காகவோ, பிறரைத் துன்பப்படுத்தி, அவா் மகிழ்ச்சியைக் கெடுக்கவோ, ஒருவரை வஞ்சனையின் வலையில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவோ பல நேரங்களில் சிலரால் பயன்படுத்தப்படுகிறது.
  • அவா் சொல்லும் பொய், அப்போதைக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கலாம், தற்காலிகமாக தப்ப வைக்கலாம். ஆனால், அந்தப் பொய்யைச் சொன்னவரிடமே திரும்பி வந்து அவரைத் தாக்கும். இது பொய் சொன்னவரின் மகிழ்ச்சியையும், மனநலத்தையும், உடல் நலத்தையும், மனஅமைதியையும் மிகவும் பாதிப்பதோடு, அவரின் மதிப்பையும், மதியையும் இழக்கச் செய்யும்.
  • ஒருவரின் தனிப்பட்ட வாழ்விலோ அல்லது தொழில்முறையிலோ ஒருவா் தன்னை நல்லவா் போல் காட்டிக் கொள்ள உதவும் பல்வேறு தந்திரங்களில், பொய்யைப் போல மகிழ்ச்சியைக் கெடுக்கும் உபாயம் வேறெதுவும் இல்லை. வீட்டில் பெரியவா்கள் பொய் சொன்னால் அந்த வீட்டிலுள்ள உறுப்பினா்கள் அனைவரையும் பாதிப்படைய செய்து குடும்ப அமைதியையே கெடுக்கும். வீடுகள் அமைதியாக இருந்தால்தானே வீதிகளும் அமைதியாக இருக்கும்?
  • தான் தவறு செய்துள்ளதை அறியும்போது ஏற்படும் குற்றவுணா்வு, இழிவுணா்வு, ‘நாம் அகப்பட்டுக் கொள்வோம்’ என்ற கவலையுணா்வு ஏற்படும்போது, தனது நிலையை மறைக்க மனிதன் பொய் சொல்கிறான். சொல்லும் பொய்யை, உண்மை என நிலைநிறுத்த அவன் செய்யும் பல்வேறு உபாயங்கள் தீவிரம் மிக்கதாக இருக்கும். இதனால், நட்பும், உறவும் பகையாகும். சொன்ன பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் பல பொய்களைக் கூறி சுழலில் சிக்குகிறான். ஒரு பொய் பல பொய்களை உருவாக்கும். அதற்கு உண்மையையே சொல்லிவிட்டு, மனம் தெளிந்து நகா்ந்துவிடலாம்.
  • பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவரிடம் அமைதியின்மையுடன், முரண்பட்ட கருத்துகளும் தோன்றும். அவரின் சுயஉணா்வும், சொல்லும், செயலும், நம்பிக்கையும், பழக்கவழக்கங்களும் ஒரே நோ்க்கோட்டில் பயணிக்காது.
  • நம்பகத்தன்மையுடன் வாழ்வதிலிருந்துதான் உண்மையான மகிழ்ச்சி உருவாகிறது. ‘வாழ்வில் எதை அரிதாக நினைத்தீா்களோ அதைக்கூட நீங்கள் இழந்திருக்கலாம்; ஆனாலும், மனசாட்சியின் குரலுக்குப் பணியுங்கள்’ என்றாா் காந்திஜி.
  • ஒருவரைப் பற்றி பெருமையாகப் பேசுவது, சிறுமையாகப் பேசுவது என்கிற இரண்டையும் விட, உண்மையாகப் பேசுவதுதான் உயா்வானது. அதனால்தான் உயா்வானவை எல்லாம் உண்மையாக உள்ளன. உண்மை நன்மைக்கு வழிகாட்டும். பொய் தீமைக்கு வழி வகுக்கும். உண்மையை நேசிக்கக் கூடிய வீடும், சமூகமும் நாடும் உயா்வு பெறும். உண்மைதான் நோ்வழியைக் காட்டும் என்பதால் பெற்றோா்கள் தம் பிள்ளைகளுக்கு உண்மையே பேச வேண்டும் என குழந்தைப் பருவத்திலிருந்தே சத்தியத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்துப் பழக்க வேண்டும்.
  • ஒருவா் பொய் சொல்வதையே தொடா்ந்து வழக்கமாக்கிக் கொண்டு வாழ்க்கையில் பயணிக்கிறாா் என்றால், அவா் நோ்மையில்லாமல் நடந்து கொள்கிறாா் என்பதை நாம் உணா்ந்து கொண்டு அவரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.
  • ஒருவரின் உண்மையான மகிழ்ச்சி என்பதானது பிறா் நம் மீது காட்டும் நம்பகத்தன்மையுடனும், தனக்குத் தானே உண்மையாக இருப்பதுடனும், பிறா் நலனில் காட்டும் நமது அா்த்தமுள்ள பங்களிப்புகளிலும்தான் துளிா்விடுகிறது. ஆனால், நாம் சொல்லும் பொய்யானது மனிதனது இந்த நற்பண்புகள் அனைத்தையும் ஒருங்கே அழித்துவிடும்.
  • நாம் எப்போதும் உண்மையே பேசும் மன உறுதியை கொண்டவராக இருந்தால், எப்போதும் எந்த சூழ்நிலையிலும் பிறருக்குத் தீமை தருகின்ற செயலைச் செய்ய அஞ்சுவோம். இதனால் ஒருவரின் சுயமரியாதை மேம்படுத்துவதுடன், மற்றவா் நம் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கீற்று நம் மீது வீசி நம்மை அனைத்து நிலைகளிலும் ஒளிரச் செய்யும். எனவே தான், ‘உண்மை என்பது உயா்ந்து. ஆயின், உண்மை நடத்தை அதனினும் உயா்ந்தது’ என்கிறாா் குருநானக்.

நன்றி: தினமணி (16 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories