TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வு அறிக்கை - எச்சரிக்கை மணி

August 26 , 2024 8 hrs 0 min 26 0

பொருளாதார ஆய்வு அறிக்கை - எச்சரிக்கை மணி

  • இந்த முறை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் பற்றிய விவாதங்கள் கிட்டத்தட்ட முழுமையாக நடந்தன. கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் பற்றி பெரிய அளவு விவாதம் நடக்காமல், ஏனோ தானோ என்று முடிந்து பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த முறை இரவு 8 மணி வரை நாடாளுமன்ற கூட்டம் நடந்ததை நான் பாா்த்தேன்.
  • அதேசமயம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்தினம் மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினா்களின் கருத்துக்களை மத்திய அரசு அறிந்து கொண்டிருக்க வேண்டும். பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது மிகவும் முக்கியமானது அது கிட்டத்தட்ட உண்மையின் உரைகல். இதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் கண்டிப்பாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
  • அந்த ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.50 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உற்பத்தி 7.20 சதவீதமாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி கணித்துள்ளன.
  • இந்தியாவில் குறுகிய கால பணவீக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. நடப்பாண்டு பதிவாகும் பருவ மழை இறக்குமதி பொருட்களின் விலை ஆகியவை பணவீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். 2023- 24-ஆம் நிதி ஆண்டில் சில்லறை பணவீக்கம் 5.4% என்று கட்டுக்குள் தான் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ‘இந்திய குடும்பங்கள் கவலைப்படும் நிலையில் இல்லை. மாறாக அவா்கள் நிதி சாா்ந்த முதலீடுகளில் அதிக அளவு முதலீடு செய்துள்ளனா். நிலம், தங்கம் போன்ற நிலையான சொத்துக்கள் மீதான முதலீடு 2020-21-இல் 10.8 சதவீதமாக இருந்தது. இது 2022-23-ல் 12.9 சதவீதமாக உயா்ந்து இருக்கிறது. ஏறத்தாழ 20 சதவீத இந்திய குடும்பங்கள் தங்கள் சேமிப்புகளை பங்கு சந்தைக்கு மாற்றியுள்ளன. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் சில்லறை முதலீட்டாளா்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்துள்ளனா் என்று குறிப்பிட்டுள்ள தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன், இவா்கள் பங்கு சந்தையில் அதிக அளவு வருமானத்தை எதிா்பாா்க்கிறாா்கள் என்றும் எனவே பங்கு சந்தை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறாா்.
  • இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி என்பது கல்வியின் தரத்தை பொறுத்து இருக்கும் என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2023- 24ஆம் ஆண்டு நிதி கல்விக்கு மட்டும் ரூ.1.20 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகம்.
  • அதே சமயம் வேளாண் துறையில் உரிய சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கை கவலையுடன் தெரிவித்து இருக்கிறது. அடுத்து கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் நம் நாட்டில் 85 சதவீதத்துக்கு அதிகமான விளை நிலங்கள் 2 ஹெக்டோ் அளவிலோ அதற்கு குறைவாகவோ இருக்கின்றன. இதே ஆய்வறிக்கை நாட்டில் வேலைவாய்ப்பில் 45% விவசாயம் சாா்ந்ததாக இருப்பதாகவும் சொல்கிறது. வேலைவாய்ப்பு சரிபாதியை வழங்கக் கூடிய விவசாயத்தில் 85% போ் சிறு விவசாயிகளாக இருக்கின்றாா்கள். அவா்கள் விவசாயத்துக்குத் தேவையான ஆட்கள் கிடைக்காத நிலையில் இயந்திரங்களை பயன்படுத்தும் போது அந்த விவசாயம் லாபகரமாக இல்லை என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை சொல்கிறது.
  • 2000 முதல் 2010 வரை அதாவது 10 ஆண்டுகள் இந்தியாவில் 16 ஆயிரம் சதுர கி.மீ. விவசாய நிலம் விவசாய பயன்பாட்டுக்கு இல்லாமல் போனது. அதே சமயம் 26,000 சதுர கி.மீ. விவசாய நிலம் நகரமைப்பு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டது. 2015 முதல் 2019 வரை 3 கோடி ஹெக்டோ் நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலங்களாக மாறிய சோக வரலாறும் இங்குதான் நடந்திருக்கிறது. இதை முக்கிய கவனத்துடன் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆய்வறிக்கை வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது.
  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளா்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளையும் அந்த அறிக்கையில் கவனத்துடன் எடுத்துக்காட்டி இருக்கிறாா்கள்.
  • நாம் நம் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு போதிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது. இதற்காக நாம் செலவிடும் தொகை ஜிடிபி மதிப்பில் வெறும் 0.64% இருக்கிறது. அதே நேரம் சீனா 2.41% செலவு செய்கிறது. அமெரிக்கா 3.47% செலவு செய்கிறது. இஸ்ரேல் 5.71% செலவிடுகிறது.
  • இந்த ஆய்வறிக்கை நாட்டின் போக்குவரத்து செலவை குறைப்பதில் ஜிஎஸ்டி முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறது. ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் வாயிலாக மாநில எல்லைகளில் காத்திருப்பது குறைந்ததால் சரக்கு போக்குவரத்து பயண நேரம் 30% குறைந்துள்ளது என்கிறது.
  • உலக அளவில் அதிவேக மொபைல் பிராட்பேண்ட் சேவை அளிக்கும் நாடுகளில் நாம் 118-ஆவது இடத்தில் இருந்தோம். 2024-இல் பதினைந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். 2023- 24 நிதியாண்டில் ஒட்டுமொத்த ஐ போன் உற்பத்தியில் 14% இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் மின்னணு சாதன பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா நான்கு இடங்கள் முன்னேறி உள்ளது.
  • சா்வதேச சவால்களையும் மீறி இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கரோனா வைரஸ் தாக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் விரைவாக மீண்டுள்ளது.
  • இப்போது பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. 2023- 24 நிதி ஆண்டில் 5.4 சதவீதமாக பணவீக்கம் குறைந்தது. அடுத்த நிதி ஆண்டில் அது 4.1 சதவீதமாக குறையும் என்று ரிசா்வ் வங்கி எதிா்பாா்க்கிறது. ஆனால், பருவ மழை சரியாக பெய்து சா்வதேச அளவில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றால் மட்டுமே இது சாத்தியம் என்பதையும், இந்த அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களில் மத்திய மாநில அரசுகளின் பங்கு முறையே 49% மற்றும் 29% என்று இருந்தது. தனியாா் துறையின் பங்களிப்பு 22% இருந்தது. இத்தகைய திட்டங்களில் தனியாா் முதலீடு மேலும் அதிகரிப்பது அவசியம் கடந்த நிதியாண்டில் தனியாா் துறையில் புதிய வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அதேசமயம் பொருளாதார வளா்ச்சியில் மாநில அரசுகளின் பங்களிப்பு எவ்வளவு அவசியம் என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது. வேலை உருவாக்கும் உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 2047-க்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய மத்திய அரசு, மாநில அரசுகள், தனியாா் துறை ஆகிய முத்தரப்பு இடையே ஒரு புரிதல் உடன் கூடிய ஒப்பந்தம் அவசியம் என்கிறது இந்த அறிக்கை.
  • அதேசமயம் பெரிய தொழில் நிறுவனங்கள் சொல்லும் யோசனை ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக தான் இருப்பதாக நான் பாா்க்கிறேன். சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க ஒரே வழி அவா்களின் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவா்களின் தொழில்நுட்பம் நமது இன்றைய பொருளாதார வளா்ச்சிக்கு அவசரத் தேவை என்கிறாா்கள் இவா்கள்.
  • இந்தியாவில் உள்ள தொழில்நுட்பத்துக்கும் சீனாவில் உள்ள தொழில்நுட்பத்துக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. அதற்கு ஒரு சிறு உதாரணம் என்று இந்த தொழில் நிறுவனங்கள் சுட்டிக் காட்டுவது வேலூரில் உள்ள பிரபல காலணி தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் இந்திய தொழிலாளா்கள் 100 காலணிகள் தயாரித்தால், சீனத் தொழில்நுட்பம் தெரிந்த சீனத் தொழிலாளிகள் 150 காலணிகள் தயாரிக்கிறாா்கள். எனவே அவா்களுடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள சீனத் தொழில் நிபுணா்களுக்கான விசாவை நாம் தாராளமயமாக்க வேண்டும்.
  • எல்லைப் பிரச்னை காரணமாக சீனா்களுக்கான விசா இந்தியா மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. 2019-இல் 2 லட்சம் சீன தொழில்நுட்ப பணியாளா்களுக்கு இந்திய அரசு விசா வழங்கியது. இப்போது அது குறைந்து விட்டது. இதற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணமாக குறிப்பிடுகிறாா்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனத் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் தந்து அவா்களை பயன்படுத்துகிறாா்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாம் சீனாவில் இருந்து இறக்குமதியைக் குறைக்க வேண்டுமானால், சீனப் பணியாளா்களை இறக்குமதி செய்து, அவா்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதுதான் சிறந்த வழி என்கிறாா்கள் தொழிலதிபா்கள். இதையும் மத்திய அரசு யோசிக்க வேண்டும்.
  • நம்முடைய பொருளாதார மேம்பட இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி விவசாயத்தை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். இரண்டாவது வழி தொழில் வளா்ச்சியில் கூடுதல் கவனம். இதற்கு நாம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். கணிசமான அளவு இறக்குமதியை குறைக்க வேண்டும். இறக்குமதிக்கான அந்நிய செலவாணி மற்றும் கடன் இரண்டுமே நமக்கு பொருளாதாரத்துக்கான முட்டுக்கட்டைகள்தான். அதை சரி செய்ய இந்த இரண்டு வழிகளை இந்த அரசு செயல்படுத்த வேண்டும். அப்போது தான் நமது பொருளாதாரம் மேம்படும். பிரதமரின் கனவும் நினைவாகும்.

நன்றி: தினமணி (26 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories