TNPSC Thervupettagam

பொருள் விநியோகத்தில் அதிகரித்து வரும் பகுதிநேர பணி வாய்ப்பு

February 24 , 2025 6 hrs 0 min 3 0

பொருள் விநியோகத்தில் அதிகரித்து வரும் பகுதிநேர பணி வாய்ப்பு

  • வேலை கலாச்சார கட்டமைப்புகளை மாற்றியமைப்பதில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளால் வேலை முறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் எதிர்பாராத வகையில் விசாலமடைந்து வருகின்றன.
  • மக்கள்தொகை, உழைக்கும் இளைஞர்களை அதிகம் கொண்ட நம்மை போன்ற நாடுகளுக்கு இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரிய அளவில் கைகொடுத்து உதவுகின்றன. செயலி வாயிலான பொருள் விநியோகத்தில் பகுதிநேர பணியில் ஈடுபடும் தற்காலிக ஊழியர்களுக்கு (GIG Workers) நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வரப்பிரசாதமாக மாறியுள்ளன.
  • அதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் தொழிலாளர்களுக்கான தளங்களின் எண்ணிக்கையில் 5 மடங்கு வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் தனிநபர் பாரமரிப்பு, சில்லறை வணிகம், போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் புதுமையான தீர்வுகளை டிஜிட்டல் தளங்கள் வழங்குகின்றன.
  • பல்வேறு திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு நம்பிக்கைக்குரிய வருமான வாய்ப்புகளை அளித்தருகின்றன. அத்துடன் வணிகங்களுக்கான பரந்த சந்தை அணுகலையும் அவை வழங்குகின்றன. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு, குறைந்த விலையில் இணைய சேவை கிடைப்பது போன்றவற்றால் பகுதி நேர ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, சோமாட்டோ, ஸெப்டோ போன்ற ஆன்லைன் பொருள் விநியோக நிறுவனங்களில்தான் இவர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். படித்துக் கொண்டிருக்கும் அல்லது படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள், குடும்ப சூழல் காரணமாக பகுதிநேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ இத்தகைய நிறுவனங்களின் விநியோக பணிகளில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
  • வசிக்கும் பகுதியிலேயே வேலை மற்றும் தங்களது நேர வசதிக்கேற்ப வேலை செய்யலாம் என்பதால் குடும்ப வறுமையைப் போக்கவும், சொந்த தேவைகளுக்காகவும் இளைஞர்கள் டெலிவரி பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெண்களுக்கு சலுகைகள்:

  • பெண்களுக்கும் இந்த மாதிரியான வேலைவாய்ப்பு அவர்களை சொந்த காலில் நிற்க வைக்கவும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உதவுகிறது. ரேபிடோ போன்ற பல்வேறு நிறுவனங்கள் அவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும அள்ளி வழங்குகின்றன, இதற்காக பிங்க் போன்ற பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி, 0% கமிஷன், சவாரிக்கு கூடுதல் கட்டணம், விரும்பிய வேலை நேரம், போனஸ் போன்ற சலுகைகளை வாரி வழங்குகின்றன.
  • இந்தியாவில் தற்போது பகுதிநேர தொழிலாளர்களின் எண்ணி்ககை 1 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 2020-21-ல் 77 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட தற்போது 30% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி தொடரும் பட்சத்தில் 2029-30-ல் இந்த எண்ணிக்கை 2.35 கோடியை தொடும் என்கிறது டீம்லீஸ் ஆய்வு நிறுவனம்.

பிரச்சினைகள்..

  • பகுதிநேர தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் தேவைக்கு ஏற்ப வருமானம் இப்போது அதிரிக்கவில்லை என்பதே இத்துறை சார்ந்த ஐஎப்ஏடி கூட்டமைப்பின் குற்றச்சாட்டு. ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற ஆன்லைன் டெலிவரி பணிகளில் முன்பு அதிக வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், இப்போது கமிஷன்களை எவ்வாறு கணக்கிடுகின்றனர் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை.
  • முன்பு ஒரு ஆர்டருக்கு ரூ.35 கிடைத்த நிலையில் தற்போது அது ரூ.10-15 ஆக குறைந்துள்ளது. அதேபோன்று முன்பு 4 கிலோமீட்டருக்குள் இருந்த டெலிவரி எல்லை இப்போது 8-10 கிலோமீட்டராக விரிவடைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, தங்களது வருவாயில் இருந்து விவரிக்கப்படாத, தன்னிச்சையான பிடித்தங்களை அவ்வப்போது டெலிவரி தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்பதுதான் தற்போதைய புகார். இந்நிலையில், ஆப் அல்கரிதம்ஸ், கமிஷன் விகிதங்கள் மாற்றம், ஆன்லைன் கட்டணங்களில் விலக்குகள் போன்றவையும் டெலிவரி பணியாளர்களின் வருவாயை மேலும் குறைப்பதாக உள்ளன.
  • எனவே, கணிசமான வருவாயைஈட்ட அதிக டெலிவரிகளை எடுத்து நீண்ட நேரம் பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு பணியாளர்கள் தள்ளப்படுகின்றனர் என்பது ஒருதரப்பினரின் வாதம். இந்தியாவில் டெலிவரி போன்ற தற்காலிக பணிகளில் உள்ள பணியாளர்களில் 97.6% பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
  • அதில் முக்கால்வாசி பேர் அதாவது 77.6 சதவீதம் ஆண்டுக்கு ரூ.2,5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாகவே சம்பளம் பெறுகிறார்கள். 20 சதவீதம் பேர் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். எஞ்சியுள்ள 2.4 சதவீத பணியாளர்கள் மட்டுமே ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். அதேநேரம் இது அவர்கள் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை பொறுத்து மாறுபடும். எனினும், இது ஐ.டி துறையில் புதிதாக நுழையும் பணியாளர்களின் சராசரி ஆண்டு சம்பளமான ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சத்தைக் காட்டிலும் அதிகம் என்கிறது ஆய்வுகள்.
  • பகுதிநேர தொழிலாளர்களில் 85% பேர் 8 மணி நேரத்தை டெலிவரி பணிகளுக்காக செலவிடும் நிலையில், 21% பேர் 12 மணி நேரத்துக்கும் மேலாக கடுமையாக உழைக்கின்றனர். இருப்பினும் டெலிவரி பணிகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருவதற்கு அதில் உள்ள வேலைநேர நெகிழ்வுத்தன்மைதான் முக்கிய காரணம். நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும் டிஜிட்டல் செயலி மூலமான டெலிவரி துறைக்கு முக்கிய பங்கு இருப்பதை உணர்ந்தே பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மின்னணு அட்டை:

  • அதன்படி, ஒரு கோடி தொழிலாளர்களுக்கு மின்னணு அடையாள அட்டைகளுடன் கூடிய காப்பீடு வழங்கும் அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். பட்ஜெட்டில் டெலிவரி பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதனை செயல்படுத்துவது சவாலான ஒன்றாகவே தோன்றுகிறது.
  • இதற்கு, கட்டமைப்பு ரீதியில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். அடிப்படை கணக்கீடுகள் இல்லாமல், திட்டங்களை நடைமுறைப்படுத்தும்பட்சத்தில் பல தொழிலாளர்கள் இப்பயன்களை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை பொறுப்புணர்வுடன் செயல்படுத்த வேண்டும் என்பதே இத்துறையினரின் எதிர்பார்ப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories