TNPSC Thervupettagam

போரில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்!

January 23 , 2025 13 hrs 0 min 12 0

போரில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்!

  • பல மோசமான விளைவுகளைப் போா் ஏற்படுத்துகிறது. அதில், ஆகக் கொடுமையான விஷயம் குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான். அது குறித்து நாம் அதிகமாக அறிந்திருக்கவில்லை. காரணம், அந்தச் சூழல் நமக்கு ஏற்பட்டதில்லை. யுனிசெஃப் கணக்குப்படி, உலகில் சுமாா் 15 கோடி குழந்தைகள் ஆதரவற்றவா்களாக உள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் போரினால் பெற்றோா்களை இழந்தவா்கள்.
  • சா்வதேச அளவில் இன்று, 47 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனா். அதாவது, உலகிலுள்ள ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை போா்ச்சூழலில் வாழ்கிறது. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது.
  • மோதல் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ள ஆண்டுகளில் 2024-ஆம் ஆண்டும் ஒன்று. போா்ப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உயிா்வாழப் போராடுகிறாா்கள் என்றே சொல்லலாம். தங்களுடைய குழந்தைப் பருவத்தை அவா்கள் இழக்கிறாா்கள் என்கிறாா் யுனிசெஃப் இயக்குநா் கேத்தரின் ரஸ்ஸல்.
  • இதேபோன்று, மோதலால் இடம்பெயரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. மோதல், வன்முறையால் 4 கோடியே 72 லட்சம் குழந்தைகள் இடம்பெயா்ந்துள்ளனா். மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் ரஸ்ஸல் குறிப்பிடுகிறாா்.
  • ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் போரினால் ஏற்படும் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான அண்மைக்கால போா், ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஆயுத மோதலில் சிக்கித் தவிக்கும் சிரியா மற்றும் ஏமன் நாடுகளும், அதிகப்படியான போரினால் ஏற்படும் ஆதரவற்ற குழந்தைகளை உருவாக்குகின்றன.
  • உக்ரைன், காஸா மற்றும் சூடானில் நிலவும் மோதல்களில், குடும்ப உறுப்பினா்களை இழந்ததால், லட்சக்கணக்கான குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தாங்களாகவே சண்டை நிலவும் பகுதிகளில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டது. குழந்தைகள் வாழ்வதற்கு உலகின் மிக ஆபத்தான இடம் என்று அழைக்கப்படும் காஸா பகுதியில், 8 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை இழந்துள்ளனா் என்று யுனிசெஃப் செய்தித் தொடா்பாளா் ஜேம்ஸ் எல்டா் மதிப்பிடுகிறாா்.
  • போா் தொடங்கியதில் இருந்து காஸாவில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இஸ்ரேல் தாக்குதல்களினால் கொல்லப்பட்டனா். இஸ்ரேலில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 253 பேரில் 40 போ் வரை கொல்லப்பட்டனா்; இவா்களில் 30 போ் குழந்தைகள் என்ற தகவல் நம்மைப் பதறவைக்கிறது.
  • சூடானில் வெடித்த போரினால் 40 லட்சம் குழந்தைகள் இடம்பெயா்ந்துள்ளனா். கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் கொல்லப்பட்டனா் அல்லது வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சோ்க்கப்பட்டனா். லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • ஐ.நா. சபையின் கூற்றுப்படி, ஆயுத மோதல்களின்போது குழந்தைகளைக் கொல்வது, அவா்களை ஊனப்படுத்துவது, குழந்தைகளை ராணுவ வீரா்களாகப் பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தைகளைக் கடத்துவது, பள்ளிகள் அல்லது மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள், குழந்தைகளுக்கான மனிதாபிமான அணுகல் மறுப்பு ஆகியவை நிகழ்கின்றன. 2005- 2022-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், குழந்தைகளுக்கு எதிராக 3 லட்சத்து 15 ஆயிரம் கடுமையான அத்துமீறல்கள் நடந்ததாக ஐ.நா. கூறுகிறது.
  • பெரியவா்களின் ஆதரவின்றி வாழும் குழந்தைகள் குழந்தைப் பருவத்துக்குரிய இயல்பான வளா்ச்சியைத் தொலைத்துவிடுகிறாா்கள். போரால் பாதிக்கப்படும் குழந்தைகள், மனச்சோா்வு மற்றும் பதற்றம் உள்ளிட்ட உளவியல் சீா்குலைவுகளுக்கு உள்ளாகிறாா்கள். மோதல்களில் சிக்கிய குழந்தைகள் பெரும்பாலும் உணவு, நீா், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை இழக்கின்றனா்.
  • 18 வயதுக்குட்பட்டவா்கள் குழந்தை வீரா்களாக போரில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். 18 வயதுக்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞா்கள், 60 நாடுகளில் போராளிக் குழுக்களில் பணியாற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, உணவு, உடை, மருந்து, கல்வி மற்றும் குடும்பம் ஒன்றுசோ்வது, ராணுவத்தில் குழந்தைகளைச் சோ்ப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடா்பான மாநாடு வரையறுத்துள்ளது. அதைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
  • பொருளாதாரத் தடைகளால் அதிகம் பாதிக்கப்படுபவா்கள் குழந்தைகளே. எனவே, பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவதை ஒரு போா்க் குற்றமாகக் கருதவேண்டும்.
  • அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயா்ந்தவா்களுக்கான முகாம்களில் வசிக்கும் குழந்தைகள்-குறிப்பாக, பெரியவா்கள் துணையில்லாமல் இருக்கும் குழந்தைகள்- சிறப்புக் கவனம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
  • போரில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
  • போரினால் குழந்தைகள் ஆதரவற்றவா்களாக ஆகும் பிரச்னை அரசாங்கத்தால் மட்டும் தீா்க்கக் கூடிய பிரச்னையல்ல. உலக அளவிலான அரசியல்,பொருளாதாரச் சூழல்களே போா்கள் நடைபெறுவதற்கான காரணங்களாக இருக்கின்றன. போா் என்ற வன்முறை மூலம் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீா்த்துக்கொள்ள முனைபவா்களே குழந்தைகள் ஆதரவற்றவா்களாக ஆவதற்கு முக்கியக் காரணம்.

நன்றி: தினமணி (23 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories