போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அமைதியைக் கொண்டு வரட்டும்!
- லெபனானில் இருந்து இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது, மத்தியக் கிழக்கில் நீடித்துவரும் பதற்றத்தின் ஒரு பகுதியைத் தற்காலிகமாகக் குறைத்திருக்கிறது. அதேவேளையில், இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு இலக்காகிவரும் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவது எப்போது என்னும் கேள்வியும் நீடிக்கிறது.
- 2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, கடந்த 14 மாதங்களாக காஸா மீது கடும் தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 44,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஹமாஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகின்ற - லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- இந்தச் சூழலில், அமெரிக்கா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளின் முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹிஸ்புல்லா அமைப்பினர் லிட்டானி ஆற்றின் வடக்குக் கரைப் பகுதிக்குச் சென்றுவிட வேண்டும் என்றும், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.
- லெபனானின் ராணுவப் படைகள் மட்டுமே அந்நாட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும். வெறும் 60 நாள்களுக்கு மட்டுமே இந்தப் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இஸ்ரேலின் தாக்குதல்களில் லெபனானைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பேஜர்களை வெடிக்கச் செய்ததன் மூலம் பலரை இஸ்ரேல் கொன்றது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
- ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல் எனச் சொல்லப்பட்டாலும் இதில் அப்பாவிகள் பலர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இப்படியான சூழலில், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், இருதரப்பும் ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுவதாக வெளியாகும் செய்திகள் ஏமாற்றம் அளிக்கின்றன.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் படை பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியிருக்கிறது. அதேபோல், லெபனானின் தெற்குப் பகுதியில் வாகனங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் வந்திருப்பதாக இஸ்ரேலும் குற்றம்சாட்டுகிறது. இதற்கிடையே, இந்த ஒப்பந்தத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு தவிர்க்கப்படும் என்கிற நம்பிக்கையும் இந்த மீறல்களால் சற்றே ஆட்டம் கண்டிருக்கிறது. நவம்பர் 28 நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலையில் 1% உயர்வு ஏற்பட்டிருப்பதாக ‘யூரோ நியூஸ்’ ஊடகம் தெரிவிக்கிறது.
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1,701ஆவது தீர்மானத்தின்படி, 2006ஆம் ஆண்டிலும், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் ஒரு சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏறத்தாழ இதே நிபந்தனைகள் அப்போதும் விதிக்கப்பட்டன. ஆனால், ஒருகட்டத்தில் இரு தரப்பும் ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதால், அந்த ஒப்பந்தம் வலுவிழந்தது. அதே நிலை மீண்டும் ஏற்படுவது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
- இன்னொருபுறம், போர் பாதிப்புகளுடன் கடும் குளிர்காலத்தையும் எதிர்கொண்டிருக்கும் காஸா மக்கள், தங்கள் துயரம் எப்போது முடிவுக்கு வரும் எனத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். வடக்கு காஸாவில் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது இஸ்ரேல். இதற்கிடையே, தான் அதிபராகப் பதவியேற்கவிருக்கும் நாளுக்கு முன்பாக, இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹமாஸுக்கு அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
- இந்தச் சூழலில், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் முறையாகப் பின்பற்றப்படுவதையும், காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வழிவகை செய்வதையும் சர்வதேசச் சமூகம் தனது தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். பெரும் இழப்புகளைக் கொண்டுவரும் போர்களை மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது!
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 12 – 2024)