TNPSC Thervupettagam

போர்களுக்கு சர்வதேசச் சமூகம் முடிவுகட்ட வேண்டும்!

January 22 , 2025 6 hrs 0 min 18 0

போர்களுக்கு சர்வதேசச் சமூகம் முடிவுகட்ட வேண்டும்!

  • 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவந்த காஸா போர், ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பது பெரும் நிம்மதி அளிக்கிறது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகளின் முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கையெழுத்தாகியிருக்கும் இந்த அமைதி ஒப்பந்தத்தின்படி, ஆறு வாரங்களுக்குத் தாக்குதல்கள் நடத்தப்படாது.
  • அதேவேளையில், தற்காலிகமான இந்த ஒப்பந்தம் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க, சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று இஸ்ரேலியப் பெண்களும், 90 பாலஸ்தீனர்களும் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • ஹமாஸ் பிடியில் இருக்கும் 90க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய – வெளிநாட்டுப் பணயக் கைதிகளும், இஸ்ரேலியச் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் அடுத்தடுத்த கட்டங்களில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்காலிகமான இந்த ஏற்பாடு எங்கேனும் பிசகினால் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்படலாம். இந்த ஒப்பந்தத்தைக் கண்டித்து ஆளும் கூட்டணியிலிருந்து தீவிர வலதுசாரிக் கட்சியான ‘ஜூவிஸ் பவர்’ வெளியேறியிருக்கிறது; அக்கட்சியின் இடமார் பென் குவிர் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இஸ்ரேலுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படுவதை எதிர்ப்பதாக அக்கட்சியினர் கூறியிருப்பது, இந்த விவகாரத்தில் இருக்கும் சிக்கலை உணர்த்துகிறது.
  • அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைக் கொண்டாடும் வகையில் ஹமாஸ் அமைப்பினர், துப்பாக்கிகள் சகிதம் தங்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் எதிர்மறை விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், 2023 அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்தான் இந்தப் பேரழிவுக்கு வழிவகுத்தது.
  • காஸா போரில், இதுவரை 46,900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்திருக்கின்றனர். காஸாவில் உள்ள 60% கட்டிடங்களும், 65% சாலைகளும் சேதமடைந்திருப்பதாக ஐநா அவை தெரிவித்திருக்கிறது. நொறுங்கிக் கிடக்கும் கட்டிடங்களுக்கு மத்தியில்தான் வாழ்வை மீண்டும் தொடங்க வேண்டும் என்கிற நிலையில் காஸா, ரஃபா நகர மக்கள் இருக்கிறார்கள்.
  • ஹமாஸ் அமைப்பை அழித்து ஒழித்துவிடுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சூளுரைத்துத்தான் இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடங்கினார். ஆனால், எந்த ஒரு பயங்கரவாத அமைப்பையும் அப்படி அழித்துவிட முடியாது என்பதுதான் வரலாறு. அமைப்பின் தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டாலும் புதியவர்கள் முளைப்பதும், கிளை அமைப்புகள் உருவாவதும் தொடரவே செய்கின்றன.
  • டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியதில் ஜோ பைடன் தலைமையிலான அரசைவிடவும், டிரம்ப்தான் முதன்மைக் காரணியாக முன்வைக்கப்படுகிறார்.
  • அதேவேளையில், ஹமாஸ் அமைப்பு மீண்டும் தாக்குதலில் இறங்கினால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போர் தொடர்ந்திருந்தாலும் டிரம்ப் அரசு இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் என்று நெதன்யாஹு கூறியிருப்பதும் கவனத்துக்குரியது. இந்தச் சூழலில், காஸா பகுதியில் இருக்கும் இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேற்றப்படுவதும், ஒட்டுமொத்த பாலஸ்தீனத்துக்கான ஒருங்கிணைந்த அரசு அமைவதும், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இஸ்ரேல் ஏற்பதும் அவசியம்.
  • இன்னொரு புறம், தான் அதிபர் பதவியில் இருந்திருந்தால் உக்ரைன் போரே தொடங்கியிருக்காது என்று பேசியிருக்கும் டிரம்ப், அடுத்ததாக உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் பேசப்படுகிறது. மனித நாகரிகம் உச்சத்தை அடைந்திருக்கும் காலக்கட்டத்தில், போர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
  • அரசுகள், தலைவர்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையே மூளும் போர்களால் உண்மையாகவே பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். இனியும் போர்கள் நடக்காத சூழலை உருவாக்க சர்வதேசச் சமூகம் தலைப்பட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories