மக்களின் தேவையறிந்து பேருந்துகள் இயங்க வேண்டாமா?
- சென்னைக்கு 1,500 மின்சார பேருந்துகள் வாங்கப் போவதாகவும், அதில் 500 பேருந்துகள் அடுத்த ஆண்டு முதல் இயங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், 399 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப் போவதாகவும், ஏற்கெனவே நிறுத்தப்பட்ட 617 பேருந்து நிறுத்தங்களில் சேவை மீண்டும் தொடரும் என்றும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சென்னையில் 1947-ம் ஆண்டு 30 பேருந்துகளுடன் தொடங்கிய பேருந்து சேவை, இன்று 3,586 பேருந்துகளுடன் 3,929 சதுர கி.மீட்டர் சுற்றளவில் இயங்கிவருகிறது. நாளொன்றுக்கு 32 லட்சம் பயணிகள் மாநகர பேருந்துகளில் பயணிக்கின்றனர். சென்னை மாநகர பேருந்தின் சேவையை குறைத்து மதிப்பிட முடியாது.
- அதேநேரம், காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப பேருந்து சேவை அமைந்துள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லமுடியும். சென்னை மாநகரின் எல்லை 1,189 சதுர கி.மீட்டரில் இருந்து 5,904 சதுர கி.மீட்டராக விரிவடைந்துவிட்டது. அதற்கேற்ப மாநகர பேருந்து சேவை அமையவில்லை. சென்னையின் உட்புற பகுதிகளைவிட விரிவடைந்த பகுதிகளில்தான் அதிக பேருந்து சேவை பொதுமக்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பேருந்து சேவை நகரின் உட்புற பகுதிகளிலேயே அமைந்துள்ளன. மேலும், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு மட்டுமே அதிக நடைகள் இயக்கப்படுகின்றன. பணிமனைகள் உள்ள இடங்களுக்கு பேருந்துகளை இயக்குவது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வசதியாக இருக்கலாம்; பயணிகளுக்கல்ல. பணியாளர்கள் தங்கள் வசதியை முன்னிறுத்தாமல் பொதுமக்களின் வசதியை முன்னிறுத்தி பேருந்துகளை இயக்க வேண்டும்.
- பொதுமக்களுக்கு தேவைப்படாத பகுதிகளுக்கு அதிக நடைகளும், தேவைப்படும் பகுதிகளுக்கு குறைந்த நடைகளும் இயக்கப்படுவதே தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது. இதன்விளைவு, நான்கைந்து பயணிகளுடன் ஏராளமான பேருந்துகள் இயங்குவது ஒருபுறமும், தொங்கிக் கொண்டு செல்லுமளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டத்துடன் சொற்ப எண்ணிக்கையில் பேருந்துகள் மறுபுறம் இயங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அரசுப் பேருந்துகளால் நாளொன்றுக்கு ரூ.14 கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விரிவடைந்த சென்னையின் எந்தெந்த பகுதிகளுக்கு பேருந்து வசதி தேவை என்பதைகண்டறிய பொதுமக்களிடம் ஆய்வு நடத்தி, அதன்மூலமே பேருந்து வழித்தடங்களும், நடைகளின் எண்ணிக்கையும் முடிவாக வேண்டும்.
- முன்பெல்லாம் சென்னை நகரில் எல்ஐசி, வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, அண்ணா சதுக்கம், அடையாறு, தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இருந்து நகரின் எந்தப்பகுதிக்கும் செல்ல பேருந்துகள் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், அதுபோன்ற பொது பேருந்து நிறுத்தங்கள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்டு விட்டன. இதுபோன்று மக்களுக்கு எந்தப் பகுதியில் நிறுத்தம் தேவை என்பதையும் ஆய்வு மேற்கொண்டு அதற்கேற்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உண்மையான சேவை கிடைக்கும்; போக்குவரத்து கழகத்தின் நஷ்டமும் குறையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 11 – 2024)