மக்கள் மனம் கவர்ந்த ‘மனமோகனம்’
- பொதுமக்களுக்காகவும் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் பொதுவெளியில் நிகழ்த்தப்படும் ‘தெருக்கூத்’திலிருந்து பெட்டி அரங்க முறைக்குத் தமிழ் நாடகம் அடியெடுத்து வைக்க, மராத்தி, பார்சி நாடகக் குழுக்களிடம் தாக்கம் பெற்ற தஞ்சை டி.ஆர்.கோவிந்தசாமி ராவ் முக்கியக் காரணமாக அமைந்தார்.
- அவர், தனது நவீனப் பெட்டி அரங்க முறைக்கு, தமிழ்த் தெருக்கூத்து வடிவத்திலிருந்து சில அம்சங்களைச் சுவீகரித்துக்கொண்டவர். தெருக்கூத்து என்பது பெரும்பாலும் தரையில் ஆடப்படும் நிகழ்த்துக் கலை. தெருக்கூத்து ஆடப்படும் மூன்று பக்கமும் திறந்த வெளியாகவும் ஒரு பக்கம் மட்டும் வாத்தியக் குழுவினர் அமர்ந்து வாசிக்கும் இடமாகவும் இருக்கும்.
- கூத்துக் கலைஞர்கள் அடர்த்தியான ஒப்பனையின் மூலம் கதாபாத்திரங்களின் தோற்றத்தை முகத்திலும் ஆடை, அணிகலன்கள் வாயிலாகவும் விளங்கச் செய்வார்கள். எடைக் குறைவாக, தக்கை போல் இருக்க வேண்டும் என்பதற்காக, தோள்களில் கல்யாண முருங்கை மரத்தினாலான புஜக் கட்டைகள், அதே மரத்திலான கிரீடங்கள், அணிகலன்களை அணிந்து கொண்டு (‘கட்டைக் கூத்து’ என்கிற பெயர் விளங்க இதுவே காரணம்), உச்ச ஸ்தாயியில் குரலெடுத்துப் பாடியும் பேசியும் ஆடியும் அதிகாலை வரையில் நடிப்பார்கள். கோயில் திரு விழாவை முன்னிட்டு கடவுளுக்குப் படைத்த கள்ளும் பல வேளைகளில் வேப்பம் பட்டைச் சாராயமும் கூத்துக் கலைஞர்கள் சோர்வுறாமல் நடிக்க வழங்கப்பட்டது.
தெருக்கூத்தின் நெகிழ்வுத்தன்மை:
- தெருக்கூத்தில் முதன்மைக் கதா பாத்திரம் வந்து முகம் காட்டுவதற்கு முன்பு, ‘பா’ வடிவில் முன் திரை போல் வெள்ளை வேட்டியை மறைத்தபடி பக்கவாத்திய உதவியாளர்கள் வந்து பிடித்துக்கொள்வார்கள். வேடம் தரித்த முதன்மைக் கதாபாத்திர நடிகர் திரை விருத்தம் பாடியபடி, அந்த ‘பா’ வேட்டி அரணுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டு கை, கால்களை அசைப்பது நிழலில் பொம்மலாட்டம் நடப்பதுபோல் தெரியத் தொடங்கியதும் மக்கள் மத்தியில் ஆர்வம் பெருக்கெடுக்கும்.
- எப்போது வேட்டியை விலக்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படும். இப்போது நடிகருடன் பின்பாட்டுக்காரர்களும் பெருங்குரலெடுத்து கோரசாகப் பாட, இந்தப் பாட்டுச் சத்தம் காற்றைக் கிழித்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கும் மக்களின் தெருக்கள் வரை எட்டும். அவர்கள் அடித்துப்பிடித்து பொதுத் திடல் நோக்கி ஓடிவந்து அமர்வார்கள்.
- இப்போது திரை விலக்கப்பட்டதும் நடிகர் ‘நான்தான் பரதன்… நீண்ட தூரம் பயணித்து இந்த ஆரண்யத்தை வந்து அடைந்திருக்கிறேன்’ எனும்போது, கோமாளி குறுக்கிட்டு (கட்டியக்காரன்- விதூஷகன் எல்லாம் ஒருவரே), ‘எந்தத் தேசத்திலிருந்து வந்திருக்கி றீர்கள் பிரபு?’ என்று பேச்சுக்கொடுத்து அவரைக் கிண்டலும் கேலியும் செய்வார். இந்தக் கலகலப்பான உரை யாடல், அதுவரை குரலெடுத்துப் பாடிக் களைத்த நடிகருக்குச் சற்று ஓய்வாகவும் பார்வையாளர்களுக்குச் சிரிப்பையும் வரவழைக்கும்.
- தமிழ் தெருக்கூத்தின் இந்த நெகிழ்வுத்தன்மை கோவிந்தசாமி ராவைப் பெரிதும் கவர்ந்ததால் தாம் உருவாக்கிய தமிழ் நாடகங்களில் விதூஷகனையே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் கோமாளிக் கதா பாத்திரமாக வைத்துக்கொண்டார். கதையில் பார்வையாளர்களுக்குத் தோன்றும் சந்தேகங்களையெல்லாம் சரியான நேரத்தில் விதூஷகன் முதன்மைக் கதாபாத்திரங்களிடம் கேட்டுப் பதில்பெறும் உத்தியையும் உருவாக்கினார்.
தஞ்சையில் தொடங்கிய மறுமலர்ச்சி:
- சலன சினிமாவை, சாமிக்கண்ணு வின்செண்ட், ரகுபதி வெங்கையா போன்ற படங்காட்டிகள் ஊர் ஊராக எடுத்துச் சென்றதைப் போலவே, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புத்தெழுச்சி பெற்ற தமிழ் நாடகத்தை ஓர் இயக்கமாக முதன்முதலில் ஊர்ஊராக எடுத்துச் சென்றவர்தான் இந்த டி.ஆர்.கோவிந்த சாமி ராவ். இவர் தஞ்சையில் பிறந்து வளர்ந்த மராத்தியர். ஆங்கிலக் கல்வி பயின்று, தஞ்சை அரண்மனையில் அரசாங்க எழுத்தராகப் பணிபுரிந்தவர்.
- தாய்மொழியான மராத்தியைப் போலவே தமிழை நன்றாக எழுத, படிக்க, பேசத் தெரிந்தவராக இருந்தார். அவருக்கு ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் நல்ல புலமை இருந்தது. அரசு ஊழியர் என்பதால், அரண்மனைவாசிகளை மகிழ்வித்து சன்மானம் பெற்றுச் செல்ல வரும் மராத்தி நாடகக் குழுக்களின் புராணநாடகங்களைத் தொடர்ந்து காணும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதேவேளை, தமிழ் தெருக்கூத்து நாடகங்களை விடியவிடியக் கண்டு மகிழ்வதிலும் கோவிந்தசாமிக்கு அலாதி விருப்பம்.
- தஞ்சை அரண்மனையின் அழைப்பை ஏற்று பூனாவிலிருந்து தஞ்சை அரண்மனைக்கு வந்து, ‘ராம்தாஸ் சரித்திரம்’, ‘பாதுகா பட்டாபிஷேகம்’, ‘திரெளபதி வஸ்திராபஹரணம்’, ‘தாரா சசாங்கம்’, ‘கோபிசந்து’, ‘கர்ணவதம்’, ‘அபிமன்யு’, ‘சிறுதொண்டர்’ முதலிய புராண நாடகங்களை நடத்தியது சாங்கிலி என்கிற நாடகக் குழு (இந்த நாடகங்கள் அனைத்தையும் தமிழ் சலன சினிமாவும் தமிழ் பேசும் சினிமாவும் திரைக்கதை பற்றிய அறிதலின்றி அப்படியே எடுத்தாண்டன).
- விடிய விடிய நடத்தப்படும் தெருக்கூத்தின் கால அளவில், பாதிக்கும் குறைவாக 4 முதல் 5 மணி நேரத்துக்குள் விரைவாக இந்த மராத்தி நாடகங்கள் நிகழ்த்தி முடிக்கப்பட்டன. இந்தச் சுருக்கமான வடிவம் கோவிந்தசாமியைக் கவர்ந்த தால், இதே நாடகங்களை ஏன் தமிழில் அமைக்கக் கூடாது; அவற்றை ஏன் மக்களுக்குக் கொட்டகைகளில் நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால், அதற்குக் கட்டணம் வசூலிக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு உருவானது.
- உடனடியாக அவர் தன்னைப் போலவே நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்த, தஞ்சையில் தன்னுடன் பணியாற்றி வந்த சக நண்பர்கள் பலரைச் சேர்த்துக்கொண்டு, ‘மனமோகன நாடகக் கம்பெனி’யை 1876இல் தஞ்சையில் தொடங்கினார். தான் பார்த்த மராத்தி நாடகங்களின் பிரதிகளைப் பெற்று, அவற்றைத் தமிழில் எழுதி, நண்பர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
- ஒருவரே சில பல துணை வேடங்களையும் ஏற்க வேண்டியிருந்ததால், சமயோசித மாக வசனங்களை மாற்றிப் பேசிக் கொள்ளவும் அனுமதி அளித்தார் ராவ். சென்னைக்குக் கிளம்பிய கம்பெனிபல ஒத்திகைகளுக்குப் பின் அரசரின் அனுமதியுடன் கொட்டகை அரங்கில் கட்டணம் வசூலித்து நாடகங்களை நடத்தினார்.
- எதிர்பார்த் ததைவிடக் கொட்டகையைக் ‘குடியான’ மக்கள் நிரப்பினர். ஒடுக்கப்பட்ட, சாமானிய மக்கள் இந்தக் கொட்டகை நாடகங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இரவு 8 மணிக்குத் தொடங்கி அதிகாலை 1 மணி வரை நடத்தப்பட்ட இந்த நாடகங்களைப் பெட்டி அரங்க முறையில் கண்டு ரசித்தனர். ஏறி, இறங்கிய திரைகளில் வரையப்பட்ட ஓவியங்களும், அரசர்களைப் போலவே படாடோபமான ஆடை களும், அணிகலன்களும் கண்டு மக்கள் வியந்தனர். தஞ்சை அதன் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த குடி யான மக்கள் மாட்டு வண்டிகளிலும் தனவந்தர்கள் குதிரை வண்டிகள், மோட்டார் கார்களிலும் நாடகம் பார்க்கத் தஞ்சைக்கு வருகை தந்தனர். நாடகம் பார்த்துத் திரும்பிச் செல்லும் தனவந்தர்களை வழிப்பறி செய்யத் திருடர்கள் முளைத்தனர். இதனால், நாடகம் பார்த்தபின் தனவந்தர்கள் தஞ்சையில் தங்கிச் செல்ல ஆடம்பரமான ‘மேன்சன்’கள் முளைத்தன.
- தஞ்சை தூங்கா நகரமாக மாறியது. மனமோகன கம்பெனியார் புதிய நாடகம் அரங்கேற்றம் செய்யும் ஒவ் வொரு முறையும் தஞ்சை அல்லோகல்லோப்பட்டது. இவருடைய நாடகங்களைக் காண, மதராஸ், கடலூரிலிருந்து ஆங்கிலேயர்களும் புதுச்சேரியிலிருந்து பிரெஞ்சுக்காரர் களும் வருகை தந்தனர். அவர்களுக்கு நாடகச் சுருக்கத்தை ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் அச்சிட்டக் கைச்சீட்டாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் கோவிந்தசாமி ராவ்.
- ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மதராஸ் நண்பர்களின் அழைப்பை ஏற்று 1881இல் மதராஸுக்கு வந்து, புனித ஜார்ஜ் கோட்டை அருகில் செங்காங்கடை என்கிற கொட்ட கையில் தன்னுடைய நாடகங்களை நடத்தினார். முதன் முதலாகச் சென்னை வந்து முகாமிட்டபோதே இரண்டு மாதங்கள் நாடகங்களை நடத்தியது மனமோக நாடகக் கம்பெனி. கோவிந்த ராவின் நாடகங்களுக்கு, பின்னாளில் தமிழ் நாடகத்தைச் சமூகக் கதைகளை நோக்கி நகர்த்திய பம்மல் சம்பந்த முதலியார் தன்னுடைய மாணவப் பருவத்தில் தனது தந்தையாருடன் வந்து கண்டதைத் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
- சிறுவயதிலேயே கோவிந்தசாமி ராவிடம் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டு, மனமோகன கம்பெனியார் நடத்திய ‘ஸ்திரி சாகசம்’ நாடகத்தை அவர்கள் நடத்திக்காட்டிய நவீன முறை குறித்தும் வியந்திருக்கி றார். கோவிந்தசாமி ராவ், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்னைக்கு வந்து முகாமிட்டு நாடகங்களை நடத்தியது, திருச்சி, திருநெல்வேலி என அவரது கம்பெனி, ஊர் ஊராகச் சென்று தமிழ் நாடகத்தின் நவீன வடிவத்தை மக்களுக்குக் காட்டியதால் என்ன மற்றம் நடந்தது என்பதையும் விவரித்திருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2025)