மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: இனியும் காலதாமதம் சரியா?
- கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. முறையான காரணம் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுவரும் இந்தப் பணி, எப்போது தொடங்கும் என்பதை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது.
- 2021இல் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய டிஜிட்டல் வடிவிலான முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான அதிகாரபூர்வப் பணிகளை 2019இல் உள்துறை அமைச்சகம் தொடங்கியது. ஆனால், 2020இல் கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், அந்தப் பணி தடைபட்டது. கரோனா காலத்தில் நாட்டின் நிர்வாக எல்லைகள் முடக்கப்படும் நடவடிக்கை நீட்டிக்கப்பட்டு வந்ததால், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- ஆனால், அதன் பிறகும் அந்தப் பணி தொடங்கப்படவில்லை. இந்நிலையில் 2025-26 மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிக்கு ரூ.574.8 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக, இப்பணி வரும் ஆண்டிலும் தொடங்கப்படுவது சாத்தியமல்ல என்றே தெரிகிறது.
- நிதிநிலை அறிக்கையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவும் இல்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவையில் இது குறித்துக் கவலை தெரிவித்தார்; இதனால் சுமார் 14 கோடி பேருக்கு உணவுப் பாதுகாப்பு சார்ந்த பயன்கள் மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்தப் பயனாளிகள் கணக்கிடப்படுவது கவனிக்கத்தக்கது. மேலும் 2011இல் 121 கோடியாக இருந்த இந்திய மக்கள்தொகை, தற்போது 145 கோடியாக மதிப்பிடப்பட்டிருகிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் இந்தியா இருக்கிறது. இதை உறுதிப்படுத்தத் தரவுகள் அவசியம்.
- 2024 ஜூலை நிலவரப்படி இந்தத் தசாப்தத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி நடைபெறாத 44 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேநேரத்தில் பொருளாதார நெருக்கடிகள், போர்ச் சூழல்களால் பாதிப்புக்கு உள்ளான ஏமன், சிரியா, ஆப்கானிஸ்தான், மயன்மார், உக்ரைன், இலங்கை உள்படப் பல்வேறு நாடுகளும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளன. பெருந்தொற்று 2023லேயே தணிந்துவிட்ட நிலையில், இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைப்பதற்கு முகாந்திரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
- ஒருவேளை 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களவைத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் அமைய வேண்டும் என்பதால், அந்தப் பணி ஒத்திவைக்கப்படுகிறதா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. எதுவாக இருந்தாலும் மத்திய அரசு வெளிப்படையாக அறிவிப்பது, ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சுதந்திர இந்தியாவில் 1951 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொய்வில்லாமல் நடைபெற்றுவந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் இனியும் காலதாமதம் நேரக் கூடாது.
- புலம்பெயர்வுகள் அதிகமாக நடைபெற்றுவரும் இந்தக் காலத்தில், அவர்களுக்கான திட்டங்களைத் திட்டமிடவும், புலம்பெயர்வுகளால் ஒரு மாநிலத்தின் மக்கள் பாதிக்கப்படாமலிருக்க திட்டங்களைத் தீட்டவும், பட்டியல் சாதி, பழங்குடி இனத்தினருக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கவும், மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகளை மறுவரையறை செய்யவும், மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சி விகிதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும் ஒவ்வொரு தசாப்தத்துக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் நிச்சயம் தேவை.
- எனவே, இந்தப் பணியை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஆர்வம் காட்டிவருவதால், மத்திய அரசே அந்தப் பணியையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள முன்வர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 02 – 2025)