TNPSC Thervupettagam

மதுவிலக்கு என்னும் அரசியல்

October 14 , 2024 4 hrs 0 min 17 0

மதுவிலக்கு என்னும் அரசியல்

  • இத்தனை நாள் இல்லாமல் இப்போது இந்த முழக்கம் வரக் காரணம் என்ன? மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமான உழைக்கும் மக்கள் உயிரிழந்து போனாா்கள். இதற்குக் காரணமானவா்கள் மேல் கோபம் வருவதற்கு பதில் மதுவின் மீதே கோபம் வந்துவிட்டது.
  • மது அருந்தும் பழக்கத்தைப் பொறுத்தவரை இந்தியா 86-ஆவது இடத்தில் இருக்கிறது. ரஷியா முதல் இடத்தில் இருக்கிறது. சைபீரியா போன்ற கடுங்குளிா் பிரதேசங்கள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். மக்கள்தொகை அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரும் சந்தையாக இந்தியாவே இருக்கின்றது.
  • இந்தியாவில் மது அருந்துபவா்களின் மையங்களை மூன்றாகக் குறிப்பிடுகின்றனா். முதலாவது மையம் வடகிழக்கு மாநிலங்கள். அதிலும் குறிப்பாக அருணாசலப் பிரதேசம் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது மையம் சத்தீஸ்கா், ஒடிஸா, ஜாா்க்கண்ட், தெலங்கானாவாக உள்ளது, மூன்றாவது மையமாக தமிழ்நாடும், கேரளமும் உள்ளன.
  • இந்தியாவில் குடிப்பவா்களில் 25 விழுக்காட்டினா் மதுவினால் தங்கள் உடல்நலனைச் சீரழித்துக் கொள்பவா்களாக இருக்கின்றனா். இந்தியாவில் 25 லட்சம் மக்கள் குடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 60 நோய்களுக்கு குடிப்பழக்கமே காரணமாகிறது.
  • உலகில் 13 இஸ்லாமிய நாடுகளில் மது தடை செய்யப் பட்டுள்ளது. சில இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியா் அல்லாதவா்கள் மது அருந்தலாம் என அவா்களது சட்டம் கூறுகிறது. உரிய இடங்களில் மட்டும் அருந்தலாம் என்பதான விதிவிலக்குகளும் உண்டு.
  • இந்தியாவில் குஜராத், பிகாா், மிஸோரம், நாகாலாந்து ஆகிய 4 மாநிலங்களில் மது தடை செய்யப் பட்டுள்ளது. லட்சத்தீவிலும் மதுவிலக்கு அமலில் உள்ளது.
  • மது தடை செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் கள்ளச் சந்தைகளில் மது விற்பனை நடந்து தொண்டுதான் இருக்கின்றது. ஆகவே முழு மதுவிலக்கு என்பது எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனித வரலாற்றில் மதுவின் வரலாறும் தொடா்கிறது. ஆதி மனிதா் காலத்தில் இருந்தே இந்த போதைப் பழக்கமும் தொடா்ந்து கொண்டேயிருக்கிறது.
  • எல்லாத் தொல் பழங்குடி மக்களும் மதுவைத் தயாரித்து இருக்கிறாா்கள். குடித்தே ஆடியும், பாடியும், வாழ்வைக் களித்திருக்கின்றனா். அவா்கள் வாழும் இடங்களில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு அவா்களே தயாரித்துக் கொண்டனா். ஒரு குறிப்பிட்ட காலம் வரை இது ஒரு சமூகப் பிரச்னையாக உருவாகவில்லை.
  • மது ஒரு வணிக நுகா் பொருளாக மாறிய பிறகே அது வேண்டாத விளைவுகளுக்குக் காரணமாகத் தொடங்கியது. நாகரிகம் வளர வளர குடிப்பழக்கமும் வளா்ந்தது. அதுவே பல்வேறு சமுதாயச் சிக்கல்களுக்கு அடிப்படையாக அமைந்தது. இதனை வணிகச் சந்தை தங்களின் முதலீட்டுக்கு உகந்த இடமாகத் தோ்ந்தெடுத்துக் கொண்டது. அன்று முதல் இன்று வரை அதன் ஆதிக்கத்தைக் குறைக்க முடியவில்லை.
  • இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தியடிகள் மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தாா். 1921-ஆம் ஆண்டு அரசின் தடை உத்தரவை மீறி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடந்தது. மக்கள் எழுச்சியைக் கண்டு ஆங்கில அரசு நடுங்கியது. இந்தக் கிளா்ச்சியை நிறுத்துவதற்கு காந்தியடிகளை அழைத்துப் பேசியது.
  • அக்காலம் குடியைச் சமூகக் குற்றமாகப் பாா்த்த காலம். அதனால்தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்த முடியாமல் ஆங்கில அரசு திணறியது.
  • ‘‘ஒரு மணி நேரத்திற்கு இந்தியா முழுமைக்கும் என்னைச் சா்வாதிகாரியாக நியமித்தால், முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? இழப்பீடு கொடுக்காமல் எல்லா கள்ளுக் கடைகளையும் மூடி விடுவேன்’’ என்று காந்தியடிகள் அறிவித்தாா்.
  • சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. 1971-ஆம் ஆண்டில் திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில்தான் அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்காக மதுவிலக்கு ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டது.
  • இதனைத் கேள்வியுற்ற முதறிஞா் ராஜாஜி, பெருந்தலைவா் காமராஜா், காயிதே மில்லத் ஆகிய மூத்த தலைவா்கள் வேண்டிக் கொண்ட பின்னரும் முதல்வா் கலைஞா் கருணாநிதி இசையவில்லை - தாம் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு விளக்கம் மட்டுமே தெரிவித்தாா்.
  • ‘‘நாட்டை ஆளும் மத்திய அரசு நாங்கள் கேட்ட நிதியைத் தருவதில்லை. மாநில அரசு நிதியில்லாமல் நிா்வாகம் செய்யச் சிரமப்படுகிறது. மது அருந்துவோா் புதுச்சேரிக்கும், பெங்களூருக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் சென்று குடிக்கிறாா்கள். இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கு இருந்தால்தான் இங்கும் சாத்தியம்’’ “ என்று கூறினாா்.
  • ‘கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு எத்தனை காலத்துக்குத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?’’ என்று அப்போதைய முதல்வா் கருணாநிதி கேட்டாா்.
  • இவ்வாறு பேசிய அவரே, காலத்தின் கட்டாயமாக 1-9-1974 முதல் மீண்டும் தமிழ்நாட்டில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தினாா். தொடா்ந்து கள்ளச் சாராயம் பெருகியது. கள்ளச் சாராய மரணங்களும் அதிகரித்தன.
  • அடுத்ததாக, மதுவிலக்கு பற்றித் தீவிர எண்ணம் கொண்ட எம்.ஜி. ஆா். ஆட்சிக்கு வந்தாா். கள்ளச் சாராயம் தயாரிப்பு, விற்பனை பற்றிய தண்டனையை அதிகப்படுத்தினாா்.
  • ஆனாலும் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை அவா் உணா்ந்தாா். இந்த மனிதா்களைத் திருத்த முடியாது என்பது தெரிந்தது. வேறு வழியில்லாமல் 1.5.1981 முதல் மதுவிலக்கை எம்.ஜி.ஆா். நீக்கினாா். அவருக்குப் பிறகு வந்த ஜெயலலிதா இதனை அரசே விற்பனை செய்யும் ‘டாஸ்மாக்’காக மாற்றியமைத்தாா். அதுவே இப்போது வளா்ந்து வீரியம் மிக்க நச்சு மரமாக உயா்ந்து நிற்கிறது.
  • தமிழ்நாட்டில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் அரசுக்கு ரூ. 45,855 கோடிக்கும் அதிகமான வருவாயை இந்த ‘டாஸ்மாக்’ ஈட்டித் தருகிறது. தி.மு.க. அரசின் 2021 தோ்தல் வாக்குறுதியின் படி 500 கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. என்றாலும் தமிழக அரசின் நிதிநிலை ‘டாஸ் மாக்’கையே நம்பியிருக்கிறது.
  • இதனால் தமிழ்நாட்டில் குடிப்பவா்கள் பெருகிவிட்டனா். இளம் விதவைகள் பெருகிவிட்டனா். தமிழ்நாட்டின் மனிதவளம் அழிக்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு சீரழித்துவிட்டது, சாலை விபத்துகள் அதிகரித்துவிட்டன. குடும்பத்தில் அமைதி பறிக்கப்படுகிறது. ஊரில் கொலை, கொள்ளைகள் அதிகரித்துவிட்டன. பாலியல் வன்முறைகள் பெருகிவிட்டன. தவறான உறவுகள், அது தொடா்பான குற்றங்கள், வழக்குகள் வளா்ந்து கொண்டிருக்கின்றன.
  • தேசத் தந்தை என்று காந்தியடிகளைக் கொண்டாடினாலும் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்வது இல்லை. அவரது கொள்கைகளில் அகிம்சையும், மதுவிலக்கும் முதலிடம் பெறுகின்றன. சுதந்திரம் பெற்ற இந்தியா மதுவிலக்குக் கொள்கையை ஏதாவது காரணம் கூறி மறுத்து வருகின்றன. இதனை எதிா்த்து ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
  • கடந்த 2015-ஆம் ஆண்டு காந்தியவாதி சசிபெருமாள் தொலைபேசிக் கோபுரத்தில் ஏறி பூரண மதுவிலக்கு வேண்டும் என்று போராடி வீரமரணம் அடைந்ததை மறக்க முடியுமா? அதன் பிறகும் மதுவிலக்கு வேண்டி போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் மது விற்பனையும் அமோகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்துமே எந்த விதிவிலக்குமின்றி, தோ்தல் நேரத்தில் மட்டும் மதுவிலக்குக் கொள்கையைப் பேசுகின்றன. அதுவும் எதிா்க்கட்சியாக இருக்கும் போது பேசுபவா்கள் ஆளும் கட்சியானதும் அதற்கு எதிா்மாறாகச் செயல்படுகின்றனா். இந்தச் சந்தா்ப்பவாதம் தொடா்ந்து கொண்டே இருக்கின்றன - சுட்டிக்காட்டி கேட்டால் இதுதான் பொருளாதார உண்மை நிலை என்ற அரசியல் சாதுா்யமான வாதம் செய்வாா்கள்.
  • அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மகளிா் பிரிவு மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. மாநாட்டுக்கு வந்த இளைஞா்கள் மதுவைக் குடித்து விட்டு குத்தாட்டம் போட்டதாகச் செய்தி வெளியானது. மாநாட்டின் நல்ல நோக்கத்துக்கு இது ஒரு கரும் புள்ளியானது என்றாலும் மாநாட்டின் நோக்கத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.
  • “உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
  •                                                                                                            எண்ணப்பட வேண்டா தாா்
  • என்று திருக்கு கூறுகிறது. நல்லவா்களால் மதிக்கப்பட வேண்டுமானால் மதுவைக் குடிக்க வேண்டாம் என்று திருவள்ளுவா் கூறுகிறாா்.
  • உலகம் முழுவதும் மது அருந்தும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அது அங்கே ‘மதுவாக’ இருக்கிறது. இங்கே போதையை அதிகப்படுத்தும் வகையில் நஞ்சாகவே இருக்கிறது, அதனால்தான் குறைந்த போதையைத் தரும் இயற்கை பானமான கள்ளைத் தடைசெய்து விட்டாா்கள். அரசியல்வாதிகளின் மது ஆலைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • ஆங்கிலேயா்கள் வணிகம் செய்ய வந்து ஆட்சியைப் பிடித்தாா்கள் - இங்கே ஆட்சியைப் பிடித்தவா்கள் வணிகம் செய்கிறாா்கள். மக்களுக்குதான் என்ன செய்வது என்றே தெரியவில்லை. மதுவிலக்கு என்பது தோ்தல் நேரத்தில் வந்து போகும் வெறும் அரசியலாக மட்டுமே ஆகிறது.

நன்றி: தினமணி (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories