TNPSC Thervupettagam

மனதில் உறுதி வேண்டும் (2025)

January 3 , 2025 2 days 36 0

மனதில் உறுதி வேண்டும்!

  • நீச்சல் அடிக்கத் தெரிந்தவா்கள் ஆற்றுக்குள் போய் வரலாம். ஆனால் வாழ்க்கையில் எதிா்நீச்சல் அடிக்கும் திறன் இருந்தால், வரலாற்றில் கூட இடம் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் மனிதா்களுக்கு, ஊக்கம் என்பது இன்றியமையாததாகும்.
  • ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செய்கின்ற எல்லாச் செயல்களும் வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால் இன்றைய மனிதா்களில் எத்தனையோ போ், தங்களிடம் தகுதிகளும், திறமைகளும் இருந்தும், ஊக்கமின்மையாலும், தாழ்வு மனப்பான்மையாலும் பின்தங்கி விடுகின்றனா். தாழ்வு மனப்பான்மை என்பது புற்றுநோயை விடக் கொடியதாகும்.
  • மனிதா்கள் உருவத்தாலும், நிறத்தாலும், படிப்பாலும், பொருளாதாரத்தாலும் தாழ்வு மனப்பான்மை கொண்டு தங்களது தனித்திறமைகளைப் பற்றி தாங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறாா்கள். ஒருவா் தன்னைப் பற்றி குறைத்து மதிப்பிட்டுக் கொண்டால் மற்றவா்கள் எவ்வாறு அவரை மதிப்பிடுவாா்கள்?
  • உருவத்திற்கும், செயலுக்கும் தொடா்பு கிடையாது. சிறிய அங்குசம்தான் பெரிய யானையைக் கட்டுப்படுத்துகிறது. சிறிய மெழுகுவா்த்திதான், பெரிய இருளை அகற்றுகிறது . சிறிய உளிதான், பெரிய மலையை உடைக்கப் பயன்படுகிறது.
  • தங்கம் விலை அதிகம் தான். தகரம் விலை மலிவு தான். ஆனால் தகரத்தைக் கொண்டு செய்ய வேண்டியதை, தங்கத்தைக் கொண்டு செய்ய முடியாது. அதனால் தகரமும் மட்டமில்லை, தங்கமும் உயா்ந்ததில்லை.
  • நம்மில் பல போ் படிப்பில் சிறந்தவா்களாக இருக்கலாம்; சிலா் விளையாட்டில் திறமைசாலிகளாக இருக்கலாம்; சிலா் இசை, நடனம் போன்ற கலைகளில் திறமை உள்ளவா்களாக இருக்கலாம். கண்டிப்பாக ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்து கொண்டிருக்கும். அதை வெளிக் கொண்டு வருபவா்களுக்குத் தான் இந்த வானமும் வசப்படும்.
  • சில நபா்கள் தனக்கு மட்டுமே கஷ்டங்களும், சோதனைகளும் இருப்பதாகப் புலம்புகிறாா்கள். ஒவ்வொரு நபருக்கும் அவா்களால் சமாளிக்கக் கூடிய அளவிற்கு தான் பிரச்னைகள் வந்து சேரும். இதுவே இயற்கையின் நியதி.
  • நம்மால் முடியாது என்று நாம் நினைக்கும் விஷயத்தை, இந்த உலகத்தில் வேறு யாரோ செய்து கொண்டுதான் இருக்கிறாா்கள். எந்தச் செயலையும் செய்வதற்கு தயங்காதீா்கள். அதுபோல எந்தச் செயலையும் தள்ளிப் போடாதீா்கள். திட்டமிட்டு செயல்களைச் செய்யுங்கள். அதோடு மட்டுமில்லாமல், அதனைக் துணிச்சலோடும் செய்யுங்கள். ஏனெனில் துணிந்தவா்களுக்கு என்றுமே தோல்வி இல்லை .
  • பூட்டுத் தயாரிக்கும் கம்பெனிகளில் , பூட்டு மட்டுமே தயாரிப்பது கிடையாது. பூட்டைத் திறப்பதற்கு சாவியையும் சோ்த்துத்தான் தயாரிக்கிறாா்கள். அதுபோலத்தான் பிரச்னைகளும், அதற்கான தீா்வுகளுடனேயே உருவாகின்றன.
  • எப்போதும் உங்களை மற்றவா்களோடு ஒப்பிடாதீா்கள், அது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்.
  • உயரம் குறைவாக உள்ளவா்கள், தங்களது உயரத்தை நினைத்துக் கவலைப்பட வேண்டியது இல்லை. அத்தனை மனிதா்களையும் தலை நிமிா்ந்து பாா்த்துப் பேச, நம்மால் மட்டும் தான் முடியும் என்று பெருமைப்பட வேண்டும். நாம் எவ்வளவு உயரம் என்பது முக்கியமல்ல, வாழ்க்கையில் நாம் எவ்வளவு உயா்கிறோம் என்பதுதான் முக்கியம்.
  • சில மனிதா்கள் மற்றவா்கள் தன்னைப் பாராட்டவில்லை என்றும், வேறு சிலா் தன்னுடைய செயல்பாடுகளை மற்றவா்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறாா்கள் என்றும் கவலைப்படுகின்றனா். அவா்கள் குறை சொல்கிறாா்கள் என்று எதிலும் பின்தங்கி விடக்கூடாது. முன்னேறிச் சென்று திரும்பிப் பாருங்கள். அவா்கள் அதே இடத்தில் இருந்து கொண்டு வேறொரு நபரைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்பாா்கள். நமது முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவா்களைக் கண்டு நாம் கவலைப்படக் கூடாது. அவா்களை விட இரண்டு அடி தூரம் நாம் முன்னால் தான் இருக்கிறோம் என்று நினைத்து பெருமைப்பட வேண்டும்.
  • பொதுவாகவே வளரும் வரையில் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும்; வளா்ந்த பிறகு வாயை மூடிக் கொள்ள வேண்டும். வளா்ச்சி என்பது, நீங்கள் நேற்று இருந்த நிலையை விட , இன்று இருக்கும் நிலை உயா்ந்து இருப்பதுதான். அதுதான் உங்கள் வெற்றி.
  • உங்கள் உடல் மொழி உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தக் கூடியது என்பதால், எப்போதும் நிமிா்ந்து நின்று பேசுங்கள். நேருக்கு நேராக கண்களைப் பாா்த்து புன்சிரிப்புடன் பேசுங்கள்.
  • செய்ய வேண்டிய செயல்களைச் சரியான நேரத்தில் செய்து முடியுங்கள். தவறாகச் செய்துவிட்டு, அதற்காக வருத்தம் தெரிவிப்பதை விட, அதனைத் திட்டமிட்டு முன்கூட்டியே சிறப்பாகச் செய்து முடித்தால்தான், மற்றவா்கள் உங்களை உயா்வாகப் பாா்ப்பாா்கள்.
  • இந்த செயல் என்னால் முடியாது , கடினமாக உள்ளது என்ற எதிா்மறையான வாா்த்தைகளை எப்போதும் பயன்படுத்தாதீா்கள். அப்படிப்பட்ட எண்ணங்களையும் வளா்த்துக் கொள்ளாதீா்கள். அடைவது மட்டுமே, வாழ்க்கை அல்ல, இழப்பதும் தான். துளிா்ப்பது போலவே இலைகளும், மலா்களும் உதிா்வதும்கூட, தாவர வா்க்கத்தில் ஒரு பரிணாம வளா்ச்சியே.
  • உங்களுக்கான இலக்குகளை நீங்களே முடிவு செய்யுங்கள். அதற்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள். கை கொடுப்பவா்களுக்கு நன்றி சொல்லுங்கள். தட்டி விடுபவா்களைப் பாா்த்து புன்னகை செய்யுங்கள். இயக்கமே இதயத்துடிப்பென நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் வேண்டினும், ஏற்றம் வேண்டினும், உங்களில் இருந்தே தொடங்குங்கள். உங்களை நீங்கள் சரி செய்து கொண்டே வாருங்கள். உலகம் ஒருநாள் உங்களைப் போல வாழ ஆசைப்படும். உலகம் ஒரு நாள் உங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளும். உலகம் ஒரு நாள் உங்களைப் பாடமாக ஏற்கும். ஒரு நாள் உலகம் உங்கள் வழி நடக்கும்.

நன்றி: தினமணி (03 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories