மனம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி நிச்சயம்
- மனம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் நிச்சயம் வெற்றி அடையலாம் என்பது ஆன்றோர் வாக்கு. எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. ஒருமுகப்பட்ட மனதுடன் எதை செய்தாலும் அதில் வெற்றி பெற முடியும். அரைகுறை மனதுடன் செய்வதால் வெற்றி எட்டாக் கனி ஆகிவிடும். உடலில் நாம் வசிக்கிறோம். மனதின் கட்டளைப்படி செயல்களை செய்கிறோம். உடல்-மனம் என இரு கருவிகளின் மூலம் மட்டுமே வாழ்வை எதிர்கொள்கிறோம்.
- மற்ற உயிரினங்களுக்கு மனம் இல்லை. கணினியில் மென்பொருள் பயன்படுத்தப்படுவதைப் போல் வாழ்நாள் முழுவதும், சுய கருத்து இன்றி ஒரே மாதிரியான செயல்களை செய்து அவை மடிகின்றன. சிந்திப்பதில்லை. அலசி ஆராய்வதில்லை. எதையும் விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை. முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் லாவகமாக தத்தி சென்று தண்ணீரில் நீந்துகிறது வாத்து. யார் அதற்கு நீந்த கற்றுக்கொடுத்தது? இயற்கையாகவே டிஎன்ஏவில் பதியப்பட்டுள்ளது.
- ஆனால் சிந்திக்கும் மனதை உடையவன் மனிதன். ‘மன்’ என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு ‘நினைப்பது’என்று பொருள். ‘மன்’ நினைப்பது. அதனால் ‘மநுஷ்யன்’ சிந்திக்கும் குணம் பெற்றவனாகிறான். இன்ப-துன்பங்களை உணர்ந்து அனுபவிப்பது என இரு செயல்களை செய்கிறது.உடலை பாதுகாக்க உடற்பயிற்சி செய்கிறோம். மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகிறோம். மனத்தைப் பற்றி சிந்திப்பதில்லை.
- ஏனெனில் கை, கால், கண், மூக்கு, நாக்கு என்பதைப்போல் அது உடல் உறுப்பு இல்லை. கண்ணுக்கு தெரிவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குதாவுவதே மனதின் இயல்பு. ஐம்புலன்களின் மூலம் மகிழ்ச்சி, பயம், துக்கம், பொறாமை என அனைத்தையும் மனம் அனுபவிக்கிறது. கற்பனைத் திறன் உடையது.
- கவிதை புனையும். கதை, கட்டுரை எழுதும். தன்னைத் தவிர மற்ற எல்லாவற்றைப் பற்றி மட்டுமே மனம் சிந்திக்கும். மனமே எல்லா உணர்ச்சியும் எண்ணமும். மனம் தன்னை அறியாது. தன்னைத்தவிர உலகிலுள்ள எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள, நினைக்க, அனுபவிக்க, புரிந்துகொள்ள விழைகிறது. மனம் எதை உணர்கிறதோ அதை நாம் என நினைக்கிறோம். நாம் என்பது நம் மனம் என்ற எண்ணத்தில் வாழ்கிறோம்.
- வீடு, நிலம், கணவன்/மனைவி, குழந்தைகள், பதவி இவை நம்மைச் சார்ந்தவை. இவையெல்லாம் இல்லாமலும் உயிர் வாழ முடியும். அதைப்போல் அனுபவம், எண்ணம், பிடித்தது-பிடிக்காதது, சுக-துக்கம் இவையெல்லாம் மனதுடன் தொடர்புடையவை. இவையெல்லாம் இல்லாமல் மனதில் எந்த சலனமுமின்றி அமைதியாக இருக்க முடியும்.
- நல்ல செயல்களை செய்யும்போதுகூட தவறு செய்கிறோம். தவறை உணர்ந்து, மீண்டும் தவறு நேராமல் எச்சரிக்கையுடன் இருக்கலாம். பயத்தால் தவறை மறைத்து பொய் சொல்கிறோம். பயமே மனதை கெடுக்கிறது. நாம் சொன்ன பொய் வெளிப்பட்டால் அவமானம். இதுவே சஞ்சலத்துக்கு காரணம். சந்தோஷமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். அடுத்த நொடி பூமி கொஞ்சம் ஆடினால், நிலநடுக்கம் ஏற்பட்டால்? பயம் கவ்வுகிறது.
- இதுவே மனதின் தன்மை. எல்லா பயத்துக்கும் மூல காரணம் மனம். பயம் துக்கத்துக்கு காரணம். பல பயங்களை மனம் கற்பனை செய்கிறது. மனதிலிருந்து விடுபட்டு புத்திபூர்வமாக சிந்திக்கமனதை பழக்குவதே நாம் செய்யவேண்டிய பணி.
- கட்டற்ற தன்னியல்பான அறிவாற்றலை பயன்படுத்த வேண்டும். உடல் - உடைமை இவற்றில் பற்றுள்ளது மனம். வங்கியில் உள்ள நம் பணம் சைபர் கிரைமில் [Cyber Crime] களவு போவது, பாம்பு-தேள் கடி, விபத்தில் உடல் ஊனமுறுவது என எதிர்பாராத இன்னல்கள் சூழும்போது நிலைகுலைந்து போகிறோம்.
- கவலையை மறக்க பலவற்றுக்கு அடிமை ஆகிறோம். மீண்டும் அந்த வட்டத்திலிருந்து வெளிவரமுடியாமல் அவதிப்படுகிறோம். இது ஒரு மனநோய். அதை குணப்படுத்த முடியாமல் நடைப்பிணமாக பலர் வாழ்கின்றனர். நான் மிக நல்லவன் ஆனால் மனம் ஒத்துழைப்பதில்லை என எண்ணுகிறோம்.
- மனம் இன்னொன்றை அறிந்தும், உணர்ந்தும் சுக துக்கத்தை அனுபவிக்கிறது. அந்த மனதை அறிந்து உணர்ந்தால் அதை கட்டுப்படுத்த முடியும். இதை புரிந்துகொண்டால் சரியாக முடிவெடுத்து, செயல்களை செய்து மகிழ்ச்சியுடன் வாழலாம். பயிற்சியின் மூலமே இதை சாதிக்க முடியும். இது கடினம் என எண்ணலாம். நாளடைவில் மனம் நம் வசப்படும். நாம் மனதுக்கு முதலாளியாகி கட்டளை இடமுடியும். பயிற்சி பழக்கமாக பரிணமித்து சரியான செயல்களை மட்டும் செய்வோம். இதுவே முடிவெடுக்கும் திறன். இதனால் நம்மை நாமே உயர்த்திக் கொள்ளலாம் .
- குரங்காட்டி குச்சியால் அடித்து, தன் சொல்படி ஆட பயிற்சி அளித்து குரங்கை தயார் செய்கிறான். குரங்கு குச்சிக்கு கட்டுப்படும். மனம் அறிவுக்கு மட்டுமே கட்டுப்படும். அறிவின் துணை கொண்டு மன தடைகளை தகர்த்தெறிய வேண்டும். மனமே பிரச்சினை ஆகிவிடக் கூடாது. பிரச்சினைகளை தீர்க்க மனதை பழக்க வேண்டும். மனதை நிலைப்படுத்த தியானம், யோகாசனம், உடற்பயிற்சி, ஓரளவுக்கு உதவும். மனவோட்டத்தை தடுக்க தொடர் பயிற்சி தேவை. இளமையில் பயில்வது சிறந்தது.
- அதிருப்தி, கோபம், பொறாமை, அழுகை என எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் நல்ல மனநிலையில் எந்த கஷ்டமும் நம்மை பாதிக்காது. நல்லெண்ணங்களே நம் தோழர்கள். தீய எண்ணங்கள் நம் எதிரிகள். நல்லெண்ணம் பூவிலிருக்கும் தேன், நறுமணம் போன்றது. கெட்ட எண்ணம் துர்நாற்றம் போன்றது. நம்பிக்கை, ஆர்வம், ஊக்கம், உற்சாகம், ஆவலுடன் செயல்களை செய்ய பழக வேண்டும். பலவீனமான மனதை கைவிட்டு, செயல்களை செய்வதன்மூலம் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும். வாழ்வில் முன்னேறலாம். வெற்றியடையலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 12 – 2024)