மனிதரை வீழ்த்தும் மது
- ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பது எல்லாருக்கும் தெரியும். இதயத்தை மட்டுமன்றி, மொத்த உடலையும் குடிப்பழக்கம் கெடுக்கிறது. அது எப்படி உடலையும் மனதையும் கெடுத்து மனிதர்களை வீழ்த்துகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
வயிற்றைக் கெடுக்கும் மது:
- மதுவின் கெடுதல் வயிற்றில்தான் ஆரம்பிக்கிறது. மதுவில் இருக்கும் ‘எத்தில் ஆல்கஹால்’ (Ethyl alcohol) இரைப்பைச் சுவரை அரித்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் பசி எடுக்காது; வயிற்றில் எரிச்சல் ஏற்படும். அடுத்ததாக, இரைப்பையில் மது புண்களை உண்டாக்கும். வயிறு வலிக்கும்.
- சரியாகச் சாப்பிட முடியாது. மது அளவுக்கு மீறும்போதும், வெறும் வயிற்றில் அதைக் குடிக்கும்போதும் உணவுக்குழாய்கூட வெந்துவிடும் (Esophagitis). குமட்டல், வாந்தி வரும். குடலில் சத்துகள் உறிஞ்சப்படுவது குறையும். புரதமும் விட்டமின்களும் உடலில் குறையும். நாள்பட்ட குடி நோயாளிகளுக்குக் கணைய அழற்சி (Pancreatitis) ஏற்படும். அப்போது வயிற்றுவலியும் வாந்தியும் படுத்தி எடுக்கும்.
கல்லீரல் கவனம்:
- ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் தினமும் 3 பெரிய ‘பெக்’ (பெரிய பெக் - 60 மி.லி.) மது அருந்தினால், அவரது கல்லீரல் பாதிக்கப்படும். ஈரம் மிகுந்த மரங்களில் கறையான்கள் யோசிக் காமல் கூடுகட்டுவதைப் போல, கெட்டுப் போன கல்லீரலில் கொழுப்பு செல்கள் (Adipocytes) சுலபமாகக் குடியேறிவிடும். கல்லீரல் வீங்கத் தொடங்கும். இந்தப் பாதிப்புக்குக் ‘கொழுப்புக் கல்லீரல்’ (Fatty liver) என்று பெயர். கல்லீரல் பாதிப்பின் முதற்கட்டம் இது. அறிகுறி எதுவும் வெளியில் காட்டாது.
- இதை நினைத்துக் குடிநோயாளிகள் மகிழ்ச்சி அடைய முடியாது. இந்தக் கட்டத்தில் அவர்கள் விழித்துக்கொண்டு, வருடத்துக்கு ஒருமுறை வயிற்றை ஸ்கேன் செய்து, கல்லீரல் திறன் பரிசோதனைகள் (LFT) செய்து, கல்லீரலின் நிலைமையைப் புரிந்து கொண்டு, மதுவை மறந்து, தகுந்த சிகிச்சைகள் மூலம் சரிபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லை யென்றால், ஆறுமுகத்துக்கு ஆன கதிதான் ஆகும்.
ஆறுமுகத்துக்கு என்னவாயிற்று?
- ஆறுமுகத்துக்குக் கொத்தனார் வேலை. மனைவி கீரை விற்பவர். வீட்டில் கடன் சுமை. விபத்தில் கணவனை இழந்த இள வயது மகள் வீட்டில் கூடவே இருப்பது கூடுதல் சுமை. அந்தச் சோகத்தில் குடிக்க ஆரம்பித்தார். குவார்ட்டர் மது குடித்தால்தான் கட்டுமானக் கரண்டியைக் கையில் எடுக்க முடியும் எனும் நிலையில் இருந்தவர், போகப்போக விழித்ததும் மதுக்கடையைத் தேடும் அளவுக்குக் குடிக்கு அடிமை ஆனார்.
- ஆரம்பத்தில் “பசி இல்லை”, “சாப்பிடப் பிடிக்கவில்லை”, “வாந்தி வருகிறது”, “வயிறு வலிக்கிறது” என்றுதான் என்னிடம் வந்தார், ஆறுமுகம். அப்போதே “மதுவைத் தொடாதீர்கள்” என்று எச்சரித்தேன். “என்னால குடிக்காம இருக்க முடியல, டாக்டர்” என்றார். அவருக்கு மஞ்சள் காமாலை வந்தது.
- பாபநாசம் போய் பச்சிலை மருந்து சாப்பிட்டார். “இது குடியால் வந்த காமாலை. பச்சிலைச் சாற்றுக்குக் கட்டுப்படாது. குடிப்பதை நிறுத்தினால்தான் காமாலை அடங்கும்” என்றேன். இதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. குடிப்பதையும் விடவில்லை. ஆறு மாதத்துக்குள் ஆறு கிலோ எடை குறைந்தது. நெஞ்சு எலும்பெல்லாம் வெளியில் தெரிந்தது. “எங்கிருந்து தான் வந்து சேர்ந்ததோ” என அவரே வியக்கும் அளவுக்கு வயிற்றில் நீர் கோத்து, பானை மாதிரி வீங்கிவிட்டது. அவரால் வேலைக்குப் போக முடியவில்லை. பணக்கஷ்டம். அரசு மருத்துவமனைக்குப் போனார்.
- அங்கேவயிற்றை ஸ்கேன் எடுத்து ‘கல்லீரல் சுருக்க நோய்’ என்றார்கள். மாதாமாதம் அங்கே உள்நோயாளியாகச் சேர்ந்து வயிற்றுக்குள் சேர்ந்திருந்த வீச்சம் எடுத்த திரவத்தை ஊசி மூலம் சுமார் மூன்று லிட்டர் எடுத்துக்கொண்டு வந்தார். பாதை தெரியாதவருக்குப் பார்வையும் தெரியாமல் போனால் எப்படி இருக்கும்? ஆறுமுகத்துக்கு வயிற்றில் நீர் சேர்ந்தது போதாமல், கால்களிலும் நீர் சேர்ந்து யானைக்கால் போன்று வீங்கிவிட்டது.
- நடக்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் விண்விண்ணென்று வலி உயிர் போனது. அவர் படும் துன்பங்களைப் பார்த்து மகளும் மனைவியும் அழாத நாள் இல்லை. “எப்போதுதான் விடியும்?” என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு அவரது மரணம்தான் முடிவு சொன்னது. ஆம், ஓர் அந்திப் பொழுதில் ஆறுமுகம் குவளை குவளை யாக ரத்த வாந்தி எடுத்து இறந்து போனார்.
மெல்லக் கொல்லும் விஷம்:
- மதுவென்பது ரசித்துப் புசிக்கும் பழச்சாறு அல்ல, மெல்லக் கொல்லும் விஷம். எப்படி? ஆறுமுகத் துக்குக் ‘கல்லீரல் சுருக்க நோய்’ வந்தது என்று சொன்னேன் அல்லவா? இது கல்லீரல் பாதிப்பின் இரண்டாவது கட்டம். இது எப்படி ஏற்படுகிறது? 60 மி.லி. மதுவைச் செரித்து முடிக்க இயல்பான கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகும். வீங்கிய கல்லீரலுக்கு இரண்டு மணி நேரம் ஆகும். கொழுப்புக் கல்லீரல் கொண்ட ஒருவர், ஒரு நாளில் எட்டு ‘லார்ஜ்’ (ஒரு லார்ஜ் - 120 மி.லி.) மது குடிக்கிறார் என்றால் 16 மணி நேரம் ஆகும்.
- இதற்கிடையில் பித்தநீர் சுரப்பது, கொலஸ்டிரால் உற்பத்தி, என்சைம் தயாரிப்பு, விஷமுறிப்பு என ஏகப்பட்ட வேலைகளையும் கல்லீரல் பார்க்க வேண்டும். பாவம் கல்லீரல், அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? அந்த 16 மணி நேரத்துக்குள் குடிநோயாளி அடுத்த ஆறு ‘லார்ஜ்’களைக் குடலுக்குள் இறக்கிவிடுகிறாரே.
- இப்படி அடுத்தடுத்துக் கல்லீரல் தாக்கப்படுவதால், தர்ப்பூசணிபோல் மொழுமொழுவெனக் காணப்படுகிற கல்லீரல் இப்போது அன்னாசிபோல் முள்முள்ளாக மாறிவிடுகிறது. இதைத்தான் ‘கல்லீரல் சுருக்கம்’ (Liver cirrhosis) என்கிறோம். இதைத் தொடர்ந்து, கல்லீரல் செயல் இழக்கிறது (Liver failure). காமாலை, வயிறு வீக்கம், வீச்சம் எடுக்கும் நீர் கோத்தல் (Ascites), கால் வீக்கம் என எல்லாமே கல்லீரல் சுருக்கம் செய்யும் கொடுமைதான். சிலருக்கு இது புற்றுநோயாகவும் மாறக்கூடும்.
- இன்றைய நவீன மருத்துவத்தில் கல்லீரல் சுருக்கத்தை ஆரம்பத்தி லேயே கண்டறிந்து, கல்லீரலைக் காக்க வசதி இருக்கிறது. கல்லீரல் செயலிழந்துவிட்டால் ‘கல்லீரல் மாற்றுச் சிகிச்சை’ (Liver transplantation) கைகொடுக்கிறது. ஆனால், இது லேசுப்பட்ட சிகிச்சை அல்ல; சவால் மிகுந்தது. நினைத்த நேரத்தில் கல்லீரல் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் எல்லாருக்கும் இது பலன் கொடுக்கும் என்கிற உறுதியும் கிடையாது.
ஆபத்தாகும் ரத்த வாந்தி:
- மனிதரை வீழ்த்தும் குடிப்பழக்க பாதிப்பில் ‘உணவுக்குழாய் விரிசுருள் நோய்’ (Esophageal varices) முக்கிய மானது. மூட்டை தூக்கும் தொழிலாளியின் கால்களைப் பாருங்கள். குட்டிப் பாம்பு படுத்திருப்பதுபோல் ரத்தக்குழாய்கள் நெளிந்து, வளைந்து புடைத்துக் கொண்டிருக்கும். இதுமாதிரிதான் குடிநோயாளியின் உணவுக்குழாயில் ரத்தக்குழாய்கள் வீங்கி, வளைந்து, நெளிந்து, மெலிந்து வெடிப்பதற்குக் காத்திருக்கும்.
- இந்த அமைதியான ‘எரிமலைகள்’ எப்போதெல்லாம் சீறி வெடிக்கிறதோ அப்போதெல்லாம் உடைந்துபோன தண்ணீர்க் குழாய் தண்ணீரைப் பீச்சியடிப்பதைப்போல குடிநோயாளி ரத்த வாந்தி எடுப்பார். இப்படியான ரத்த இழப்பில் உயிரிழக்கும் குடிநோயாளிகள் அதிகம். ஆறுமுகம் இறந்ததும் இப்படித்தான்.
மனநலத்தை வீழ்த்தும் மது
- மதுவின் கரங்கள் மூளை செல்களை மழுங்கடிக்கும்; மனச்சோர்வு தரும். ஞாபக மறதி வரும். மனைவி யார், பிள்ளைகள் யார் என்பதுகூட மறந்து போகும்.
- பொதுவாகவே, மது உடலுக்குள் சென்றால் கட்டுப்பாடற்ற, முறைசாராத மனநிலைக்கு அது கொண்டு செல்லும். சிலருக்கு அடிமனதில் விதிமீறல் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும். இந்த ‘விதிமீறல் ஆள்கள்’ தொடர்ந்து மது அருந்தும்போது, அவர்களுக்குச் ‘சமூக விரோத ஆளுமைக் கோளாறு’ (Anti-social personality disorder) ஏற்படும். இவர்கள் எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்காதவர்கள். தனக்கோ, சமூகத்துக்கோ ஆபத்தை விளைவிப்பவர்கள்.
- குடிநோயாளிகளை அதிகம் படுத்தும் மற்றொரு நோய், ‘மதுவால் தூண்டப்பட்ட மனநோய்’ (Alcohol induced psychotic disorder). இல்லாத ஒன்றை இருப்பதுபோலவும், பேசாத ஒன்றைப் பேசுவதுபோலவும் நம்பிக்கொண்டு, மனைவியைச் சந்தேகப்படுவதும், தொடர்பின்றிப் பேசுவதும், அழுவதும், கத்துவதும், துரத்துவதுமாக இருக்கிறவர்கள் இவர்கள். தற்கொலை வரை செல்லக்கூடியவர்களும் இவர்கள்தான்.
- கல்லீரல் சுருக்க நோய் மோசமாகும்போது, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பணியைக் கல்லீரல் நிறுத்திவிடுகிறது. இதனால் தப்பிப் பிழைத்த நச்சுகள் மூளைக்குச் செல்வதால் ‘கல்லீரல் சார்ந்த மூளை அழற்சி’ (Hepatic encephalopathy) ஏற்படுகிறது. புத்தி பேதலித்து, பித்துப் பிடித்த மாதிரி பேச வைக்கும் நோய் இது; குடிநோயாளியை ‘கோமா’வுக்குக் கொண்டுசென்று மரணக்குழியில் தள்ளிவிடுகிற ஆபத்து மிகுந்தது.
நரம்புகள் எரியும்:
- நீண்ட காலம் மது அருந்துகிறவர்களுக்கு ‘மது சார்ந்த பன்முக நரம்புப்பழுது’ (Alcoholic poly neuropathy) என்னும் பாதிப்பு வரும். பாதம் தொடங்கி முழங்கால் வரை படிப்படியாக உணர்ச்சி குறையும். காலில் மின்சாரம் பாய்ச்சியதுபோல் உணர்வு ஏற்படும். ஊசி குத்துவதுபோல் வலி தாக்கும். தரையில் பாதங்களை வைக்கும்போது பட்டுமெத்தையில் வைத்த மாதிரி இருக்கும்.
- இந்த மாதிரியான அசாதாரண உணர்ச்சிகள் முழங்கையிலிருந்து கை விரல்கள் வரை தோன்றும். அடுத்த கட்டத்தில் காலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்த மாதிரி கடுமையாக எரியும். தண்ணீர்த் தொட்டியில் கால்களை நனைக்கும் அளவுக்கு இந்தப் பாதிப்பு மோசமாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 02 – 2025)