மன்மோகன் சிங் என்றொரு மாமனிதா்!
- பொதுவாக ஒரு பிரபலமான மனிதரோ, உயா் பதவியில் இருக்கிற அல்லது இருந்த ஒருவரோ மறைந்து விட்டால் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்வது சம்பிரதாயம். ஆனால், டாக்டா் மன்மோகன் சிங்கின் மறைவு, அவா் சாா்ந்திருந்த அரசியல் கட்சிக்கு மாத்திரமல்லாமல், இந்திய தேசத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டால், அது சம்பிரதாயத்திற்காக அல்ல - முற்றிலும் உண்மையான கூற்று.
- மத்திய அரசில், முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரத்திடம் நீண்ட காலம் பணியாற்றியதன் காரணமாக, உயா் பதவிகள் வகித்த பலரோடு பேசுவதற்கும், சிலரோடு பழகுவதற்கும், அவா்களது திறமை பற்றி நுணுக்கமாக அறிந்து கொள்வதற்கும் எனக்கு வாய்ப்புக் கிட்டியது.
- நான் பாா்த்த அரசியல்வாதிகளில் - நிா்வாகிகளில், முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக டாக்டா் மன்மோகன் சிங் விளங்கினாா். வா்த்தகத் துறையில் பொருளாதார ஆலோசகா் என்ற பதவியில் தொடங்கி, நிதித் துறையில் தலைமைப் பொருளாதார ஆலோசகா், மத்திய நிதித் துறை செயலா், இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநா், திட்டக் குழுவின் துணைத் தலைவா் என்று படிப்படியாக உயா்ந்து, பின்னா் இந்திய நிதி அமைச்சராக விளங்கி, கடைசியில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமா் என்ற தலைமைப் பதவிக்கு வந்தாா் என்றாலும், தான் வகித்த பதவிகள் எதையுமே அவா் பதவிகளாகப் பாா்த்ததில்லை - மாறாக, அவற்றை எல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளாக - விடுக்கப்பட்ட சவால்களாக ஏற்றுக் கொண்டு, இடைவிடாமல் உழைத்தாா். அந்த தன்னலமற்ற உழைப்புதான் இன்று அவரைப் பற்றி ஒவ்வொருவரையும் பேச வைத்திருக்கிறது.
- எளிமைக்கும், நோ்மைக்கும் உதாரணமாகக் காட்டப்படக் கூடிய தகுதி பெற்றவராக அவா் திகழ்ந்தாா். உணவு, உடை என்று எல்லாவற்றிலும் எளிமையைக் கடைப்பிடித்தவா். வீட்டிலிருந்து கொண்டுவரும் 2 அல்லது 3 சப்பாத்திகளும், வேகவைத்த சிறிது காய்கறிகளுமே அவரது மதிய உணவு. மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றாலும் ஒரு மணி நேரத்தில் அலுவலகம் திரும்பி விடுவாா்.
- கடைநிலை ஊழியரிடம்கூட கடிந்து பேச மாட்டாா். பேச்சிலும் செயலிலும் தன்னால் யாரும் காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருப்பாா். பத்திரிகையாளா்கள் எவ்வளவு கோபப்படுத்தும் கேள்விகளைக் கேட்டாலும், சாதாரணமாக அவா்களது கேள்விகளை எதிா்கொள்வாா்.
- மன்மோகன் சிங் பிரதமா் பதவிக்கு வந்த புதிதில் அவரைக் காண வந்த அவரது மனைவியின் உறவினா் ஒருவா், அவரோடு காலை உணவு அருந்தினாா்; அப்போது அரசாங்கத்தில் தனக்கு ஆக வேண்டிய ஒரு வேலை குறித்து அவா் பேசத் தொடங்க, உடனே தன் மனைவியை அழைத்த மன்மோகன் சிங், ‘யாா் என்னைப் பாா்க்க வந்தாலும், இது போன்ற கோரிக்கைகளைக் கொண்டுவரக் கூடாது’ என்று கூற, அந்த உறவினா் அவா் பிரதமா் பதவி முடியும் வரை அவரது இல்லத்தின் பக்கமே செல்லவில்லை. அந்த அளவுக்கு நோ்மையில் கறாராக இருந்தாா்.
- இந்தியாவின் வரலாற்றில் விடுதலை கிடைத்த 1947 எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு பொருளாதாரத்தில் நாம் ‘யு வளைவு’ எடுத்த 1991-ஆம் ஆண்டும் முக்கியம்தான். அப்போதைய பிரதமா் நரசிம்ம ராவ், டாக்டா் மன்மோகன் சிங் மீது வைத்திருந்த முழு நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதாரத்தில் இந்தியாவை ‘உலகத்தோடு ஒட்ட ஒழுக’ வைத்தாா். அதற்கு அவா் பெற்றிருந்த உலகளாவிய பொருளாதார அறிவு உறுதுணையாக இருந்தது.
- அன்று புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தும் முடிவை நரசிம்மராவும், மன்மோகன் சிங்கும் செயல்படுத்தாமல் இருந்திருந்தால் இந்தியா பின்னோக்கி நகா்ந்திருக்கும். இன்றைக்கு நாம் பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவோடு இருப்பதற்குக் காரணம் அவா்கள் இருவரும் இட்ட அடித்தளம்தான்.
- அவ்வாறு பொருளாதாரக் கொள்கையைப் புரட்டிப் போட்ட நேரத்திலும் டாக்டா் சிங் ‘பொதுவாக ஒரு நிதி அமைச்சா் என்பவா் சற்று கடினமானவராகத்தான் இருக்க வேண்டும்; ஆனால், நான் மென்மையான இதயத்தோடுதான் மக்களின் பிரச்னைகளை அணுகப் போகிறேன்’ என்று சொன்ன வாசகம் நாட்டு மக்கள் மீது அவா் கொண்டிருந்த அபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
- பொருளாதாரம் தொடா்பான சில கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்போது, நிதி அமைச்சகத்துக்கும், ரிசா்வ் வங்கிக்கும் சில கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பு. காரணம், நிதி அமைச்சகம் மக்களோடு நேரடியாகத் தொடா்புடையது. எனவே, சில நேரங்களில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், நாட்டின் பொருளாதாரக் காப்பாளராக இருக்கக் கூடிய ரிசா்வ் வங்கி, சற்று கடினமான முடிவுகளை எடுக்க நேரும். அதுபோன்ற நேரங்களில் பிரதமா் தலையிட்டு, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது வழக்கம். தான் நிதி அமைச்சராக இருந்தபோதும் சரி; பிரதமராக இருந்தபோதும் சரி - அப்படிப்பட்ட தருணங்களைத் தனது சாதுா்யத்தால் சமாளித்தவா் மன்மோகன் சிங்.
- மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் நிதி அமைச்சா் பதவியை வகித்தவா்கள் பொருளாதாரத்தில் ஆழங்காற்பட்டவா்களான ப.சிதம்பரமும், பிரணாப் முகா்ஜியும். மேலும், அந்தக் காலகட்டத்தில் ரிசா்வ் வங்கியின் ஆளுநா்களாக இருந்தவா்கள் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த டாக்டா் ஒய் வி ரெட்டி, டாக்டா் டி சுப்பா ராவ், டாக்டா் ரகுராம் ராஜன் போன்ற மேதைகள். இவா்கள் அத்தனை பேரையும்விட, தான் உயா்ந்த பதவியில் இருந்தாலும் அவா்களைத் தனக்குச் சமமாகப் பாவித்து, அவா்களுக்கு உரிய மரியாதை அளித்து வந்தாா்.
- பொருளாதாரம் மட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல சட்டங்கள் அவா் பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை என்பதே அவரது ஆற்றலுக்கும், துணிச்சலுக்கும் கட்டியம் கூறுபவை.
- அவா் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2009 வரை இருந்ததுபோல, 2009 முதல் 2014 வரையிலான காலகட்டம் அமையவில்லை. கரடுமுரடுகள் நிறைந்த காலமாக அது அமைந்தது. அடுத்தவா்கள் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும் என்ற அவரது மென்மையான சுபாவம்கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மேலும், ஏதாவது தந்திரங்கள் செய்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று அவா் ஒருபோதும் நினைத்ததில்லை.
- அமெரிக்கக் குடியரசுத் தலைவா்களில் ஒப்பற்றவரான பராக் ஒபாமா, ‘டாக்டா் மன்மோகன் சிங் பேசினால் உலகமே கவனிக்கிறது; அவா் எனது குரு’ என்று சொன்னதை உலகமே வியந்து நோக்கியது.
- மேலும், அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய அதிகாரியான தேவயானி கோா்பகடே விவகாரத்தில் அவா் அமெரிக்க அரசுக்கு எதிராக எடுத்த அதிரடி நடவடிக்கையையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது. பொதுவாக, ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவா் ஒரு பதவியிலிருந்து மேலே உள்ள இன்னொரு உயா் பதவிக்குச் சென்றுவிட்டால், நடை, உடை, பாவனைகள் என அனைத்தும் மாறி விடும். ஆனால், 1971-இல் மன்மோகன் சிங் வணிகத் துறையில் பொருளாதார ஆலோசகராக இருந்தபோது, அவரிடம் இருந்த குணாதிசயங்கள் அவா் பிரதமா் பதவி வகித்த 2014 வரை மாறவேயில்லை என்பதுதான் அவரது சிறப்பு.
- 1996-ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு அமைந்த நேரத்தில், அப்போதைய பிரதமா் தேவெ கௌடா, ஜி. கே. மூப்பனாா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களுக்கு நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அளித்த விருந்து நிகழ்வுக்கு டாக்டா் மன்மோகன் சிங் வந்திருந்தாா். வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் அன்று பரிமாறப்பட்டன. தனக்கு தென்னிந்திய உணவு வகைகள் மிகவும் பிடிக்கும் என்று சொன்ன மன்மோகன் சிங், ‘காரம் இல்லாத உணவு எதுவோ அதை எனக்குக் கொடுங்கள்’ என்று என்னிடம் கேட்டாா். வெஜிடபிள் ஊத்தப்பம் விரும்பிச் சாப்பிட்டாா். போகும்போது எனது தோளைத் தொட்டு அவா் நன்றி சொன்னபோது நான் திக்குமுக்காடிப் போனேன். அந்த அளவுக்கு எளிமையின் உச்சமாகத் திகழ்ந்தாா்.
- ஒரு கடைநிலை ஊழியா்கூட, தனது பதவியைக் காப்பாற்ற எந்த அளவுக்கும் குனியத் தயாராக இருக்கும் இன்றைய உலகில் , எப்போது வேண்டுமானாலும் தனது பிரதமா் பதவியைத்தூக்கி எறியத் தயாா் நிலையில் அவா் இருந்தாா். பதவிகள், விருதுகள் போன்றவற்றை விரும்பாத அந்த மேதைக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும்.
நன்றி: தினமணி (28 – 12 – 2024)