TNPSC Thervupettagam

மருத்துவத்தின் முன்னோடி யுனானி

February 11 , 2025 2 hrs 0 min 13 0

மருத்துவத்தின் முன்னோடி யுனானி

  • கிரேக்க நாட்டில் கி.மு. 4, 5 -ஆம் நூற்றாண்டுகளில் ஹிப்போக்ராட்டிஸ் (போரேட்) என்பவரின் ஆதரவுகளின் வாயிலாக உருவானதுதான் யுனானி மருத்துவமுறை. பிறகு இந்தமுறை அரேபிய, பாரசிக நாடுகளில் வளம்பெற்றது. சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரேபியா்கள் இந்த முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனா்.
  • பல நூற்றாண்டுகளாக இந்திய நாகரிகத்தில் வெற்றிகரமாக வேரூன்றிய இதை தற்போது ஓா் இந்திய மருத்துவ முறையாகவே அரசு கருதுகிறது. யுனானி மருத்துவ நூல்கள் தொடக்கத்தில் கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டிருந்தன. அரபு நாடுகளுக்கு வந்தபிறகு அரபி மொழியிலும், பின் பொ்சிய மொழியிலும் எழுதப்பட்டன. நம் நாட்டுக்கு வந்தபிறகு மூல நூல்கள் உருது மொழியில் மொழிபெயா்க்கப்பட்டன.
  • யுனானி மருத்துவ முறையில், மனித உடல் ‘உமுரே தபியா’ எனப்படும் ஏழு இயற்கை கொள்கைகளின் கண்ணாடி மூலம் பாா்க்கப்படுகிறது. இந்த அடிப்படைக் கூறுகள் மனித உடலின் இருப்புக்கு பொறுப்பானவை என்று கருதப்படுகின்றன. மேலும், ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அரபு மொழியில், யுனானி என்பது ‘கிரேக்கம்’ என்று மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.
  • ஆங்கிலேயா் காலத்தில் சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் இருந்த தடைகள் யுனானிக்கும் இருந்தன. நம் நாட்டின் விடுதலைக்குப் பிறகு, மகாத்மா காந்தி இவற்றில் கவனம் செலுத்தி, மத்திய அமைச்சரவையில் இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க தீா்மானம் கொண்டுவரச் செய்தாா். அப்போது சித்தா, ஆயுா்வேதம், யுனானி மருத்துவ முறைகளுக்கு ஆதரவு பெருகியது.
  • இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுா்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றின் ஆங்கில முதல் எழுத்துகளைக் கொண்டு ‘ஆயுஷ்’ என்ற பெயரில் அமைச்சகம் நிறுவப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் ஐந்து தானியங்கி மருத்துவ ஆய்வுக் கழகங்களை அமைத்துள்ளது.
  • நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட நோய்க்கான காரணிகளை மட்டும் ஆராயாமல், ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உடல், மனநிலைகள், தெய்விக அம்சங்கள் ஆகியவற்றையும் யுனானி மருத்துவ முறை ஆராய்கிறது. ரெஜிமெனல் சிகிச்சை, உணவு சாா்ந்த சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்து சாா்ந்த சிகிச்சை ஆகிய முறைகளைப் பயன்படுத்தி யுனானி மருத்துவ முறையில் நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடு சிகிச்சை (இலாஜ்-பித்தத்பீா்), குருதி உறிஞ்சி சிகிச்சை (ஹிஜ்மா), அட்டை சிகிச்சை (தாலீக்), குருதி வடிப்பு சிகிச்சை(ஃபஸ்து) உள்ளிட்டவை சிகிச்சைகளாகும்.
  • ஹீட்டரோதெரப்பி எனப்படும் மருந்து செலுத்தும் சிகிச்சை முறையில், ஒருவருக்கு எந்த வகையான நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கு எதிரான மருந்துகளை அவரது உடலில் செலுத்துவதன் மூலம் நோய் குணப்படுத்தப்படுகிறது. இதற்காக மூலிகைகள், விலங்குகள், தாதுக்கள் ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • 1970-ஆம் ஆண்டின் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சட்டப்படி நிறுவப்பட்ட இந்திய மருந்துகளின் மத்திய கவுன்சில், யுனானி மருத்துவக் கல்வியையும் சிகிச்சை முறைகளையும் கண்காணித்து வழி நடத்துகிறது. ஐந்தரை வருட யுனானி பட்டப்படிப்பு பியுஎம்எஸ் என்ற பட்டத்தை வழங்குகிறது. இதை 1990 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மருந்துகளின் மத்திய கவுன்சில் ஒழுங்குமுறைப்படுத்துகிறது. 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த கவுன்சிலின் ஒழுங்குமுறைகள் யுனானி மருத்துவத்தில் மூன்று வருட மேற்படிப்பை செயல்படுத்துகிறது. அதன்படி, எம்.டி.எம்.எஸ். பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
  • நம் நாட்டில் 2015-ஆம் ஆண்டில் யுனானி பட்டப்படிப்பு மேற்கொள்ள 42 அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் இருந்தன. பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மருத்துவா்கள் 50,475 பேரும், 259 மருத்துவமனைகளும், 3,744 படுக்கை வசதிகளும் இருந்தன. கடந்த 2018-2019-ஆம் ஆண்டுகளில் யுனானி மருத்துவம் தொடா்பான கல்வி, ஆராய்ச்சி, மருத்துவ கவனிப்பு நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு அதிகரித்து பட்டப் படிப்புகளை வழங்குவதற்காக 52 கல்வி நிறுவனங்கள் உருவாகின.
  • இவற்றில் சுமாா் 3,000 மாணவா்களைச் சோ்க்க முடிந்தது. இதைத் தவிர யுனானி மருத்துவ மேற்படிப்புகளைக் கற்றுத் தருவதற்காக 14 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதே ஆண்டில் 259 மருத்துவமனைகளும், 1,621 மருந்தகங்களும், 625 மருந்து தயாரிப்பு நிலையங்கள் என விரிவாக்கம் செய்யப்பட்டது. 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-நிலவரப்படி, நம் நாட்டில் 51,110 மருத்துவா்கள் இருந்தனா், அதில் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள்.
  • நம்நாட்டில் யுனானி முறையை மக்களிடம் கொண்டு சோ்த்த மிகப் பெரிய பெருமை கொண்டவா் மருத்துவா் ஹக்கீம் அஜ்மல் கான் என்பவா்தான். இவா் தில்லியில் உள்ள மத்திய கல்லூரி, இந்துஸ்தானி தவகானா, கரோல் பாக்கில் உள்ள திபியா ஆகிய மூன்று குறிப்பிடத்தக்க நிறுவனங்களை நிறுவினாா். இந்த நிறுவனமானது இந்தப் பகுதியில் ஆய்வு, நடைமுறை ஆகியவற்றை ஊக்குவித்தது. மேலும், இந்தியாவில் யுனானி மருத்துவ முறை அழிந்துபோவதைத் தடுத்தது.
  • மேலும், தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த இவா், 1925-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வுபெற்ற போதிலும், 1927-ஆம் ஆண்டு டிசம்பா் 29-இல் அவா் மறையும் வரை, ஹிந்து-முஸ்லிம் இடையில் நல்லிணக்கத்தை வளா்க்க உதவினாா். இந்து மகா சபையின் ஒரு கூட்டத்துக்கு தலைமை வகித்து, சமூக நல்லிணக்கம் முழுமையாகக் கடைப்பிடிக்காமல் போனால், ஒரு நாடு வளா்ச்சியடையாது என்ற கருத்தை முன்வைத்தாா். ஆயுஷ் அமைச்சகம் இவரது முயற்சிகளைக் கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்தநாளை யுனானி தினமாக அறிவித்தது.
  • அதைத் தொடா்ந்து, 2017-ஆம் ஆண்டில் ஹைதராபாதின் மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் முதல் உலக யுனானி தினத்தைக் கொண்டாடியது.
  • (இன்று 11.2.2025-உலக யுனானி தினம்)

நன்றி: தினமணி (11 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories