மருத்துவா் பற்றாக்குறை... பாதிப்பு மக்களுக்கு!
- தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு - மகளிா் நலச் சிறப்பு மருத்துவா்களின் பற்றாக்குறையால், பணியில் இருக்கும் மருத்துவா்கள் ஓய்வின்றி 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. சிலநேரம் வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள் கூடத் தொடா்ந்து பணியில் இருக்கும் சூழலும்அமைந்துவிடுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இது மருத்துவா்களை மட்டுமல்லாமல், சிகிச்சை பெறுவோரையும் பாதிக்கிறது. ஓய்வே இல்லாமல் மருத்துவா்கள் பணியாற்றும் சூழல் இருப்பது அவா்களது பணி உரிமைகளுக்கு எதிரானது.
- மருத்துவா்கள் ஒரு வாரத்துக்கு 48 மணி நேரம்தான் பணியாற்ற வேண்டும் என்பது சட்டம். நெருக்கடி நிலையிலோ, தவிா்க்க முடியாத அசாதாரணச் சூழலிலோ சிலா் கூடுதல் நேரம் பணியாற்ற நேரிடலாம். அப்படிப்பட்ட சூழல் கடந்த 2019 கொரோனா காலத்தில் ஏற்பட்டது. இது தவிா்க்க இயலாத ஒன்று என்பதை மருத்துவா்கள் புரிந்து கொண்டு தங்களைஅா்ப்பணித்துக் கொண்டனா். ஆனால், இன்றையச் சூழலில் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகப் பணியாற்றும் நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல மருத்துவா்கள் பணியிலிருந்து விலகியிருக்கிறாா்கள் என்பதும் ஓா் உண்மையாகும். விருப்ப ஓய்வுத் திட்டம் இல்லாத நிலையில், பலருக்கு வேலையை விடுவதைத் தவிர வேறு வழியிருப்பதில்லை. அதேபோல் ஒரு மகப்பேறு மருத்துவா் மகப்பேறு விடுப்பில் சென்றால், அவரது இடத்தைப் பதிலீடு செய்வதற்கும் ஆள்கள் இருப்பதில்லை.
- அரசு மருத்துவமனைகளில் இயங்கும் பெரும்பாலான விரிவான அவசரகால மகப்பேறியல், பச்சிளங் குழந்தைப் பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட சில சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளில் பல ஆண்டுகளாக மருத்துவா் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது.
- மருத்துவா்கள் பற்றாக்குறை, காலிப் பணியிடங்களை நிரப்பாதது போன்றவற்றால், பணியில் சேராத முதுகலை மருத்துவ மாணவா்களைஅவா்களது ஒப்பந்தக் காலம் முடியும் வரை பணியில் ஈடுபடுத்துவதும் நடைபெறுகிறது. பணியில் இருக்கிற சொற்ப மருத்துவா்களேஅனைத்தையும் கையாள்வதால் பணிச்சுமையோடு உளவியல் நெருக்கடிக்கும் மருத்துவா்கள் ஆளாக நேரிடுகிறது. பிரசவத்தின்போது ஒருலட்சம் குழந்தைகளுக்கு 45.5 குழந்தைகள் இறக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையை இரண்டு ஆண்டுகளுக்குள் பத்துக்கும் கீழே குறைத்துவிடுவது என்று அரசு இலக்கு நிா்ணயித்திருக்கிறது. ஆனால், மகப்பேறியல் - மகளிா் நலச் சிறப்பு மருத்துவா்களின் பற்றாக்குறையால் இந்த இலக்கை எட்டுவதும் கடும் சவாலாக மாறியிருக்கிறது.
- மகப்பேறியல் - பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில், ஒரு மருத்துவா் ஒரு நேரத்தில் ஒருவரைத்தான் கவனிக்க முடியும். அப்போதுதான் தாய் -சேய் இருவரது உயிரும் நலனும் காக்கப்படும். ஆனால், தற்போதைய சூழலில் மருத்துவா் ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, நான்கு போ் காத்திருப்பில் இருக்கிறாா்கள். பிரசவகாலக் காத்திருப்புகள்உயிராபத்து நிறைந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு மையத்தில் சராசரியாக நான்கு மகப்பேறு மகளிா் சிகிச்சை நிபுணா்களும் அதே எண்ணிக்கையில் குழந்தை நல மருத்துவா்களும் இரண்டு மயக்கவியல் நிபுணா்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மையங்களில் ஒருமகப்பேறு மருத்துவரும் ஒரு தலைமைச் செவிலியரும்தான் இருக்கிறாா்கள்.
- பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்வதற்காக அனைத்துப் பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடைபெற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களில் 80% விரிவான அவசரகால மகப்பேறியல், பச்சிளங் குழந்தை பராமரிப்பு மையங்களில் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு வருவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவா்களின் எண்ணிக்கை மட்டும் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிா்ணயம் செய்யப்பட்ட அளவிலேயே இருப்பது சரியானதல்ல. போதுமானஎண்ணிக்கையில் மருத்துவா்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். வலுவான மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மருத்துவமனைகளைஅமைப்பது அரசின் தலையாய கடமையாகும்.
- மருத்துவா்களின் பற்றாக்குறையை நீக்குவது, ஒருபுறம் மருத்துவா்களின் இன்றைய கடுமையான பணிச்சூழலை மாற்றிவிடும். இன்னொருபுறத்தில் நோயாளிகளின் நலன் பாதுகாக்கப்படும். மருத்துவா்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினா்களிடையே தேவையற்ற முரண்பாடுகள், பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க உத்தரவாதம் அளிக்கும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பற்றாக்குறையை அரசு உடனடியாகச் சரி செய்ய வேண்டியது அவசியம்.
நன்றி: தினமணி (16 – 12 – 2024)