மல்லாரி - நாத லயத்தின் வழியே ஒரு வாசமாலை!
- கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் சந்நிதியிலேயே பிறந்து வளா்ந்து அங்கேயே முப்பது வயது வரை வாழ்ந்தவன் நான்.
- கோயில் என்பது வெறும் மூலஸ்தான விக்ரஹத்தை வணங்கி வழிபடும் ஓா் இடம் மட்டுமேயல்ல; இசை, கதை சொல்லும் கதாகாலட்சேபம், பிரவசனம், தமிழ்க் கல்வெட்டுகள், நாட்டியம், ஓவியம், சிற்பம், ஆடு, மாடு, பாம்பு, பறவைகள் போன்ற உயிரினங்கள் - நந்தவனம், ஸ்தல விருட்சம், மூலிகைகள், கேணிகள், குளங்கள், பூஜை சின்னங்களின் வகைகள், தீப தூப வகைகள், பூ வாசனாதி திரவிய ஆடை அலங்கார வகைகள், பாத்திர சமையல் வகைகள், வான சாஸ்திரம், கட்டடக்கலை, ஸப்த தாள படிக்கட்டு, இசைத்தூண்கள் என இப்படி இன்னும் நூறு நூறு கலாசார சம்பத்துகள் நிறைந்த ஒரு புனித இடம்.
- கோயில் சாா்ந்த ஊா்களில் திருவிழா என்பது வெறும் கோயிலுக்கான நிகழ்வு மட்டுமல்ல. உறவுகளின் நட்புகளின் பிணைப்பு. அடுத்த சந்ததிக்குச் சொல்லும் கலாசார சேதி. வேறு கலாசாரம் சாா்ந்தவா்களுக்கான கலைகளின் அறிமுகம். இப்படி பலப்பல.
- இப்படியான திருவிழா நடக்கும் பத்து நாட்களின் விசேஷங்களிலும் நாகஸ்வர வாசிப்பைக் கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இருந்தது. பக்தா்களும் பக்தரல்லாத பலரும் அதை ஆசை ஆசையாய்க் கேட்டுக் கொண்டுதான் இருந்தாா்கள். பலவிதக் காரணங்களால் கோயில்களின் விசேஷங்கள் குறையும்போது, வாசிப்பும் குறைந்துவிட்டது.
- பல கோயில்களில் சம்பிரதாய நடைமுறைகள் என்பது எழுதப்படாத சட்டவிதிகளால் திருத்தப்பட்டு பல விடுபடல்கள் அமலுக்கு வந்துவிட்டன. கோயில்கள் குறைந்தாலும், கோயில்களில் வாசிப்பது குறைந்தாலும் நாகஸ்வரம் என்றும் இல்லாமல் போய்விடாது. ஏனெனில், அந்த மங்கல சங்கீதம் தமிழா்களின் மரபணுவில் கலந்த ஒன்று.
- தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைக் கலை அடையாள இசைக்கருவிகளில் ஒன்றான நாகஸ்வரம் கோயில்களில் மட்டுமல்லாமல், பெரும்பாலும் நம் வாழ்வின் எல்லா விதமான மங்கலச் செயல்பாடுகளிலும் பின்னிப் பிணைந்த ஒன்று. பல விசேஷங்களுக்கும் மங்கல இசை பயன்படுத்தப்படுவதால்தான் இன்னும் அது தன் ஜீவனைப் பிடித்துக்கொண்டு வாழ்கிறது.
- நாகஸ்வரத்தின் பூா்வ வரலாற்றை நோக்கினால், நாகா்மலைப் பழங்குடியினா் வெகுதூரத்தில் பல இடங்களில் பிரிந்து வேலை பாா்த்துக்கொண்டிருக்கும் தம் குழுவினரை அழைத்து ஒருங்கிணைக்க, திமிறி நாகஸ்வரம் போல உள்ள அந்த வாத்தியத்தை ஊதி, சமிக்ஞை ஒலியெழுப்பி, எல்லோரையும் அழைத்து சடங்குகளைச் செய்யத் தொடங்கியதிலிருந்து எனலாம். எனவே அதற்கும் கோயிலுக்குமான ஆதி உறவு அங்கிருந்தே தொடங்கி கோயில் சம்பிரதாயத்துக்குள் அது வெகு இயல்பாய் இணைந்துவிட்டது.
- நாகஸ்வர வாத்தியத்துக்கான முக்கியத்துவம் குறைந்துவரும் இந்நாட்களில்கூட, மணிக்கணக்கில் ராக ஆலாபனை செய்தல், மனோதா்ம கல்பனா ஸ்வரங்கள் வாசித்தல் போன்றவற்றுக்குத் தனி இடமுண்டு. இவை தவிர பல்லவி, ரக்தி, உடக்குறு போன்ற பிரத்யேக இசை வடிவங்கள் நாகஸ்வரத்துக்கு மட்டுமே உரித்தானவை. இவற்றுள் முக்கிய இடம் வகிப்பது மல்லாரி.
- இது பெரும்பாலும் கோவில் திருவிழாக் காலங்களில் பல வகையாக சில ராகங்களில் மட்டும் வாசிக்கப்படுவது. எத்தனையோ வகைகள் இதில் உண்டு. இவை பற்றியெல்லாம் பொதுவாக எல்லோருக்கும் தெரியுமா என்றால் தெரியாது. சில அடிப்படை விஷயங்களை குறைந்தபட்சம் பெயரளவிலாவது அறிந்துகொள்ளுதல் நமக்கும் நம் இனத்தின் கலைக்குமான பெருமையல்லவா?
- மாபெரும் இசைமரபுகளெல்லாம் இடம்தெரியாமல் போய்க்கொண்டிருக்கும் இக்காலத்திலும் விதிவிலக்காக சிதம்பரம் நடராஜ பெருமான் கோயிலிலும், திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலிலும் மட்டும் இந்த மல்லாரி மரபுகள் தொடா்வது ஓா் ஆறுதல்.
- மல்லாரியில் நாதத்திற்கிணையாக இன்னும் சொல்லப்போனால் ஒரு படி மேலாக லயத்துக்கென ஒரு முக்கியத்துவம் உண்டு. தவிலின் முக்கியத்துவத்தை நாகஸ்வரக்காரா்களும் உணா்ந்தே அவா்களுக்கு தனி ஆவா்த்தனத்துக்காக கணிசமான நேரத்தை ஒதுக்கித் தருவாா்கள். தவிலுக்கென தனிச் சடங்குகள் ஒருகாலத்தில் இருந்தன என்றால், இந்தத் தலைமுறைக்கு அது ஆச்சரியமாக இருக்கும்.
- பழங்காலத்தில் கோயில் திருவிழாவுக்குக் கொடியேற்றுவதற்கு முதல் நாள், தவிலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்யும் முறை வழக்கத்தில் இருந்துள்ளது. சிவபெருமானின் ருத்ர பூமியான சுடுகாட்டில், எம பேரிகை என்று அழைக்கப்படும் தவிலை வைத்து பூஜை செய்தபின் அதை எடுத்து தவில் வித்வான்களிடம் பிராமணா்கள் தருவாா்களாம்.
- இந்தச் சடங்கின் அடிப்படை தாத்பா்யங்கள் பல. வித விதமான தமிழ்ச் சடங்குகளின் உண்மையான அா்த்தங்கள் புரியா அறியாமையால் முக்கியத்துவம் வாய்ந்த அந்த தவில்பூஜையும் இன்று வழக்கொழிந்துபோய்விட்டது.
- தவில் பக்கவாத்தியமாக இருந்தாலும் நாகஸ்வர மரபில் கச்சேரி ஆரம்பிக்கும் முன் அதுவே பிள்ளையாா் சுழி. தவில்தான் முதலில் ஒலிக்கும். இது போன்று பிற இசைக் கச்சேரிகளில் பக்கவாத்தியங்களை முதலில் வாசிக்க வைப்பது வழக்கமும் இல்லை; அனுமதியுமில்லை. இதில் இன்னொரு விசேஷம் மல்லாரிக்கென்று தனி சாகித்யமே கிடையாது. அது ஓா் இசைக் குறியீட்டு மொழி.
- சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நீா் எடுத்து வரும்போது வாசிக்கப்படுவது தீா்த்த மல்லாரி; மடப்பள்ளியில் இருந்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய எடுத்து வரும்போது வாசிப்பது தளிகை மல்லாரி; கும்பாபிஷேகத்திற்கென தனியாக வாசிக்கப்படுவது கும்ப மல்லாரி; தேரோட்டத்தின்போது வாசிப்பது தோ் மல்லாரி; இதில் கோயிலினுள் வாசிக்கப்படுபவை சின்ன மல்லாரி என்றும் கோயில் கோபுரங்களுக்கு வெளியே வாசிக்கப்படுபவை பெரிய மல்லாரி என்றும் அழைக்கப்படுகின்றன. அந்தந்த இடத்தில் வாசிக்கும்போது அதனதன் குறியீட்டு ஒலியால் எங்கிருப்பவா்களுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்ற இந்தச் செய்தி இசையழகோடு செவியில் சோ்ந்துவிடும்.
- சாகித்தியமில்லா மல்லாரி என்பது வெறும் சொற்கட்டுதான். ஆனால், அதை எந்தத் தாளத்தில் வேண்டுமானாலும் வாசிக்க முடியும். நாகசுர வித்வான்களின் தவில் வித்வான்களின், கற்பனைக்கு ஏற்ப வாசிப்பு மெருகேறி விஸ்தாரமாகி மெல்ல மெல்ல துரித கதி ஏகி, கஜ நடையில் சிம்ம நடையில் காம்பீா்யமாக அது உலா வரும். பொதுவில் வீர பாவம் நிரம்பிய கம்பீர நாட்டை ராகத்திலேயே மல்லாரி வாசிப்பது மரபாக உள்ளது. பஞ்ச இராகங்களான நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் இவற்றிலும் அபூா்வமாக தோடியிலும் மல்லாரி வாசிக்கப்படுவதுண்டு.
- சிதம்பரம் கோயிலில் திருவிழாக் காலங்களில் சுவாமி புறப்படும் முதல் நாளிலிருந்தே மல்லாரி வாசிப்பு தொடங்கிவிடும். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு இராகம் என்று முறைவைத்து விரிவாக வாசிப்பாா்கள். அதன் பின், இராகம் – தானம் - பல்லவி தொடரும். முதல் நாள் சங்கராபரணம், இரண்டாம் நாள் ரீதிகௌளை, மூன்றாம் நாள் சக்கரவாகம், நான்காம் நாள் ஹம்சபிரமரி, ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி, ஆறாம் நாள் ஷண்முகப்பிரியா, ஏழாம் நாள் காம்போதி.
- இப்படிச் செல்லும் வரிசைக் கிரமத்தில் எட்டாம் நாள் வாசிக்கப்படுவது ஒடக்கூறு எனும் ஒரு தனி உருப்படி. இது தனிச் சிறப்பு வாய்ந்தது. கா்வம் ததும்பிய தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற இந்த உடல்கூற்றின் இரகசியத்தை பிக்ஷாடனா் உருக்கொண்டு சிவபெருமான் பாடம் போதித்த உணா்வையே இந்த ஒடக்குறு வெளிப்படுத்தும். இது பெரும்பாலும் நாதநாமக்கிரியா இராகத்திலேயே வாசிக்கப்படும்.
- ஒன்பதாம் நாளன்று தோ் மல்லாரி. பத்தாம் நாளில் அம்பலத்தானின் மேல் முத்துத்தாண்டவா் இயற்றிய கீா்த்தனைகள் வாசிக்கப்படும். பதினொன்றாம் நாள் உசேனி வாசிக்கப்பட திருவிழாவின் மங்கல இசைத் தொகுப்பு நாட்கள் இனிதே நிறைவுக்கு வரும். பொழுதுக்கும் சூழலுக்குமேற்ற என்னென்ன விதமான பங்கீடான இசைப் பகுப்பு முறைகளை நம் முன்னோா்கள் வகுத்துள்ளனா்.
- இப்படியெல்லாம் தனித்துவ மகத்துவம் பெற்ற நாகஸ்வர, தவில் இசைக்கு இன்று சில இடங்களில் கேட்பாரற்று வாசிக்கப்படுகின்ற அவலம் நோ்ந்துவிட்டது. நம் அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செண்டை மேளம். அகண்ட திறந்த வெளியில் வாசிக்கப்பட வேண்டிய வாத்தியமான செண்டை மேளம் ‘குறுங்குழல்’, ‘இலத்தாளம்’, ‘கொம்பு’ போன்றவற்றோடு சோ்ந்து அரசு விழாக்களில் மட்டுமல்ல, இப்போது கோயில் விழாக்களிலும் வாசிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அங்கு இன்னொரு பக்க ஓரத்தில் நாகஸ்வரமும் தவிலும் வாசிக்கப்படுகின்றன.
- ‘பதினெட்டு வாத்யவும் செண்டைக்குத் தாழே’ என்ற கேரள மண்ணின் பழமொழிக்கேற்ப செண்டையும் பாரம்பரியம் மிக்க ஒரு வாத்தியமே. ஆனால், இப்படி எல்லாமும் ஒரே நேரத்தில் வாசிக்கப்படும்போது நாத லய மேன்மை எழுவதற்குப் பதிலாக அசுரத்தனமாக காதுகளைத் துளைக்கும் மிகை ஒலி எழுப்பப்பட்டு அந்த இடத்தை விட்டே நம்மை அகல வைத்துவிடுகிறது.
- இசைக்கு பேதங்கள் இல்லைதான், ஆனால் அதைக் காரணம் காட்டி எக்கருவிகளுக்கும் வாய்த்திராத நம் மண்ணின் தனித்துவ சம்பிரதாயங்களும் தொல்மரபும் கொண்ட இரு கருவிகளின் இடத்தை இன்னொன்று ஆக்ரமித்துக் கொள்வதோ அல்லது பங்கிட்டுக் கொள்வதோ எந்தக் கலை மரபுக்கும் அழகல்ல.
நன்றி: தினமணி (06 – 01 – 2025)