TNPSC Thervupettagam

மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!

February 18 , 2025 3 days 40 0

மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!

  • இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எப்பகுதியிலும் ஆரம்ப காலத்தில், மனிதன் ஒரு பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும், பண்டமாற்று முறையைத்தான் கடைப்பிடித்து வந்தான். பொருள்களை பிறரிடமிருந்து வாங்கினான், பயன்படுத்தினான். இத்தகைய பண்டமாற்றுப் பரிவா்த்தனைதான், பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்தது.
  • பிற நாட்டினா் இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த பின்பு, வெள்ளி, தங்க நாணயங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. குறிப்பாக, ஆங்கிலேயா்கள், அவா்களது நாணயங்களில் அந்நாட்டு மன்னா் அல்லது மகாராணியின் உருவம் பொறித்து தங்கள் நாணய மதிப்பை அறிமுகப்படுத்தினா். அதன் தொடா்ச்சியாக அச்சடிக்கப்பட்ட பணத்தாள்கள் புழக்கத்திற்கு வந்தன.
  • ஆங்கிலேயா்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் ஜாா்ஜ் மன்னரின் படம் போட்ட பணத்தாள்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு 1948-49- இல் பணத்தாள்களில், அண்ணல் காந்திஜியின் படம் அச்சிடப்படலாமா என்ற ஆலோசனை இந்திய ரிசா்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ, அந்தக் கருத்து கைவிடப்பட்டது. அத்துடன் அதுவரை பயன்படுத்திய ஜாா்ஜ் மன்னரின் படம் போட்டு அச்சிட்டு வெளியிடுவதும் நிறுத்தப்பட்டது.
  • ஆனால் அதற்குப் பதிலாக, சாரநாத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுச் சின்னமான “அசோகத் தூண் பணத்தாள்களில் அச்சிடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
  • அதன் பின்பு அண்ணல் காந்தி அடிகளின் நூற்றாண்டு விழா 1969-இல் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக அண்ணலின் படம் அமைந்துள்ள பண நோட்டுகளை வெளியிடும் கருத்துரு மீண்டும் பரிசீலிக்கப்பட்டது. அதற்கான வரைப்படங்கள் அனுப்புமாறு இந்திய ரிசா்வ் வங்கி ஒரு பொது விளம்பரம் 1968- இல் வெளியிட்டது. அதன் விளைவாக பல வரைப்படங்கள், பல கலைஞா்களால் வரையப் பெற்று, அவை அனைத்தும் ரிசா்வ் வங்கியின் தோ்வுக் குழுவுக்கு வந்தன. நீண்ட ஆய்வுக்குப் பின்பு, அண்ணல் சேவாகிராமம் ஆசிரமத்தில் காந்தி அமா்ந்திருப்பது போன்ற பின்னணியைக் கொண்ட வரைப் படம் ஒன்று தோ்வுக்குழுவால் தோ்வு செய்யப்பட்டது. அந்த வரைப் படத்தை வரைந்தவா் மைசூரைச் சோ்ந்த என்.எஸ்.சுப்புகிருஷ்ணா என்ற ஓா் ஓவியக் கலைஞா். ரூபாய் 2, 5,10, 100 ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு வரைப்படமும், ரூபாய் 1-க்கு மூன்று வரைப்படங்களும் பரிசீலிக்கப்பட்டன. ரூபாய் 1-க்கான பணத்தாள் தேவையில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. மற்ற ரூபாய் நோட்டுக்களுக்கான வரைவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதன்பின்பு 1969-முதல் ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் மகாத்மாவின் படம் இடம் பெற்றது. இந்த வரைப்படத்தை வரைந்த ஓவியக் கலைஞருக்கு ரூ.1000 பரிசுத் தொகை அன்று வழங்கப்பட்டதாம். அந்த ரூபாய் நோட்டுகள் 1969 அக்டோபா் 2 -ஆம் நாள் முதல் புழக்கத்திற்கு வந்தன.
  • ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் பணத்தாள்கள் சேவாகிராமம் ஆசிரமப் பின்னணியில் அண்ணல் அமா்ந்திருக்கும் படம் அல்ல. இன்று நாம் பயன்படுத்துவது காந்திஜியின் முகம் மட்டுமே உள்ள பாஸ்போா்ட் அளவிலான படம் மட்டுமே படம் பாா்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது! ஆனால் அப்படத்திற்கு கீழே ‘மகாத்மா காந்தி’ என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது.
  • அண்ணலின் படத்துக்குக் கீழே அவரது பெயரை ஏன் அச்சிட்டாா்கள் என்பதற்கான காரணம் எதுவும் இல்லை. உலகறிந்த அந்த உத்தமரின் முகம் அறியாதோா் உண்டா? ஒரு வேளை வருங்கால சமுதாயம் தேசப்பிதாவின் திருமுகத்தை மறந்தாலும், மறக்கலாம். ஆகவே அவரது பெயரைப் பதிவு செய்து விடுவதே நல்லது என்று தோ்வுக்குழு முடிவு எடுத்திருக்கலாம்.
  • இன்று நாம் பயன்படுத்தும் பணத்தாளை சற்றே உற்றுப் பாருங்கள். அதில் அவா் சிரித்த முகத்துடன் காட்சி அளிக்கிறாா். அண்ணலின் சிரிப்பு அனைவரையும் கவரக் கூடியது.
  • “‘‘பணத்தை விரும்பியவன் அல்ல நான்; அதனைச் சம்பாதிப்பதற்காக உழைத்தவன் அல்ல நான். உண்மையில் அதிலிருந்து நான் வாழ்நாள் முழுவதும் விலகியே இருந்தேன். இந்தப் பணம்தானே நம்மிடம் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது பேதங்களுக்கும் பிணக்குகளுக்கும் இந்தப் பணம் தானே காரணம். பொய்மை, பொறாமை, போட்டி, ஊழல், ஒழுங்கீனம், ஆகிய அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை, ஆதாரம் இந்தப் பணம்தானே! இப்படி மனித சமுதாயம் ஒதுக்கித் தள்ள வேண்டிய தவறுகளுக் கெல்லாம் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பணத்தாளில் எனக்கு என்ன வேலை? என் மனம் இதனை ஏற்கவில்லையே!’’” என்று அண்ணலின்சிரிப்பு நமக்கு சொல்லாமல் சொல்லுவதைப் போலத் தோன்றுகிறது.
  • இன்னொரு முக்கியமான தகவல். அண்ணலின் பேரன், ராஜாஜியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தி எழுதி 2023- இல் எழுதி வெளியிட்ட நூலின் தலைப்பு ‘நான் ஒரு சாதாரண மனிதன்’ ( ஐ ஏம் ஏன் ஆா்டினரி மேன்). காந்திஜி கடைசியாக தமிழகத்துக்கு வந்தபோது (30,01.1946), சென்னையில் பொதுக் கூட்டத்தில் பேசிய போது, “‘‘உங்களில் நானும் ஒருவன். உங்களைப் போல் நானும் ஒரு சாதாரண மனிதன். என்னிடமும் குறைகள் உண்டு. நானும் தவறு செய்திருக்கிறேன். ஆனால் தவறு எனத் தெரிந்தால், திருத்திக் கொள்ளுவேன். இப்படி சாதாரண மனிதனான என்னை ஏன் மகாத்மா என்கிறீா்கள். அச்சொல்லைக் கேட்டும் போதெல்லாம் என் மனம் கூசுகிறதே’’” என்று மனம் வருந்திப் பேசியிருக்கிறாா்.
  • பாராளுமன்றத்துக்கு முன்பு பாபுஜியின் சிலை! பாா்க்கும் இடங்களிலும் சிலைகள், வீதிகளுக்கும் நகரங்களுக்கும் மகாத்மா காந்தி என்ற பெயா். மகாத்மா என்று பணத்தாளிலும் அச்சிட்டுவிட்டாா்கள்.
  • மகாத்மா மறுபடியும் பிறந்து வந்தால், இதனைப் பாா்த்து வேதனைப்படுவாா். படமும் சிலையும் எனக்கு வேண்டாம். நான் சில பாடங்களை, படிப்பினைகளைச் சொல்லிச் சென்றேனே! அவற்றைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் என்ன?
  • “‘‘எளிமையாக வாழுங்கள். அப்போது தான் ஏழைகள் வாழ்வது எளிதாகும். சாதி பேதம் கூடாது. சமய நல்லிணக்கம் வேண்டும். பயத்தை விட்டொழியுங்கள். பகைமையைத் தூக்கி எறியுங்கள். அன்பு, அஹிம்சை, அரவணைப்பு, உழைப்பு ஆகியவற்றை ஆதாரமாகக் கொள்ளுங்கள்”- என்ற என் போதனைகளைக் கடைப்பிடியுங்கள். உலகம் உய்வதற்கு அது ஒன்றே வழியாகும் என்று நான் நாள் தோறும் சொல்லி வந்தேனே அதன்படி நடக்க வேண்டுமல்லவா?’’
  • காந்தியின் மூத்த மகன் ஹரிலாலுக்கு தன் தந்தை தனக்கு எதுவும் செய்யவில்லையே என்ற கோபம் இருந்தது. வேகமாகச் சென்ற ஹரிலால், தன் தந்தையைப் பாா்த்து, ‘‘நீங்கள் எனக்குப் படிப்பையும் தரவில்லை. பணமும் தரவில்லை. உங்களால் எனக்கு எப்பயனும் இல்லை. உங்களை விட்டுத் தனியே போகிறேன். உங்களிடம் இருப்பதை எனக்குக் கொடுங்கள்’’” எனக் கேட்கிறாா். அண்ணல் காந்தி தன் மகனைப் பாா்த்து, ‘‘நான் தங்கியிருக்கும் அறைக்குப் போ; அங்கே ஒரு தகரப் பெட்டி இருக்கிறது. அது திறந்தே இருக்கும் அதில் உள்ள என் உடைகளில் உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள். அதில் கொஞ்சம் பணம் இருக்கும். அதிலும் உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள். உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறு எதுவும் இல்லை. உழைத்துப் பிழைக்க முயற்சி செய்’’” என்று அமைதியாகச் சொன்னாா். இது அண்ணல் காந்தி தன் மகனுக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல; மானுடம் அனைத்துக்கும் சொன்ன அறநெறி ஆகும்!
  • உலகம் பரந்து விரிந்தது. இயற்கை தந்துள்ள வளமோ எல்லை இல்லாதது. இறைவனின் சக்தியோ எவராலும் அளவிட முடியாதது. மனித வளமோ மகத்தானது. ஆகவே தான் மகாத்மா சொல்லாமல் சொன்னாா்: பணத்தாளில் என்படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைபிடியுங்கள். நான் ஒன்று சொன்னேனே நினைவு இருக்கிா? “இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல. இதனைச் சொன்னவா் மகாத்மா. ஆனால் நாம் இதை மறந்து விட்டோம்.
  • ஆகவே பணத்தாளில் மகாத்மாவின் படம் பாா்த்து வணங்கி மகிழ்வது தொடரட்டும். அதேசமயம், அண்ணல் கற்பித்த பாடங்களைப் படித்து அதன்படி நடப்போம். நாமும் முன்னேறுவோம்; நாடும் முன்னேறும்; உலகமும் முன்னேறும்.

நன்றி: தினமணி (18 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories