TNPSC Thervupettagam

மாறுமா, தேறுமா?

February 2 , 2025 6 hrs 0 min 6 0

மாறுமா, தேறுமா?

  • சமீப காலமாகச் சமூக ஊடகங்களில் நான் அதிகமாகப் பார்ப்பது வெறுப்புணர்வு மட்டுமே. ஒருவர் தன்னுடைய வாழ்க்கை முறையை வீடியோவாகப் பதிவு செய்தால் அதற்கும்கூட மிக ஆபாசமான பதிலுரைகளை நிறையப் பேர் பதிவிடுகின்றனர். எதனால் இவ்வளவு வன்மம், இவ்வளவு பழியுணர்வு எனச் சத்தியமாகப் புரியவில்லை. இதைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே சமூக ஊடகங்களில் பாலியல் வக்கிரங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக நால்வர் மீது போக்சோ சட்டம் பாய்ந்திருக்கிறது. ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அவர்களைப் பற்றி நான் அறிய ஆரம்பித்தேன்.
  • சமூக வலைதளங்களில் ‘கன்டென்ட்’ என்கிற வார்த்தை அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், இல்லாத ஒன்றை இருப்பதுபோல உருவாக்கிப் பேசுகிறார்கள்; அது ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல மக்களுக்குத் தோன்றுவதால் தொடர்ந்து அதைப் பார்க்கிறார்கள். அவர்களின் ‘கன்டென்ட்’ என்னவாக இருக்கிறது என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் குடும்பச் சண்டைகளையும் பாலியல் வக்கிரங்களையும் அதில் இணைத்துப் பேசுகிறார்கள். லைக்ஸ் மூலமாகவும் அவர்களைப் பின்தொடர்பவர்கள் மூலமாகவும் அவர்களுடைய மாதாந்திர வருமானம் அதிகரிக்கிறது.

ஆன்லைன் குற்றங்கள்:

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு சிறுவர்களை வைத்துக் கொண்டு பாலியல் காட்சிகளைப் படம்பிடித்ததற்காகத்தான் மேலே சொன்ன நால்வரையும் போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்திருக்கிறது. எதற்காக இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்? இதன் மூலமாக என்ன மாதிரியான வருமானம் வருகிறது? இதைப் போலவேதான் முன்பு ‘டிக் டாக்’ என்னும் செயலி மூலமாகப் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்துவருவதாகச் சொல்லி அது தடை செய்யப்பட்டது.
  • இப்போது அதே போன்ற குற்றங்கள் யூடியூப் மூலமாகவும் நிகழ்ந்துவருகின்றன. தங்களது வாழ்க்கையின் அற்புதங்களை, அன்றாடச் செயல்பாடுகளைப் பகிர்ந்துகொள்வதற்குப் பலரும் பயன்படுத்தும் ‘ஷார்ட்ஸ்’ வீடியோக்களைச் சிலர் தங்களுடைய தவறான உறவு முறைகளை நியாயப்படுத்தி, பாலியல் இச்சைகளைத் தூண்டப் பயன்படுத்துவதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கும் சேர்த்து அந்தச் செயலி அவர்களுக்கு வருமானத்தைத் தருவதால் அவர்கள் மேலும் மேலும் அதைச் செய்யத் துணிகிறார்கள். தடைவிதிக்க வேண்டும்.
  • இது போக நேரலையாக ஒளிபரப்பப்படும் இவர்களுடைய வீடியோ பதிவுகளில் குடித்துவிட்டுப் பேசுவதும் அதை நியாயப் படுத்துவதும் நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கில் கைதான பெண்ணைக் குற்றம் சாட்டிய பெண்ணே குற்றத்தில் தொடர்புடையவர் என்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்று இணையதளத்தில் மிக அதிகமாக உலாவரும் இவர்களைப் போன்றவர்கள் வெளியிடுகிற பதிவுகளுக்கு எந்தத் தணிக்கையும் இல்லை. அது குறித்து அரசு கவலைப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதையே இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கைது நடவடிக்கை உணர்த்துகிறது.
  • ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. ஆனால், பொதுவெளியில் ஆபாசமான பேச்சுகளையும் செயல்பாடுகளையும் வீடியோ வடிவில் உலா விடுவது சட்டவிரோதமானது. அதற்குச் சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தகைய மோசமான பதிவுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதற்காக ஒரு தணிக்கை குழு செயல்பட்டே ஆக வேண்டும். அந்தத் தணிக்கை குழுவை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.
  • போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் மைக்ரோ பயாலஜி பட்டதாரி. கௌரவமாக வாழ்வதற்கான அறிவும் படிப்பும் இருக்கும்போது எதற்காக அவர் இப்படி ஆன்லைன் பாலியல் வர்த்தகத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பது தெரியவில்லை. ஏனெனில், இது மிக எளிதாக கிடைக்கக்கூடிய பணம். உடல் உழைப்போ அலைச்சலோ இதற்குத் தேவைப்படுவதே இல்லை. மிக மோசமாகப் பேசி காசு சம்பாதிக்கும் வயதான ஊடகவியலாளருக்கும் இந்தப் பெண்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தோன்றுகிறது. இவர்களைப் போன்றவர்களின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. இல்லையெனில் ஒரு மோசமான சமூகத்தை உருவாக்குவதில் இணையதளமும் அரசாங்கமும் சேர்ந்தே செயல்படுவதாகத்தான் கருத வேண்டும். மாறுமா இந்நிலை?

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories