மின்சார வாரியத்துக்குப் பாக்கி வைப்பது தொடரக் கூடாது!
- தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளும் பிற அரசுத் துறைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.7,351 கோடி மின் கட்டணப் பாக்கி வைத்துள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மின்சார வாரியத்துக்கு அரசுத் துறைகளும் சுமையை ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. ஓர் உள்ளாட்சி அமைப்பு தன் மக்களுக்குக் குடிநீர், பொதுக் கழிப்பறை, தெருவிளக்குகள் எனப் பல சேவைகளை அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் மொத்தம் 5.68 லட்சம் மின் இணைப்புகளைக் கொண்டுள்ளன.
- அரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது மருத்துவமனைகள், குடிநீர் வாரியம் போன்ற அரசுத் துறை சார்ந்த அமைப்புகள் மொத்தம் 1.07 லட்சம் மின் இணைப்புகளைக் கொண்டுள்ளன. அண்மையில் மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்துப் பேசிய தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர் மற்றும் பொறியாளர் ஐக்கியச் சங்கம், உள்ளாட்சி அமைப்புகள் ரூ.3,016 கோடியும் அரசுத் துறைகள் ரூ.4,335 கோடியுமாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.7,351 கோடி மின் கட்டணம் அரசுத் தரப்பில் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
- அரசுத் துறைகள் மின் கட்டணத்தைப் பாக்கி வைப்பது ஒரு நடைமுறையாகவே மாறிவிட்டது. 2024வரைக்கும் மொத்தமாக ஏறக்குறைய 1.65 லட்சம் கோடி ரூபாய் பாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அளவில் நீண்ட கால இழப்பு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குத்தான் அதிகமாக உள்ளது.
- ஒரு நிறுவனம் செலுத்த வேண்டிய கடன், வரி, ஏற்கெனவே ஏற்றுக்கொண்டிருப்பதால் செய்து முடிக்க வேண்டிய சேவைகள் உள்ளிட்டவை பொறுப்புகள் எனப்படுகின்றன. இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அண்மைக்கால அறிக்கையின்படி, தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்தான், அதிகக் கடன் பொறுப்பைக் கொண்டிருக்கிறது.
- 2022-2023இல் மின்சார வாரியத்துக்கு இருந்த நஷ்டம் ரூ.9,192 கோடி. காலம் தவறாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், வாரியத்தின் நிதி நிலைமை மேம்படுவதில்லை. கட்டணம் செலுத்தத் தாமதம் ஆவதில் ஒவ்வொரு தரப்புக்கும் ஒரு காரணம் இருக்கலாம்.
- ஆனால், அதற்கான விளைவை மின்சார வாரியமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனக்கு மின்சாரம் விநியோகம் செய்யும் தனியார் உற்பத்தியாளர்களுக்குத் தொகையைச் செலுத்துவதும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை சார்ந்த உரிமைகளை நிறைவேற்றுவதும் தடைபடுகின்றன. கட்டணப் பாக்கி வைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகள் புதிய மின் இணைப்புகள் பெறுவதும் இதனால் சாத்தியமில்லாததாகிறது.
- தனியார் மின் இணைப்புகளைத் துண்டிப்பதுபோல அரசுத் துறை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மின் கட்டணப் பாக்கியை முன்னிட்டும், அரசுத் துறைகளின் வருமானத்தைப் பெருக்கும் வழிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். அனைத்து அரசுத் துறைகளுக்குமான மின் கட்டணத்தைக் கருவூலத்திலிருந்தே மொத்தமாக மின்சார வாரியம் பெற்றுக்கொள்ளும் ஒடிஷா மாநில நடைமுறையைத் தமிழகத்திலும் பின்பற்றலாம். தமிழக அரசு உடனடித் தீர்வு காண வேண்டிய பிரச்சினை இது!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2025)