TNPSC Thervupettagam

'மியாவ்' என்றால் என்ன?

February 1 , 2025 6 hrs 0 min 9 0

'மியாவ்' என்றால் என்ன?

  • நீண்ட காலமாக மனிதர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் விலங்குகளில் பூனைகளுக்கு முக்கிய இடம் உண்டு. எகிப்திய நாகரிகத்தில் கடவுளாக வணங்கப்பட்டவை. மென்மையான நடையும் கூர்மையான பார்வையும் கேட்கும்திறனும் கொண்டவை பூனைகள். நாம் நினைப்பதை விடவும் நுட்பமான மொழியாற்றலைக் கொண்டுள்ளன.
  • இரவில் மின்னும் கண்கள், நுனி வரை நிமிரும் வால், மென்மையான நடை, விளையாட்டு ஆர்வம் என இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தகவல் பரிமாற்றம். அவற்றின் ஒவ்வோர் அசைவும் ஒலியும் குறிப்பிட்ட செய்தியைத் தெரிவிக்கும்.
  • பூனைகளின் முதல் மொழி, அவற்றின் உடல் அசைவு. உங்கள் பூனை உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறதா? அது உங்களிடம், ’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்கிறது! தன் வாலை நேராக நிமிர்த்திக்கொண்டு வருகிறதா? அது ஓர் அன்பான வணக்கம். குறுக்காக வாலை ஆட்டுகிறதா? ’நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம்.
  • ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், பூனைகளின் 'மியாவ்' ஒலிக்குப் பதினாறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். நாம் கேட்கும் சாதாரண மியாவ் ஒலி, உணவு கேட்கும் வேண்டுகோளாகவோ அன்பின் வெளிப்பாடாகவோ கவலையின் பகிர்வாகவோ இருக்கலாம்.
  • வளர்ப்புப் பூனைகள் குழந்தைகளின் அழுகை போன்று ’மியாவ்’ என ஒலி எழுப்பப் பழகிக்கொண்டுள்ளன. இது மனிதர்களின் பாச உணர்வைத் தூண்டுவதற்காகப் பூனைகள் படிப்படியாக வளர்த்துக்கொண்ட திறன் என்று சுவீடன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகளின்படி, பூனைகளின் குர்-குர் (Purring) ஒலி வெறும் சந்தோஷத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. 25 முதல் 150 ஹெர்ட்ஸ் வரையிலான இந்த அதிர்வுகள் ஒரு சுய மருத்துவ முறையாகவும் செயல்படுகின்றன. காயங்களைக் குணப்படுத்தவும், எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வலியைக் குறைக்கவும் இந்த அதிர்வுகள் உதவுகின்றன.
  • பூனைகளின் பார்வை, மற்றொரு வகை தகவல் பரிமாற்றம். மெதுவாகக் கண் சிமிட்டும் பூனை உங்கள் மீது அளவற்ற நம்பிக்கையும் அன்பும் கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. இதை ’பூனை முத்தம்’ என ஆக்ஸ்போர்டு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். விரிந்த கண்கள் ஆர்வத்தையோ அல்லது பயத்தையோ குறிக்கும். பாதி மூடிய கண்கள் முழுமையான திருப்தியையும் பாதுகாப்பு உணர்வையும் காட்டுகின்றன.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பூனைகளின் வால் அசைவில் குறைந்தது பதினைந்து வெவ்வேறு சமிக்ஞைகளை அடையாளம் கண்டுள்ளனர். வால் அசைவுகளின் மொழியும் மிகவும் சுவாரசியமானது. நேராக நிமிர்ந்த வால், நட்பின் வெளிப்பாடு. குறுக்காக அசைந்தாடும் வால், பேரானந்தத்தின் வெளிப்பாடு. கோபத்தில் புடைத்த வால் ஒரு தெளிவான எச்சரிக்கை சமிக்ஞை.
  • கனடா ஆராய்ச்சியாளர்கள் பூனைகளின் முக பாவனைகளில் 27 வகைகளைக் கண்டறிந்துள்ளனர். பூனைகள் மனித முக பாவனைகளையும் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. உங்கள் மன நிலைக்கு ஏற்பத் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு நுட்பமான புரிதல் உள்ள உயிரினம்.
  • பூனைகளுக்குள் நடக்கும் தகவல் பரிமாற்றம் மிகவும் சிக்கலானது. தகவல் பரிமாற்றத்தில் வாசனைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பூனைகளின் உடலில் ஏழு வெவ்வேறு இடங்களில் வாசனைச் சுரப்பிகள் உள்ளன என்பதை சுவிஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கன்னங்கள், வாலின் அடிப்பகுதி, உதடுகள், கால்களின் அடிப்பகுதி, காதுகளுக்குப் பின்னால், வயிற்றுப் பகுதி மற்றும் வால் முனை ஆகிய இடங்களில் உள்ள இந்தச் சுரப்பிகள், ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான தகவல்களைத் தெரிவிக்கின்றன.
  • பூனையின் கன்னச் சுரப்பிகள் மூலம் வெளிப்படும் வாசனைகள் அதன் அடையாள அட்டை போன்றவை. இந்த வாசனைகள் மூலம் ஒரு பூனையின் வயது, பாலினம், உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை மற்ற பூனைகளால் அறிய முடிகிறது. வாலின் அடிப்பகுதியில் உள்ள சுரப்பிகள் பூனையின் பாலியல் நிலை மற்றும் இனப்பெருக்கத் தயார்நிலை பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகின்றன. கால்களின் அடிப்பகுதியில் உள்ள சுரப்பிகள் அவற்றின் எல்லைகளை நிர்ணயிக்கப் பயன்படுகின்றன.
  • பெர்லின் விலங்கியல் ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வுகளின்படி, பூனைகள் தங்கள் வாசனையைப் பொருள்களில் தேய்க்கும்போது, அந்த வாசனை குறைந்தது மூன்று மாதங்கள் வரை நீடிக்கிறது. இந்த வாசனை மற்ற பூனைகளுக்கு அந்தப் பகுதியில் எந்தப் பூனை வசிக்கிறது, அது எப்போது அங்கு வந்தது, அதன் உடல்நிலை எப்படி இருக்கிறது போன்ற பல முக்கியத் தகவல்களை வழங்குகிறது.
  • மேலும், ஒரு பூனை நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், அதன் வாசனைச் சுரப்பிகளின் வேதியியல் கூட்டமைப்பு மாறுபடுகிறது. இதனால் மற்ற பூனைகள் அந்தப் பூனையின் நிலையை உடனடியாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்த வாசனை அடிப்படையிலான தகவல் பரிமாற்ற முறை, பூனைகளின் சமூக அமைப்பிலும், இனப்பெருக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • வியக்கத்தக்க வகையில் பூனைகள் மனிதர்கள் பேசும் மொழியில் நூறுக்கும் மேற்பட்ட வார்த்தைகளின் பொருள்களைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. பதினாறு மணி நேரம் வரை தகவல்களை நினைவில் வைத்திருக்கும் .
  • தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் பூனைகளின் ஒலிகளை வகைப்படுத்தி, அவற்றின் உணர்வுகளைக் கணிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் மூலம் பூனைகளின் நடத்தையை முன்கூட்டியே கணிக்கவும், அவற்றின் தேவைகளைச் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories