TNPSC Thervupettagam

மீண்டும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்கள்! டிரம்ப் திறந்துவிடும் பெரும்பூதம்!

February 14 , 2025 2 hrs 0 min 25 0

மீண்டும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்கள்! டிரம்ப் திறந்துவிடும் பெரும்பூதம்!

  • உலகமே சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் தாளிலான உறிஞ்சுகுழல்களை (பேப்பர் ஸ்ட்ராக்களை) ஒழித்துவிட்டு, மீண்டும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களைப் பயன்படுத்துவது என்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய ஆணையோ அக்கறையுள்ள அனைவரையும் திகைக்கச் செய்திருக்கிறது.
  • பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களுக்கான செயல் ஆணையில் சில நாள்களுக்கு முன்  கையெழுத்திட்ட டிரம்ப், தாளிலான உறிஞ்சுகுழல்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது;  தாக்குப் பிடிக்காது என்று அறிவித்தார். இவற்றால் கடல்கள் மாசுபடுவது பற்றிய, கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது பற்றிய கேள்விக்கு அவருடைய பதில், ‘அது பரவாயில்லை’ (இட்’ஸ் ஓகே).
  • மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியாத – ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் நெடுங்காலமாகவே சூழலுக்குக் கேடாகப் பார்க்கப்படுகிறது. 2011-லேயே பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களுக்கு எதிரான இயக்கங்கள் தொடங்கிவிட்டன.
  • 2015-ல் கடல்வாழ் ஆமையொன்றின் மூக்கிலிருந்து பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களை வெளியே இழுக்கும் விடியோவொன்றை கடல்வாழ் உயிரியியலாளர் வெளியிட்டதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்தன.
  • உலகில் முதன்முதலாக 2018-ல் பசிபிக் தீவு நாடான வனூவடுதான் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதித்தது. இதேபோல, அமெரிக்கப் பெருநகரான சியாட்டிலும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களுக்குத் தடை விதித்தது. கலிபோர்னியா, ஓரிகான், வெர்மான்ட் போன்ற நகர்களும் மாகாணங்களும்கூட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.
  • 2021-ல் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் உறிஞ்சுகுழல் உள்பட ஒருமுறை பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்துள்ளது.
  • அமெரிக்காவில் நீண்ட காலமாகவே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான பிரசாரங்களும் போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
  • அமெரிக்காவில் ஒரு நாளில் 39 கோடி பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்கள் பயன்படுத்தப்படுவதாக இவற்றில் பெரும்பாலானவை 30 நிமிஷங்களுக்கும் குறைவான நேரமே பயன்படுத்தப்படுகின்றன என்று டர்ட்டிள் ஐலன்ட் ரெஸ்டொரேஷன் நெட்வொர்க் குறிப்பிடுகிறது.
  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிறகு பெரும்பாலும் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்கள், குப்பைக்கும் கடற்கரைகளுக்கும் நீர்வழிப் பாதைகளுக்கும் கடலுக்கும் சென்று, உணவென நினைத்து அவற்றை உண்ணும் கடல்வாழ் உயிரினங்களைக் கொல்கின்றன.
  • பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் குப்பைகள் முறையாகக் கழிக்கப்படாவிட்டால் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் கேடு விளைவிப்பவையாக மாறிவிடுகின்றன என்றும் இவற்றை உணவுப் பொருளாகக் கருதி உண்பதால் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன என்றும் உலக வன உயிர்கள் நிதியம் (டபிள்யு டபிள்யு எப்) தெரிவிக்கிறது.
  • உலகம் முழுவதும் கடந்த 35 ஆண்டுகளில் பல கோடிக்கணக்கில் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களைக் கடற்கரைகளிலும் நீர்வழிகளிலும் சேகரித்திருப்பதாக ஓஸன் கன்சர்வன்சி என்ற தன்னார்வ அமைப்பு தெரிவிக்கிறது.
  • இந்த உறிஞ்சுகுழல்களை மீண்டும் மறுசுழற்சிக்கு உள்படுத்த முடியாது; அவை மிகவும் சிறியவை. இவை முற்றிலுமாக மக்கிப்போக குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் இந்த அமைப்பு குறிப்பிடுகிறது.
  • இந்த உறிஞ்சுகுழல்கள் சிதைந்து மிகச் சிறிய  துண்டு துணுக்குகளாக அனைத்திலும் பரவிவிடுகின்றன. மீன்கள், பறவைகள், விலங்குகளின் வயிற்றிலும் இவற்றின் வழியே மனிதர்களின் திசுக்களிலும் ரத்தத்திலும் மூளையிலும்கூட பிளாஸ்டிக் துணுக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகள் வெளிவரும் நிலையில், இதய, மறதி நோய் உள்பட வேறுபல உடல்நலக் குறைவுகளுக்கும் இவை காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • அமெரிக்காவில் பல மாகாணங்களும் நகரங்களும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களுக்குத் தடை விதித்திருக்கின்றன. அனைத்து அரசுசார் செயல்பாடுகளிலும் உணவு சேவைகளில் உறிஞ்சுகுழல்கள் உள்பட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை 2027-க்குள் முடிவுக்குக் கொண்டுவரவும், பிற அனைத்து செயல்பாடுகளிலும் 2035-க்குள் முடிவுக்குக் கொண்டுவரவும் முந்தைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்திருந்தது
  • ஆனால், அதிபர் தேர்தலில் தோற்றுப் போய்விட்ட நிலையில், ஜோ பைடனின் இந்த முடிவு எல்லாம் ‘செத்துப் போய்விட்டதாக’ சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
  • உணவு மற்றும் பானங்கள் வைக்கப் பயன்படுத்துகிற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் – தண்ணீர் பாட்டில்கள், கன்டெய்னர்கள், ஸ்ட்ராக்கள், கடைப் பைகள் போன்றவற்றால் சூழல் பெருமளவில் மாசுபடுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் உலகில் 40 கோடி டன்னுக்கும் அதிகமாக புதிய பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் சுமார் 40 சதவிகிதம் பொருள்களை அடைத்து அனுப்பவதற்கே பயன்படுகிறது.
  • புதைபடிவ எரிபொருள்களிலிருந்தே பெரும்பாலும் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. ஆனால், புதைபடிவ எரிபொருள்களைக் கைவிட்டுப் புதுப்பிக்கவல்ல எரிசக்தி பயன்பாட்டை மேம்படுத்தும் திசையில் உலகம் நகர்வதால், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்த பிளாஸ்டிக் நோக்கித் திரும்புகின்றன. டிரம்ப்பை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் வலுவாக ஆதரிக்கின்றன என்பதும் அதேபோல இந்த நிறுவனங்களை டிரம்ப்பும் ஆதரிக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிஷமும் ஒரு குப்பை லாரி அளவு பிளாஸ்டிக் குப்பைகள் – பிளாஸ்டிக் பைகள், பல்துலக்கிகள், பாட்டில்கள் போன்றவை - பல்வேறு வழிகளிலும் கடலுக்குள் சென்றுவிழுகின்றன. உலகளவில் பிளாஸ்டிக் மாசு குறைப்புக்கான உடன்பாட்டை எட்டுவதற்காக கடந்த ஆண்டு தென் கொரியாவில் சந்தித்த உலக நாடுகளின் தலைவர்களால் எவ்வித முடிவையும் எடுக்க முடியவில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டு நாடுகளுடனான பேச்சுகள் இந்த ஆண்டும் தொடரவுள்ளன. உலகளாவிய பிளாஸ்டிக் வணிகத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
  • இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவில் தாள் உறிஞ்சுகுழல்களை ஒழித்து பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களை மீண்டும் கொண்டுவரும் அதிபர் டிரம்பின் முடிவானது உலகளவில் பெரும் கெடுவிளைவையே – கேடான தாக்கத்தையே  ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
  • உலகின் பல்வேறு நாடுகளிலும் கொஞ்சம்கொஞ்சமாக பிளாஸ்டிக் இல்லா நிலையை எட்ட வேண்டுமெனத் திட்டமிட்டு இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாடுகளும் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • இவ்வாறாக உலகமே பிளாஸ்டிக் ஒழிப்பைச் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் வலுவான - செல்வாக்குமிக்க வல்லரசு நாடொன்று எடுக்கும் ‘சக்கரத்தைப் பின் சுழற்றும்’ இத்தகைய ஆபத்தான முடிவால் சூழல் இயக்கங்களுக்குப் பெரும் பின்னடைவே நேரிடும்.

நன்றி: தினமணி (14 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories