TNPSC Thervupettagam

மீன்வளம் சரிந்துபோகும் துயரக் கதை

February 8 , 2025 5 hrs 0 min 5 0

மீன்வளம் சரிந்துபோகும் துயரக் கதை

  • உலக அளவில் கடல்மீன் அறுவடை ஆண்டுக்கு ஒன்பது கோடி டன் (ஒரு டன் = 1,000 கிலோ). பதிவுபெறாத அறுவடையையும் சேர்த்துப் பார்த்தால் 15 கோடி டன். இது உயிரியல்ரீதியிலான வளம்குன்றா எல்லையை மீறிய அறுவடை (unsustainable yield). இதில் கணிசமான பகுதி உணவு மதிப்பற்ற துணை அறுவடைகளே. பொருளாதார மதிப்பு வாய்ந்த 260 மீன் இனங்களில் பெரும்பான்மையும் அழிந்துவிட்டன, பலவும் அருகிவருகின்றன.

சீனத்தின் 5,64,000 கலன்கள்!

  • உலகிலேயே அதிக மீன்பிடிக் கலன்களை வைத்திருக்கிறது சீனம் - 5,64,000 கலன்கள்! 500க்கு மேற்பட்ட சீனக் கப்பல்கள் நம் கடல்களில் மீன்பிடிப்பதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் உள்ளன. இந்தியாவில் இன்று புழங்கிவரும் மீன்பிடிக் கலன்களின் எண்ணிக்கை (7.5 லட்சம்) தேவையை மிஞ்சி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதில் ஐந்து லட்சம் மரபான (இயந்திரம் பயன்படுத்தாத) கலன்கள் தவிர்த்த மற்றவை இயந்திர/ விசைப்படகு வகையாகும். 24 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட கலன்கள் 10,000. அரசுகள் தரும் மிகையான மானியங்களே இதற்கு முக்கியக் காரணம்.

3.3 கோடி வேலைவாய்ப்பு:

  • நாட்டின் வேலைவாய்ப்பில் மீன்வளத்தின் பங்களிப்பு 2% முதல் 10% வரை (3.3 கோடி) என்கிறது ஒரு தரவு. 2.1 கோடி மக்களுக்கு நேரடியாகவும் 1.2 கோடி பேருக்கு இரண்டாம்நிலை வேலைவாய்ப்பும் தருகிறது. ஆண்டுதோறும் இந்தியக் கடல்களில் 0.93 கோடி டன் மீன் அறுவடையாகிறது.
  • அதில் எவ்வளவு இந்தியக் கரைகளை வந்தடைகிறது என்பது முக்கியமான கேள்வி. இதன் மதிப்பு 16.64 லட்சம் கோடி ரூபாய். இதில் உயிரியல்ரீதியாக நீடிக்கத்தக்க அறுவடை 68% மட்டுமே. 1974இல் இம்மதிப்பு 90%ஆக இருந்தது. அப்போது 10%ஆக இருந்த மிகை மீன்பிடி, 2019இல் 35%ஆக உயர்ந்திருக்கிறது.

சங்கரா மீன்:

  • கடற்பரப்பின் வெப்பநிலை உயர்வால் பல உயிரினங்களின் இனப்பெருக்கச் சுழற்சித் தடம் மாறுகிறது. மூன்றாண்டு காலமே உயிர்வாழும் சங்கரா மீன் (Thread fin Bream) மிக அதிக எண்ணிக் கையில் இனப்பெருக்கம் செய்யும் இனம். இது இந்தியக் கடல்களில் 100 மீ. ஆழத்தில் வாழ்கிறது. 1980களில் இதன் இனப்பெருக்கக் காலம் ஏப்ரல்-செப்டம்பர் ஆக இருந்தது; இப்போது அது அக்டோபர்-மார்ச் ஆக மாறிவிட்டது. வெப்பநிலை 29 பாகைக்கு மேலே உயர்ந்துவிட்டால் இம்மீன்கள் வேறு பகுதிகளுக்கு நகர்ந்துவிடும்.

கொடச் சூரை:

  • கொடச்சூரை மீன்கள் மிகவும் சுறுசுறுப்பான இனம். இவை நீண்ட நாள்கள் ஓரிடத்தில் தங்குவதில்லை. வேகமாக இடம்பெயர்ந்து கொண்டேயிருக்கும். வேகமாக நகரவில்லை யெனில் இறந்துவிடும். அதன் உயிர்வளித் தேவையும் செவுள்களின் அமைப்பும் அவ்வாறு அமைந்திருக்கின்றன.
  • பொருத்தமான வெப்பநிலையும் நிறைவான உயிர்வளியும் கிடைக்குமிடத்தைத் தேடி உலகக் கடலெங்கும் அவை கூட்டமாகப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. உயிர்வளி வீழ்ச்சியுற்ற மரண மண்டலங்களி லிருந்து தப்பித்துச் சென்றுவிடுகின்றன. சூரை மீன் ஒரு வகையில் சூழலியல் சுட்டிக்காட்டி! அவற்றின் இடைநில்லாப் பயணத்தில் பருவகாலச் சுழற்சிக்குக் கணிசமான பங்கு உண்டு. கடல் மாசுபாடும் காலநிலை மாற்றமும் சூரை மீன்களின் வழமையான பயண ஒழுங்கைக் குலைத்துவிட்டன.

அற்றுப்போன சாகரா:

  • இந்தியர்கள் சராசரியாக ஆண்டொன்றுக்கு ஏழரை கிலோ மீன் உட்கொள்கின்றனர். மலையாளிகள் இதைவிட நான்கு மடங்கு மீன் அதிகம் உட்கொள்கின்றனர். இன்றைக்கு நிலைமை வேறு. பொருளாதாரத்தின் கீழ்த்தட்டில் உள்ளவர்களுக்கு மீனின் சந்தை விலை கட்டுப்படியாகவில்லை. மலையாளிகள் பருவகாலத்தில் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘சாகரா’ என்னும் மகா அறுவடை, கடந்த சில வருடங்களில் அற்றுப்போய்விட்டதாக ஆலப்புழை மீனவரை மேற்கோள் காட்டுகிறார் ஆய்வாளர் ஈஷா தத்தா.

மத்தி மீன்வளம்:

  • கடலுக்கு என்னவாயிற்று? கடலில் ஏற்படும் உயிர்வளி வீழ்ச்சியானது, ஏராளமான உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாகிறது. மத்தி மீன்வள (Sardine) வீழ்ச்சி இதற்கு மற்றுமொரு சான்று. கேரளத்தின் கடல் மீன்வளப் பொருளாதாரத்தின் மையமாகவும், மலையாளிகளின் விருப்ப உணவாகவும் அமைந்திருந்த மத்தி மீன், பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
  • கேரளத்தில் 2012இல் நான்கு லட்சம் டன்னாக இருந்த மத்திமீன் அறுவடை, 2015இல் வெறும் 46,000 டன்னாகக் சரிந்தது. அதன் பிறகு, 2017 வரை ஒன்றேகால் லட்சம் டன்னுக்கு மேல் உயரவே இல்லை. அதன் விளைவுகள் பல முனைகளில் பிரதிபலித்தன: 3,000 கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு, 28% மீன்வளம் சார்ந்த வேலையிழப்பு; அதோடு, கேரள மக்களுக்குக் கடுமையான மீனுணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

நீர்ச்சத்தும் தாதுச்சத்தும்:

  • மத்தி மீன்கள் தங்கள் பயணத்தை இந்தியாவின் வடமேற்குக் கடலில் தொடங்கி, கரைக்கடல் வழியாக தெற்குத் திசையில் தொடர்கின்றன. கரைக்கடல் மாசுபாடு, உயிர்வளி வீழ்ச்சி தவிர, கரைக்கடல் நீரோட்டங்களில் நேர்ந்துவரும் பாரிய மாற்றங்களும் மத்தி மீனின் இனப்பெருக் கத்துக்குச் சாதகமாக இல்லை.
  • பருவமழைப் போக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றுமொரு முக்கியமான காரணமாகும். பருவமழை சீராக நின்று பெய்தால் உயிர்ச்சத்துகள் நிலத்திலிருந்து கடலுக்குச் சென்று சேரும். பச்சைய மிதவை உயிரிகள் போதுமான உணவை உற்பத்தி செய்ய இந்தச் சத்துகள் அடிப்படைத் தேவை.
  • உணவுச் சங்கிலியின் நேர்வரிசையில் குஞ்சு மீன்களுக்கு இரை கிடைக்கும். எல் நினோ போன்ற காலநிலைக் கோளாறுகளின் காரணமாக, கடல் ஆழத்திலிருந்து மேலே வரும் குளிர்ந்த நீர், குஞ்சு மீன்களைக் கொன்றுவிடுகின்றன.
  • குஞ்சுகள் முன்புபோல் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாக வில்லை; உற்பத்தியாகும் குஞ்சுகளுக்குப் போதுமான இரையும் கிடைப்பதில்லை. கடலின் உயிர்ப்பன்மையும் உணவுச் சங்கிலியும் சிதைந்து கொண்டிருக்கின்றன. மீன்வளம் விரைவில் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் என்பதை முன்னறிவிக்கும் சில தரவுகள் இவை.
  • மிகை மீன்பிடி மட்டுமல்ல, காலநிலைப் பிறழ்வின் காரணமாக மழைப்போக்கிலும் கடல் நீரோட்டங்களிலும் ஏற்படும் மாற்றங்கள் கடல் மீன்வளத்தை எப்படிப் பாதிக்கின்றன என்பதற்கு கேரளத்து மத்தி மீன் வளம் சரிந்த கதை ஓர் எடுத்துக்காட்டு. இந்தியாவின் பல்வேறு கடலோர மாநிலங்களின் முதன்மை மீன் வளங்களும் இது போன்று பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அவற்றை அறுதியிட்டுக் கூறும் ஆய்வுகள் தேவை.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories