மீளுமா மீன்வளம்?
- தெற்காசியாவிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்டது இந்தியா (8,100 கி.மீ.). இதன் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 20 லட்சம் ச.கி.மீ. மாலத்தீவுகளின் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 8.6 லட்சம் ச.கி.மீ. மீன்வளமும் சுற்றுலாவும் மாலத்தீவின் முதன்மைப் பொருளாதாரக் கூறுகள்.
- அந்நாட்டின் உற்பத்தியில் 6% மீன்வளத்திலிருந்து வருகிறது; மீன்வளம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 11% மக்களுக்கு வேலையளிக்கிறது; மாலத்தீவின் ஏற்றுமதியில் 99% மீன் உணவு. தீவு மக்கள் எல்லாரும் மீன் உண்பவர்கள். உலகிலேயே அதிக அளவு மீன் உண்பவர்கள் மாலத்தீவினர். சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 144 கிலோ மீன் உண்கிறார்.
மீன்பிடி தொழில்:
- மாலத்தீவில் நேரடியாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் 14,000 பேர். மீன் பதனிடுதல், மதிப்புக்கூட்டிய மீன் பண்டங்கள் தயாரித்தல் முதலிய வேலைகளில் 6,000 பேர் ஈடுபடுகின்றனர். மீன் அறுவடையில் 65% நீலத் துடுப்புச் சூரை (Thunnus thynnus); 17% மஞ்சள் துடுப்புச் சூரை; சுறா, கலவா உள்ளிட்ட மீன்வளம் வெறும் 18%தான்.
- 2009 கணக்குப்படி, மாலத்தீவின் மீன்பிடி கலன்கள் 979; அதில் 88%, மாஸ்தோணி என்கிற விசை மீன்பிடி படகுகள். மாஸ்தோணிகள் 95% அறுவடையைக் கொணர்கின்றன. சூரை மீன்களை உயிர் இரைகளைப் பயன்படுத்தி தூண்டிலில் அறுவடை செய்கின்றனர். முற்றுரிமைப் பொருளாதாரக் கடல் பகுதியில் வியட்நாம், தைவான் கப்பல்கள் உரிமம் பெற்று மீன் பிடித்துச் செல்கின்றன.
மீன்வளம் சார்ந்த பொருளாதாரம்:
- அறுவடையாகிக் கரைசேரும் சூரைமீன்களை 2003 வரை மீன்வளத் துறை கொள்முதல் செய்து, பதனிட்டு, ஏற்றுமதி செய்துவந்தது; பிறகு அம்முறை கைவிடப்பட்டு, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. படகுகளிலிருந்து சூரை மீன் அறுவடையைப் பன்னாட்டுக் கடலிலேயே நிறுவனங்கள் கொள்முதல் செய்துவிடுகின்றன. அதற்கென நான்கு கப்பல்களை ஏற்பாடு செய்துள்ளன. மீனவர் நலனைக் கருத்தில் கொண்டு,
- சூரை மீனுக்கு அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்துள்ளது. கப்பல்கள் சேகரித்துவரும் மீன்கள் பதனிடு மையங்களில் கரைசேர்க்கப்படுகின்றன. அங்கிருந்து அவை உறைநிலையில் அல்லது பாடம் செய்த நிலையில் தாய்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. மஞ்சள் துடுப்புச் சூரை பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகிறது. பிற மீன் இனங்களைச் சிறுவணிகர்கள் உலர்த்தி, புகையூட்டி இலங்கைக்கு ஏற்றுமதி செய்கின்றானர்.
வள மேலாண்மை:
- மாலத்தீவு அதன் கடல்வளத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தது. தூண்டில் ஒழிய வேறு எந்த மீன்பிடி முறையும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. இரைமீன்களுக்காக மட்டும் வலைகளை அனுமதிக் கின்றனர். 1990க்குப் பிறகு பவளத்திட்டுகளில் சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடித்தல் அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளில் பவளத்திட்டு மீன்வளம் சரிவைச் சந்தித்தது; மிகை மீன்பிடி காரணமாகக் கறுப்புப் பவளப்புற்று, ஆமைகள், கடல் வெள்ளரி போன்ற இனங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டன.
அந்தமான் மீன்வளம்:
- 2016 இல் போர்ட் பிளேர் (அந்தமான்) அருகே அமைந்திருக்கும் ஜங்கிலிகாட் துறைமுகத்துக்கு சென்றிருந்தேன். அந்தமான் – நிக்கோபார் தீவுப் பகுதிகளில் அமைந்திருக்கும் ஒரே மீன்பிடி துறைமுகம் ஜங்கிலிகாட். அத்தீவுக் கூட்டங்களின் பதிமூன்று பழங்குடி இனங்களில் சில அலைவாய்க்கரையை ஒட்டிய பகுதிகளில் சிறு அளவில் மீன் வேட்டையில் ஈடுபடுகின்றன. வில்- அம்பு, ஈட்டி போன்ற ஆதி வழக்கங்களில் அவர்கள் மீன் வேட்டை நடத்துகின்றனர்.
- அந்தமான்- நிக்கோபார் தீவுக் கடல்கள் கட்டுக் கோப்புடன் கண்காணிக்கப்படுகின்றன. கடலோரக் காவல்படையின் படகுகள் கடலைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. இயற்கை மணம் மாறாத கடல் சூழலியல் அங்கு நீடிப்பது இந்தக் கட்டுக்கோப்பினால்தான்.
- விசைப்படகு மீன்பிடி மூன்று கடல் மைல் (5.4 கி.மீ.) தொலைவுக்கு அப்பால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலிருந்து இங்கு மீன் பிடிக்க வரும் படகுகள் அதற்குத் தனி உரிமம் பெற்றிருக்க வேண்டும். இழுவைமடி விசைப்படகுகள் அங்கு பெரிதாக அனுமதிக்கப்படுவதில்லை.
தலைகீழாய் மாறிய மீன் சந்தை:
- சிங்கிஇறாலுக்கு இப்போது சர்வதேசச் சந்தை உள்ளது. குஞ்சு சிங்கிஇறாலை இப்போதெல்லாம் யாரும் தூக்கியெறி வதில்லை; வீட்டின் பின்கட்டில், கடல்நீர் நிரப்பிய ஒரு தொட்டியில் ஓரிரு மாதங்கள் அவற்றை உயிருடன் விட்டுவைத்து, அதற்குச் சந்தை மதிப்பைப் பெற்றுவிடுகிறார்கள். 1920இல் மேலை நாடுகளில் சூரை மீனை யாரும் சீண்டவில்லை. 1970களில் இந்தியாவில் சூரை மீனுக்குச் சந்தை கிடையாது. சென்னைவாசிகளுக்கு இப்போதும் சூரைமீன் அவ்வளவு விருப்பமான உணவல்ல.
- இன்றைக்கு உலக மீன் அறுவடையில் சூரை மீனின் பங்கு 7%! மஞ்சள் துடுப்புச் சூரை மீனுக்கு ஜப்பான் உள்ளிட்ட சர்வதேசச் சந்தைகளில் உயர்மதிப்பு உள்ளது. கணவாய் மீனைச் சமைப்பதற்குத் தனிப்பக்குவம் வேண்டும் என்பதனால் முன்பெல்லாம் யாரும் விரும்பு வதில்லை. பெரும்பாலும் அதைக் கருவாடாக்கிப் பயன்படுத்துவார்கள். இன்றைக்குக் கணவாய், நண்டு, கலவாய்மீன் போன்ற பல இனங்களுக்குச் சர்வதேசச் சந்தையில் மதிப்பு கிடைத்துவிட்டது.
- இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலம் தொடங்கி, கடல்மீன் அறுவடையில் மத்திய அரசு முனைப்புக் காட்டியது; மீன் உணவை முனைந்து பரவலாக்கியது. நைலான் வலைகள், இழுவைமடி, விசைப்படகு மீன்பிடி, தொலைவுச் சந்தைகளுக்கு மீனைக் கெடாது எடுத்துச்செல்லும் தொழில்நுட்பம், வாகன வசதிகள், மீன் ஏற்றுமதிச் சந்தை அனைத்தும் கடந்த 60 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டன.
மேலாண்மையின் தோல்வி:
- ஏற்றுமதிச் சந்தையில் இறால், சிங்கி இறால், கணவாய் என்று தொடங்கி வகைவகையான மீன்களின் தேவை பெருகியது. அண்மைக் காலத்தில் சூரை, சுறா, கலவாய் முதலிய மீன்கள் சந்தை மதிப்புப் பெற்றுள்ளன. 1960களில் இறால் மீனுக்கான உலகச் சந்தை விரிவடைந்தபோது ‘உள்ளூர் நுகர்வுக்கான கூட்டுறவுப் பரிவர்த்தனை’ மூலம் ஏற்றுமதி வணிகப் பாய்ச்சலாக உருமாறியது.
- இறால் மீன்வளப் பொருளாதாரம் கரைக் கடல்களைச் சார்ந்திருந்த நிலையில் உட்கடல் தொழிலைக் குறிவைத்து அறிமுகமான (இழுவைமடி) விசைப்படகுகள், பாரம்பரிய மீன்பிடித் தரப்பினரின் தொழிற்பகுதியான கரைக்கடலை மொய்க்கத் தொடங்கின. விசைப்படகு- கட்டுமர மீனவர் மோதல் தீவிரப்படுவதற்கு இது முக்கியக் காரணமானது. தமிழ்நாடு மீன்வளத் துறையின் தொழில்நுட்ப முயற்சியில் குளச்சல் வெற்றியளித்த இடமாகத் தோன்றினாலும், போகப்போக சமநிலையற்ற வளர்ச்சிக்கும், மீன்வள மேலாண்மையின் தோல்விக்கும் அடையாளமாயிற்று.
எங்க சனம் அழிஞ்சிடும்!
- தொண்டி மீனவர் சுப்பிரமணியன் (1955) அனுபவம் வாய்ந்த பாரம்பரிய மீனவர். அட்லாண்டிக் கடல் தவிர்த்த உலகின் எல்லாக் கடல்களுக்கும் போயிருக்கிறார். 2014இல் அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “1975இல நான் மண்டபத்தில தொழில் பாக்கப் போயிருந்தேன். அப்ப அங்க நார்வேக்காரனோட நாலு கப்பல் நின்னுட்டிருந்தது. ரெண்டு கப்பல் கடல்ல போயி, இழுவைமடி அடிச்சு மீனைக் கரைக்குக் கொண்டு வாறாம்.
- கடலையே அரிச்சு எடுத்த மாதிரி மீனைக் கூடைகூடையாக் கொட்டறாம். ‘அட சண்டாளப் பாவிகளா. இதோட நம்ம கடலு அழிஞ்சுபோச்சு’ன்னேன். இப்போ அப்படித்தான் ஆயிப்போச்சு. கடல்ல ஒண்ணுமே மிச்சமில்லங்க. எங்க சனம் சீக்கிரமாவே அழிஞ்சிடும்”. மீன்வளச் சிதைவு குறித்த சுப்பிரமணியனின் அவதானிப்பு இன்றைக்கு உலகளாவிய எதார்த்தம்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 02 – 2025)