TNPSC Thervupettagam

முதன்மை பெறுமா முன்வார்த்த கட்டுமானம்?

August 27 , 2024 6 hrs 0 min 8 0

முதன்மை பெறுமா முன்வார்த்த கட்டுமானம்?

  • பாறைகளைச் செதுக்கி உருவாக்​கப்பட்ட தூண்கள், உத்தரங்கள், பலகைகள் போன்ற பாகங்​களால் கட்டப்​பட்​ட​வைதான் மனிதர்களின் முதல் இருப்​பிடங்கள். எகிப்​தியப் பிரமிடு​களும் தென்னிந்​தியக் கோயில்​களும் அதே அடிப்​படையில் கட்டமைக்​கப்​பட்டன. இவற்றை ‘முன்​வடித்த கட்டு​மானம்’ (Prefabricated Construction) என்று அழைக்​கிறோம்.
  • நாகரிக வளர்ச்​சியில் சிமென்ட்- கான்கிரீட் கண்டு​பிடிப்பு ஒரு மைல்கல். களத்தில் சாரம் அமைத்துக் கம்பி கட்டி, கான்கிரீட் வார்த்து உருவாக்​கப்​படும் முறையைக் களக் கட்டு​மானம் (In Situ Construction) என்று அழைக்​கிறோம்.
  • பிற்காலத்​தில், கட்டிடப் பாகங்​களைத் தொழிற்​சாலைகளில் வார்த்து, பிறகு அவற்றைக் களத்தில் இணைத்துக் கட்டு​கின்ற தொழில்​நுட்பம் வளர்ந்தது. இது ‘முன்​வார்த்த கட்டு​மானம்’ (Precast Construction) என்று அழைக்​கப்​படு​கிறது. பிரிட்​டனில் 1905இல் இக்கட்டுமான முறைக்குக் காப்புரிமை வழங்கப்​பட்டது.
  • இந்நூற்​றாண்டில் தொழில்​நுட்ப வளர்ச்சி, புதுப்புது சாதனங்கள் என்று அளப்பரிய உச்சியை எட்டி​யுள்​ளோம். இருப்​பினும், கான்கிரீட் பல நூற்றாண்​டு​களைக் கடந்து இன்றளவும் புதுமையானதாகவும் புதிராகவும் உள்ளது. கட்டுமான முறைகளை மறுஆய்வு செய்ய வேண்டியது தற்காலச் சூழலின் கட்டாயம்.

கான்கிரீட்டும் சுற்றுச்​சூழலும்:

  • மாசுபட்ட சுற்றுச்​சூழலுக்கு மனிதன் மட்டுமல்ல, கான்கிரீட்டும் பலியாடு​தான். கான்கிரீட் என்பது ஒரு சிக்கலான வேதிச் சேர்க்கை; இயற்கை வளங்களி​லிருந்து தயாரிக்​கப்பட்ட செயற்​கைக்கல். இது சுற்றுச்​சூழலுடன் இணையும்போது முரண்​பாடாகி மீட்சியுறு வினை (Reversible reaction) விளைகிறது. மாசுபட்ட சூழலில் இவ்வினை துரித​மாகச் செயல்​படு​கிறது.
  • நேற்றுவரை தரம் என்று சொல்லப்பட்ட கான்கிரீட் இன்று தரமற்றதாக அறிவிக்​கப்​படு​கிறது. சில கட்டிடங்கள் மிகக்​குறுகிய காலத்​திலேயே பொலிவிழந்​து​விடு​கிறன. இதற்குத் தற்காலச் சுற்றுச்​சூழலும் ஒரு காரணியாக அமைகிறது.

முன்வார்த்த கட்டு​மானம்:

  • கட்டிடங்களை வடிவமைக்கும் பொறியாளர்கள் கட்டிடப் பொருள்​களின் தன்மைக்​கேற்ப உரிய பாதுகாப்புக் காரணியைப் (Factor of Safety) பயன்படுத்து​வார்கள். இரும்புக் கம்பிகள் தொழிற்​சாலைகளில் தயாரிக்​கப்​படு​வதால் 15 சதவீதமும் கான்கிரீட் களத்தில் தயாரிக்​கப்​படு​வதால் 50 சதவீதமும் காரணி​களாகப் பயன்படுத்​தப்​படு​கின்றன. இது ஒரு சர்வதேச நடைமுறை.
  • கான்கிரீட் பாகங்​களைத் தொழிற்​சாலைகளில் தயாரித்தால் தரம் உயரும். ஆகவே, பாதுகாப்புக் காரணி சிறிதாகும்; பொருள்​செலவும் குறையும். இரண்டாவதாக, மதிப்பு​மிக்க கான்கிரீட்டின் தேவை குறைக்​கப்​படு​கிறது. மூன்றாவது, தரமான கட்டிடங்கள் நீண்ட நாள்களுக்குப் பராமரிப்​பின்றி உழைக்​கும். மேலும் பல சாதகங்கள் இதில் உண்டு.
  • வெள்ளநீர் வடிகால் பாலம்:
  • கடந்த டிசம்பர் மாத பெருமழைக்குப் பிறகு வெள்ளநீர் வடிகால் பாலம் அமைக்கும் திட்டங்கள் தமிழகத்தில் பரவலாக நடைபெறுகின்றன. இத்திட்​டத்தில் சில மாற்றங்கள் அவசியம். முதலா​வதாக, வடிகால் பாலத்தின் வெட்டு​முகம் சதுரமாக உள்ளது. மாறாக, வட்ட வடிவில் அமைய வேண்டும். வட்ட வடிவம் சீரிய பொறியியல் பண்பு​களைக் கொண்டது. அடியில் படிகின்ற மண்ணை எளிதில் அகற்றிப் பராமரிக்​கலாம்.
  • களத்தில் பள்ளம் தோண்டி, சாரம் அமைத்து, கம்பி கட்டி, கான்கிரீட் வார்த்து, நீராற்றி, சாரங்​களைப் பிரித்து, பள்ளம் நிரப்பி வேலையை முடிப்​ப​தற்குள் மக்களின் அவதி மாதக்​கணக்கில் நீள்கிறது. சில இடங்களில் கான்கிரீட்டைக் களத்திலேயே தயாரிக்​கிறார்கள். இப்படிப்பட்ட கட்டு​மானங்​களில் தரத்துக்கு உத்தர​வாதம் கிடையாது.
  • முன்வார்த்த கட்டு​மானம் மேற்சொன்ன அனைத்துக் குறைபாடு​களையும் ஒருசேர நீக்கும். மேலும், தொழிற்​சாலைகளில் ஒரு சிறப்புத் தொழில்​நுட்ப முறையில் தரமான​தாகவும் மிகக்​குறைந்த செலவிலும் வட்டக் குழாய்​களைத் தயாரிக்க முடியும். களத்தில் குழாய் வடிவக் கால்வாய் அமைக்க இயலாது.

அடுக்​கு​மாடிக் குடியிருப்பு:

  • புதுவையில் திறன்நகர் (Smart city) திட்டத்தின் கீழ் அடித்​தட்டு மக்களுக்கு முன்வார்த்த கட்டுமான முறையில் அடுக்​கு​மாடிக் குடியிருப்புகள் கட்டப்​படு​கின்றன. கடந்த ஆறு மாத இடைவெளியில் 12 அடுக்​கு​மாடிக் கட்டிடம் ஒன்று கட்டி முடிக்​கப்​பட்​டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டிடம் வேகமாக வளர்கிறது. இக்கட்​டிடங்கள் நகரின் மையப்​பகு​தியில் இரண்டு முக்கியச் சாலைகளை ஒட்டிக் கட்டப்​படு​கின்றன.
  • அப்படியொரு கட்டு​மானம் நடக்கிறது என்பதையே ஐந்து/ஆறு அடுக்​குகள் வளர்ந்த பிறகுதான் பொதுமக்கள் உணர்ந்​தார்கள். பகல் வேளைகளில் கட்டுமான கனரக வாகனங்கள் ஏதும் மக்களுக்கு இடையூறாக வருவதில்லை. ஜல்லி, மணல் குன்றுகள் சாலையை ஆக்கிரமிப்​ப​தில்லை.
  • பின்னிரவில் கட்டிட பாகங்கள் களத்தில் இறக்கப்​பட்டு, எல்லைக் கதவுகள் அதிகாலை மூடப்​பட்டு​விடும். பகல் வேளைகளில் பாரந்​தூக்கி (crane) ஒன்று ஆரவாரமின்றி கட்டிடப் பாகங்​களைத் தூக்கி நிலைநிறுத்​தும். களத்தில் வேலையாள்​களின் நடமாட்டம் தெரியாது. திட்ட வளாகத்​திலிருந்து தூசிப்பு​யல்கள் கிளம்​புவ​தில்லை. இவற்றால் அரசாங்​கத்​தையும் திட்டப் பொறியாளர்​களையும் மக்கள் நிச்சயம் வாழ்த்து​வார்கள்.

திட்ட​மிடல் அவசியம்:

  • சில ஆண்டு​களுக்கு முன் சீனாவில் 15 அடுக்கு விடுதி​யொன்று 48 மணி நேரத்தில் கட்டி முடிக்​கப்​பட்டது தொடர்பான காணொளி வைரலானது. அது எப்படிச் சாத்தி​ய​மானது? ஆப்ரகாம் லிங்கன் சொன்ன கருத்தை இதில் பொருத்திப் பார்க்​கலாம்: “ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்க எனக்கு 6 மணி நேரம் தாருங்கள்.
  • அதில் நான்கு மணி நேரத்தைக் கோடாலியைக் கூராக்கு​வதில் செலவிடு​வேன்.” சீனர்கள் லிங்கனின் வார்த்​தைகளை முழுமையாக உள்வாங்​கி​உள்​ளனர்.
  • நம் நாட்டில் திட்ட​மிடல் என்பது புறக்​கணிக்​கப்பட்ட ஒன்று. உதாரணத்​துக்கு, சாலை விரிவாக்கப் பணிகளை எடுத்​துக்​கொள்​வோம். நில ஆக்கிரமிப்பு, ஆற்றுப் பாலங்கள், கால்வாய்ப் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளை முதலில் முடித்து​விட்டு, இறுதியில் சாலைப் பணியை ஆரம்பிக்க வேண்டும்.
  • ஆனால், இறுதியில்தான் செய்ய வேண்டியதை முதலில் தொடங்கிப் பின்னோக்கி நகருகிறோம். முன்வார்த்த கட்டுமான வெற்றியின் ரகசியம் திட்ட​மிடல் என்கிற பலமான அடித்​தளம்​தான். ஆகவேதான் நம் நாட்டில் இக்கட்டு​மானம் பெரிய அங்கீ​காரம் பெறவில்லை.
  • முன்வார்த்த கட்டு​மானம் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் கட்டாய​மாக்​கப்பட வேண்டும். மக்கள் நலத்திட்​டங்​களில் முன்னோடியான தமிழகம் ‘கலைஞர் கனவு இல்லம்’ என்கின்ற வீடு கட்டும் திட்டத்தை அறிவித்​துள்ளது. பள்ளி​களில் விரிவாக்கப் பணிகள் ஏற்கெனவே தொடங்​கப்​பட்​டிருக்​கின்றன.
  • இத்திட்​டங்​களில் இம்முறையைப் புகுத்​தினால் அக்கட்​டிடங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநி​தியின் பெயரையும் முன்வார்த்த கட்டுமான முறையையும் அடுத்த சந்ததி​யினருக்கு எடுத்​துச் செல்​லும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories