முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரம்: காவல் துறைக்கு என்ன தண்டனை?
- அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் என்ற நபர், நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கையிலெடுத்து ஆளும் கட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் 26 வழக்குகளில் தொடர்புடையவர் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். 26 வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபர், சமூகத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவதும் ஆளும் கட்சியில் செல்வாக்கு உள்ளவராக இருப்பதும் அமைச்சர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதும் காவல்துறையும் ஆளும் அரசும் எந்த அளவுக்கு குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்து கொள்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
- காவல் ஆணையர் அளித்துள்ள பேட்டியில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21-ன்படி பாதிக்கப்படும் பெண்ணின் அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் 2019-ம் ஆண்டில் இதுபோன்ற பாலியல் வழக்குகளில் என்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
- முதல் தகவல் அறிக்கை பொதுவாக காவல்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். பாலியல் வழக்கு, போக்சோ தொடர்பான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையை எந்த பொதுவெளியிலும் அச்சு வடிவமாகவோ மின்னணு ஆவணமாகவோ வெளியிடக் கூடாது என்பது உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் ஆகும். இதை காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்ய வேண்டும் என்பதும் வழிகாட்டுதலின் ஒரு பகுதி. மேலும், அந்த முதல் தகவல் அறிக்கை ஆவணம், சீலிடப்பட்ட உறையில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். இது காவல்துறையின் கடமை.
- பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நல்ல நோக்கத்துக்காக வெளியிட வேண்டும் என்றால், அதற்கு ஒரு குற்றவியல் நீதிபதியின் உத்தரவை பெற்றே வெளியிட முடியும். இதை மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் உண்டு. ஆனால், இவ்வளவு நடைமுறைகளையும் மீறி, போலீஸாரின் கைகளை மீறி முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியில் வந்தது?
- முதல் தகவல் அறிக்கையை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கும் காவல்துறை. முதல் தகவல் அறிக்கை வெளிவர காரணமாக இருந்த காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? குற்றம்சாட்டப்பட்டவர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால், காவல்துறையினர் வேண்டுமென்றே முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அதை கசியவிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல்துறையினர் தங்களுடைய நடுநிலையை பாதுகாக்க முடியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 12 – 2024)