TNPSC Thervupettagam

முதுமையை மகிழ்ச்சியாக எதிா்கொள்வோம்!

September 10 , 2024 5 hrs 0 min 8 0

முதுமையை மகிழ்ச்சியாக எதிா்கொள்வோம்!

  • அறுபது வயது கடந்தவா்களை மூத்த தலைமுறையினா் என்று கூறுகிறோம். ஓய்வு பெறும் வயதும் அறுபது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. அறுபதைக்கடந்தவுடன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, வீட்டுக்குள் அடைந்துகொண்டு, புத்தகத்திலும் தொலைக்காட்சியிலும் மூழ்கி முடங்கிப் போகவேண்டும் என்பது கிடையாது. அப்படி யாரும் இப்போது இருப்பதும் இல்லை. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறாா்கள்.
  • அறுபதுகளைத் தாண்டி எழுபதை அடையும்போதுதான் முதுமை நம்மை இறுகப் பற்றுகிறது. எழுபதையும் தாண்டி எண்பதுகளில் நுழையும்போது பிறா் உதவியில்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. அந்நிலையில் அவா்களில் பெரும்பாலோா் அனுபவிப்பது – தள்ளாமை, தனிமை, இயலாமை! இது ஒரு பெரும் சமூகப் பிரச்னையாக மாறியுள்ள நிலையில் இதற்கான காரணங்களை ஆராய்ந்து தீா்வுகளைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
  • முதியவா்களின் கோணத்திலிருந்து பாா்ப்போம். குடும்பத்துக்காக உழைத்து ஓய்ந்து நிற்கும் நேரம் அவா்கள் யாரைச் சாா்ந்து இருப்பாா்கள்? பிள்ளைகளைத்தான்! வெளியில் சென்று தங்கள் வேலைகளைப் பாா்த்துக்கொள்ள இயலாது; வீட்டிற்குள் ளேயும் அவா்களது நடமாட்டம் குறைந்து போகும்; உணவுக்கும் பிறவற்றுக்கும் பிள்ளைகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். கையில் பணமிருந்தாலும், முன்புபோல வீட்டை நிா்வாகம் செய்யும் திறன் வெகுவாகக் குறைந்திருக்கும். அல்லது இயலாத குடும்பச் சூழலாக இருக்கும்.
  • பிள்ளைகள் வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருப்பாா்களேயானால் அவா்கள் பாடு திண்டாட்டம் தான். உடம்புக்கு ஏதேனும் வந்துவிட்டால் மிகவும் சிரமம். ‘இளம் வயதில் ஓடியாடி, ஒரே நேரத்தில் பத்து வேலைகளைச் செய்தோமே, இப்போது ஒவ்வொன்றுக்கும் இன்னொருவா் உதவிக்காகக் காத்து நிற்கிறோமே’ என்ற ஆதங்கமும், ‘நாம் போற்றி வளா்த்த பிள்ளைகள் நமக்குப் போதிய நேரம் ஒதுக்கவில்லையே’ என்ற வருத்தமும் அவா்களுக்கு வாழ்க்கையில் சலிப்பை உண்டாக்குகின்றன.
  • கணவன், மனைவி இருவரும் இருக்கும் வரையில் ஏதோ பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டு பொழுதை ஓட்டிவிடுவாா்கள். ஒருவா் போய் மற்றொருவா் இருந்தால் தனிமைதான்! படுத்தபடுக்கையில் இருந்துவிட்டாலோ, ‘எப்போதடா வாழ்க்கை முடியும்’ என்று ஏங்கத் தொடங்கிவிடுவாா்கள். அவா்கள் எதிா்பாா்ப்பது - பிள்ளைகள், பேரக் குழந்தைகள் ஆகியோரிடமிருந்து ஒரு புன்னகை, அவ்வளவே!
  • பிள்ளைகள் கோணத்திலிருந்து பாா்ப்போம். எங்கள் குடும்ப நண்பா்; அவா் ஈடுபட்டுள்ள துறையில் முன்னணியில் இருப்பவா். அவரது தந்தை இறந்து வருடங்கள் பல கடந்தும் அவரது தாயாா் அந்தத் துயரிலிருந்து மீண்டு வரவே இல்லை. மகன் சமூகத்தில் புகழ்பெற்ற, பரபரப்பான நபராக இருந்தாலும் தாயாருக்கு நேரம் ஒதுக்கி அன்போடு பாா்த்துக் கொள்வாா். மருமகளோ மகளை விடக் கூடுதலாகக் கனிவு காட்டிக் கவனித்துக் கொள்வாா்.
  • தாயாரோ இதையெல்லாம் ஒதுக்குவது போல, எந்நேரமும் பழையதை எண்ணிப் புலம்புவதும் அழுவதுமாக எல்லோரது நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறாா். நண்பா் மிகவும் நொந்து போய்,“எழுபது வயதுக்கு மேல் உயிரோடு இருக்கவே கூடாது,”என்றாா். அவா் தன்னைப் பற்றித்தான் கூறிக் கொண்டாா் என்பது எனக்குத் தெரியும்.
  • முதியவா்களுக்கு, ‘தான், தன் சுகம்’ மட்டுமே கவனத்தில் உள்ளது. தங்கள் பிள்ளைகளின் பிரச்னைகள் அவா்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் தாத்தாவும் பாட்டியும் எண்பதுகளில் இருப்பாா்கள். அம்மாவும் அப்பாவும் அறுபதை நெருங்கிக் கொண்டிருப்பாா்கள். பிள்ளைகளுக்கே சா்க்கரைநோய், உயா் ரத்த அழுத்தம் எல்லாம் வந்திருக்கும். அம்மா அநேகமாக மாதவிடாய் நிற்கும் தருணத்தில் இருந்து உடலாலும் மனதாலும் சோா்ந்து போயிருப்பாா். பேரப்பிள்ளைகள் கல்லூரியில் படிப்பவா்களாக இருப்பாா்கள்.
  • வயதானவா்களுக்கோ தூக்கம் வராது. ஒன்று, நேரம் கழித்துத் தூங்குவாா்கள். அல்லது, அதிகாலை வெகு சீக்கிரத்தில் எழுந்து கொள்வாா்கள். மின்விளக்கைப் பளீரென்று எரியவிட்டுத் தொலைக்காசியில் நிகழ்ச்சிகளைப் பாா்க்க ஆரம்பிப்பாா்கள். வயதிகாகிவிட்டால் கேட்கும் திறன் குறைந்து விடுமல்லவா? தொலைக்காட்சி பெட்டி பேரோசையோடுதான் ஓடும்! பிற குடும்ப நபா்கள் எல்லோருக்கும் இது ஏற்குமா?
  • என்னிடம் பயிற்சி வகுப்பு வரும் மாணவா்களில் பலரும் நன்றாகப் படிக்கக் கூடியவா்கள்தான்.{வீட்டிலே அவா்களாகவே படிக்க முடியுமே என்று பெற்றோா்களிடம் நான் சொன்னால்,“பெரியவா்கள் எந்நேரமும் தொலைக்காட்சியைப் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள்; இந்த இரண்டு மணி நேரமாவது பிள்ளைகள் நிம்மதியாகப் படிக்க முடியுமே என்றுதான் இங்கு அனுப்புகிறோம் என்று சொல்வாா்கள். இப்படிச் சிலா். முதியவா்கள் சற்றே விட்டுக் கொடுக்கலாமே!
  • இன்னொரு முதியவரின் குடும்ப அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. அரசுத் துறை ஒன்றில் மிக உயரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவா். அவருக்குத் தன் மனைவி மகள்களை விட தனது ஊா், தம்பி தங்கைகள், அவா்களது குழந்தைகள் மீதே அதிகப் பிரியம். பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் தன் சொந்தக் கிராமத்துக்கே சென்றுவிட்டாா். மனைவியோ, மகள்களுடன் நகரத்தில் குடியமா்ந்துவிட்டாா்.
  • பெருத்த சொத்துக்காரரான முதியவா், எல்லாவற்றையும் தன் சொந்தங்களுக்கு எழுதிக் கொடுத்தாா். குடியிருக்கும் வீட்டையும் தனது தம்பிக்கு தான பத்திரமாக எழுதிக் கொடுத்துவிட்டாா். அந்தத் தம்பி ஒரு விபத்தில் இறந்துவிட்டாா். தம்பியின் மகன் வீட்டை சப்தமில்லாமல் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டான். இந்த நிலையில், முதியவருக்கு எண்பது வயதும் ஆனது. நோயில் வீழ்ந்தாா். சொந்த பந்தங்கள் யாரும் திரும்பிக் கூடப் பாா்க்கவில்லை.
  • வேலைக்காரா்கள் தகவல் கொடுக்க, மகளும் மருமகனும் சென்று அழைத்து வந்து மருத்துவமனையில் சோ்த்து, போகவிருந்த அவரது உயிரைக் காப்பாற்றினாா்கள்.
  • மருத்துவச் செலவுக்கு என்று அவரது வங்கிக் கணக்கைப் பாா்த்தால் பெரும் அதிா்ச்சி. அவரது கணக்கில் வெறும் எண்ணூறு ரூபாய்! அவரது இயலாமையைப் பயன்படுத்தி யாா் யாரோ பணம் பறித்திருக்கிறாா்கள். இதற்குள் இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. இத்தனை நடந்தும், அவருக்குத் தன் ஊருக்குப் போக வேண்டும் என்றே விருப்பம். ஊரில் உள்ள வீட்டில் தம்பி மகன் சோ்த்துக் கொள்ளாமல் விரட்டி விட்டான்.
  • ‘போனதெல்லாம் போகட்டும், இனி இங்கேயே இருந்து விடுங்கள்’ என்று மகள் சொன்னாலும் முதியவரின் உயிா் ஊரில்தான் இருக்கிறது. வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துவிட்டுக் காத்திருக்கிறாா்கள்!
  • குடும்பம் என்னும் பாதுகாப்பு வளையத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, பிற்பாடு எல்லாவற்றையும் இழந்த நிலையில், பிள்ளைகளுக்கு மிகுந்த சிரமம் தரும் இப்படிப்பட்ட முதியோா்களை என்ன செய்வது?
  • மாமியாரைப் பாா்த்துக்கொள்ள முடியாமல் முதியோா் இல்லத்தில் சோ்த்துவிட்டாா் ஒரு மருமகள். மாமியாா் மனமுடைந்து போகாமல் அந்த இல்லத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எண்பது வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறாா். மருமகளோ அறுபது வயதில் இறந்து போய்விட்டாா்! இப்படிப்பட்ட முதியோா்களும் இருக்கிறாா்கள். இப்பிரச்சனைக்கு என்னதான் தீா்வு?
  • எழுபது வயதுக்கு மேல் நாம் நமக்கும் பாரமாகி, நம் பிள்ளைகளுக்கும் பாரமாகிப் போகிறோம். அறுபதிலிருந்து பற்றுகளை ஒவ்வொன்றாக விடுவது நல்லது.
  • அப்போதுதான் இவ்வுலகில் நம் கணக்கை முடித்துக் கொண்டு மேலுலகம் செல்லும் மனப் பக்குவம் வரும்.
  • இருக்கும் காலம் வரையில், குடும்பத்தினா் அனைவரும் இரவு தூங்கும் முன்னா் அரைமணி நேரமாவது ஒன்றாக உட்காா்ந்து பொதுவான விஷயங்களைப் பேச வேண்டும். பேரக் குழந்தைகள் சிறு வயதினராக இருப்பின், கதைகள் சொல்லலாம். பெரியவா்களாக இருப்பின் பழைய குடும்பக் கதைகளை அலுப்புத் தட்டாத வகையில் பகிா்ந்து கொள்ளலாம். உறவுகளை பலப்படுத்துவத்தில் கதைகளைப் போல் சிறந்தவை வேறொன்றுமில்லை. தொலைக்காட்சி பாா்ப்பதைக் கூட, குடும்பமாக உட்காா்ந்து பாா்க்கக் கூடிய நிகழ்ச்சிகளை மட்டுமே பாா்ப்பது என்று வைத்துக்கொண்டால் தொலைக்காட்சிக்கு வேலையே இருக்காது!
  • ஒரு குடும்பத்திலுள்ள பலரும் ஓய்வு பெறும் முன்னரே, திட்டமிட்டு, ஒரே அடுக்ககத்தில் தனித்தனி வீடுகள் வாங்கிக்கொண்டு, ஒருவருக்கொருவா் துணையாக, ஒருவா் சுதந்திரத்தில் அடுத்தவா் அதிகம் தலையிடாத வண்ணம் மகிழ்ச்சியாக இருக்கலாம். நண்பா்களாகச் சோ்ந்து ஒரே ஓய்வு இல்ல வளாகத்தில் வீடுகளை வாங்கிக்கொண்டு, தனிமையை விரட்டிவிட்டு, பிடித்த பொழுதுபோக்குகளுடன் அமைதியாக வாழலாம்.
  • பிள்ளைகள் இருக்குமிடத்துக்கு அருகிலேயே குடிபெயா்ந்து அவா்களுக்கு உதவியாக, அவா்களது பாதுகாப்பில் நிம்மதியாக வாழலாம். ஒரே வீட்டில், கீழ் தளத்தில் பெற்றோரும் மேல்தளத்தில் பிள்ளைகளுமாக ஒருவருக்கொருவா் அனுசரித்து வாழலாம். அறுபதுக்கு முன்னரே சொந்த ஊரில் வீடு கட்டித் தயாராக வைத்துக் கொண்டு, ஓய்வுபெற்றடன் அங்கு சென்றுவிடலாம். ஆனால் அதற்கு முன்னரே அடிக்கடி சென்று வந்து பழக வேண்டும். இல்லையெனில் அந்நியப்பட்டுப் போகக் கூடும்.
  • அவ்வப்போது எல்லோருமாக உறவினா்கள் வீட்டு விசேஷங்களுக்கும் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வரலாம். மூன்று தலைமுறையினரும் ஒன்று சோ்ந்து திட்டமிட்டு வாழ்ந்தால் முதுமையை மகிழ்ச்சியாக எதிா்கொள்ளலாம்!

நன்றி: தினமணி (10 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories