மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன்?
- தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கான நிதி என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலைகளை எழுப்பியிருக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று சொல்வது இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு, தமிழகத்துக்கான நிதியையும், நீதியையும் தர மறுப்பது நியாயமற்ற போக்கையே காட்டுகிறது.
- தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை விடுவிக்க மத்திய அரசு மறுக்கிறது. பிஎம்ஸ்ரீ பள்ளிகள் மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மறுப்பதால், இந்தப் போக்கை மத்திய அரசு கையாள முயற்சிக்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் நலன்கள் குறித்து கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல், தேசம் முழுவதும் தேசிய கல்விக் கொள்கையைப் பரப்புவதையே முழு நேரக் கொள்கையாக மீண்டும் மத்திய அரசு செயல்பட்டு வருவது, இந்திய இறையாண்மையை அசைத்துப் பார்க்கிற முயற்சியாகும்.
- பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அப்படியானால், தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழிக்கு எதிராக இருக்கிறதா? தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்றுத் தேர்கின்றனர். பிறகு ஏன் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்புகிறார்.
- இருமொழிக் கொள்கையே உயிர்நாடியானது என்று தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. 3,500 ஆண்டுகள் பழைமைமிக்க பண்பாடு, நாகரிகத்தின் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழி தாய்மொழியாகவும், இணைப்பு மொழி ஆங்கில மொழியாகவும் இருக்கும் நிலையே தொடர வேண்டும் என தமிழ்நாடும், தமிழக மக்களும் விரும்புகின்றனர்.
- இதில் விருப்பப்பட்டு வேறு மொழியை அவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு மொழியைக் கட்டாயப்படுத்துவதையோ, திணிப்பதையோ தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவே அரசின் சித்தாந்தமாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இது தமிழர்களின் உரிமையாகவும் பார்க்கப்படுகிறது.
- பெரும் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மும்மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். ஏழைக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கொள்கையே கற்கிறார்கள். போட்டித் தேர்வுகள் என்று வரும்போது தனியார் பள்ளிகளில் படிப்போர் முதலிடத்தைப் பெறுகின்றனர்; அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்தங்கியும் விடுகிறார்கள். ஆகவே, ஓர் அரசே இதுபோன்ற சமுதாய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாமா என்ற எதிர்க் கேள்வியும் கேட்கப்படுகிறது.
- நாட்டு நலனுக்காக உருவாக்கப்பட்ட மொழிக் கொள்கை, ஒவ்வொரு அரசையும் அந்தக் கட்சியின் கொள்கையின் சித்தாந்தங்களை நோக்கி நகர்த்துகிறது. ஒவ்வொரு மொழியின் சிந்தனைகளை அந்தந்த மொழியின் வழியே படிப்பது, அந்தச் சிந்தனைகளை முழுப்பரிணாமத்தில் புரிந்துகொள்ள உதவும். பள்ளிப் படிப்பு என்பது 12 ஆண்டுகள்; இந்தக் குறுகிய ஆண்டுகளில் எத்தனை மொழிகளைப் படிக்க வேண்டும் என்பதை மொழிக் கொள்கைதான் முடிவு செய்கிறது.
- நாட்டின் தேவையையும், குடிமக்கள் பெற வேண்டிய மொழித் திறனையும் இந்தக் கொள்கையே தீர்மானிக்கிறது. 1961-இல் வகுக்கப்பட்டதுதான் மும்மொழிக் கொள்கை. மாநில முதல்வர்கள் மாநாட்டில் இந்தக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது கல்விக் கொள்கையை வகுக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் இருந்தது. மும்மொழிக் கொள்கை நாடு முழுவதுக்கும் பொருந்தும். இது இந்திய நாட்டுக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கல்வி பொதுப் பட்டியலுக்குப் போனதற்குப் பிறகு பல சர்ச்சைகள் எழுந்தன. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும், அந்தந்த மாநிலங்களின் மொழிகள் மீதான தாய்மொழிப் பற்றும் அதிகரித்தது.
- தமிழகத்தில் 1968-இல் மும்மொழிக் கொள்கையை இருமொழிக் கொள்கையாக மாற்றி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்தான் எங்களது தனித்த அடையாளம். அதனால், மாநில ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில் இருக்கிற வேற்று மொழி தேவையில்லை. அது ஹிந்தி அல்லது இன்னொரு இந்திய மொழியாகக்கூட இருக்கலாம். தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கிலமே போதும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் இருமொழிக் கொள்கை.
- மத்திய அரசு நடத்திவரும் கேந்திரிய வித்யாலயங்களில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், தமிழும், ஆங்கிலமும் கற்பதைப் போல, மத்திய கல்வி வாரியத்தின் கீழ் உள்ள கேந்திரிய வித்யாலய மாணவர்கள் ஹிந்தியையும், ஆங்கிலத்தையும் கற்கின்றனர். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைவாய்ப்புகளுக்கும், வியாபாரத்திற்கும் போகிறவர்களுக்கு இருமொழிக் கொள்கை போதுமானது என்று வரையறுக்கப்பட்டது.
- மும்மொழிக் கொள்கை என்பது தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம், வேறு ஒரு அயல் மொழி, அதாவது, இன்னொரு இந்திய மொழி. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் மும்மொழிக் கொள்கை இருந்தது. வேலைவாய்ப்புகளையும், பொருளாதார வாய்ப்புகளையும் மாணவர்கள் பெருக்கிக் கொள்வதற்கு மாநிலங்களின் ஆட்சி மொழிகளையும், மத்திய அரசின் இரண்டு ஆட்சி மொழிகளையும் பயில வேண்டும். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாட்டையும், பாரம்பரியத்தையும் பின்பற்றுவதற்கு இன்னொரு மொழியையும் படிக்க வேண்டும் என்ற நிலையில்தான், கட்டாய ஹிந்தித் திணிப்பின் மூலமாக இந்தக் கொள்கை பலவீனப்பட்டுப் போய்விட்டது.
- வேறு ஒரு இந்திய மொழியைப் படிப்பதால் பொருளாதார வாய்ப்பு பெருகுவதற்கு வாய்ப்பில்லை. அத்துடன் இந்தியாவின் இன்னொரு மொழியையும், கலாசாரத்தையும் புரிந்துகொண்டு வேறு ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஆகவே, ஹிந்தி மொழியைத்தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்கிற சூழ்ச்சியும் அதில் இருக்கிறது.
- ஹிந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதத்தை படிக்கத் தொடங்கினார்கள். மும்மொழிக் கொள்கைக்கு இது முரணாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட அந்தந்த மாநில அரசுகள் ஆதரவு அளித்தன. ஏனென்றால், சம்ஸ்கிருதம் படிப்பது அதிக மதிப்பெண்களைப் பெற உதவும். அதனால், உயர்கல்வியில் இடம் பெறுவதற்கு பேருதவியாக அமையும் என்ற லாப நோக்கு அதில் பார்க்கப்பட்டது.
- மேலும், சம்ஸ்கிருதத்துக்கான இந்திய பாரம்பரியமிக்க அடையாளமும் இன்னொரு காரணம். பெரும்பாலும் மேல்தட்டு மாணவர்களே இவற்றைத் தேர்வு செய்கிறார்கள். பின்னர் ஹிந்தி பேசுகிற மாநிலங்களில் உள்ள கீழ்தட்டு மாணவர்களும் வேறு வழியே இன்றி சம்ஸ்கிருதம் படிக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
- மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றினால்தான் தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கான நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது; மேலும், ஹிந்தி மட்டுமல்ல, இந்தியாவின் வேறு மொழியையும் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறுவது ஹிந்தியைத் திணிப்பதற்கான மறைமுக உத்தியாகும்.
- ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையானோருக்கு தாய்மொழியே மாநில மொழிதான். சிறுபான்மையினரின் தாய்மொழியாக தங்கள் மொழியை மட்டும் பள்ளியில் படித்தால், மாநில மொழியில் எழுத்தறிவும், உயர்திறனும் இல்லாமல் போகலாம். இந்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு இவை எதிரானதாகவும், அந்த மாநிலங்களில் உள்ள மாணவர்களின் பொருளாதார வாய்ப்பை நிறைவேற்றாமலும் போய்விடும்.
- ஆகவே, சிறுபான்மையினர் ஆங்கிலமே பிரதானமாக எடுத்துப் படிக்கிறார்கள். அவர்களை மாநில மொழி பயில்வதை அரசு கட்டாயப்படுத்தினால், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. ஆகவே, மும்மொழிக் கொள்கையில் சிறுபான்மை மொழிக்கும், பெரும்பான்மை மொழிக்கும் மோதல் தொடர்கிறது. இதனாலேயே இரண்டு மொழிகளையும் கற்பது சிறுபான்மையினருக்கு மொழிச் சுமையை அதிகமாக்கி சமத்துவக் கல்விக் கொள்கையை முரணாக்குகிறது.
- கேந்திரிய வித்யாலயங்களில் படிக்கும் மாணவர்கள் நாட்டின் அதிகாரமிக்க பதவிகளில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். பல மாநிலங்களைச் சேர்ந்த இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்காத பட்டதாரிகளாக பதவிகளில் அமர்வதும், நாட்டின் மேலாண்மைப் பொறுப்புகளில் இருப்பதும் நல்லதல்ல. நாட்டில் சந்தைப் பொருளாதாரம் மேலோங்கி இருக்கும்போது, போட்டித் தேர்வுகளில் கடும் போட்டி நிலவும் சூழ்நிலையில், மாணவர்களைச் சந்தைக்குத் தயார்படுத்துவதே கல்வியின் நோக்கம் என்கிற கருத்து எழுந்தபோது ஆங்கிலம் ஒன்றே போதும் என்ற எண்ணம் தொடங்கியது.
- தனியார் பள்ளிகளில் மொழிக் கொள்கைக்கு ஏற்ப மொழிகளைக் கூடுதலாகப் படிக்க வேண்டுமென்றால் பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கத் தொடங்குகிறார்கள். இதில் மேல்தட்டு மாணவர்கள் உலக அளவில் கல்வியையும், வேலைவாய்ப்பையும் பெற பேருதவியாகவும் இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்பதால் மும்மொழிக் கொள்கைக்கு சர்ச்சைகளும், எதிர்ப்புகளும், ஆதரவுகளும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
- ஆகவேதான், மும்மொழிக் கொள்கையை வலிய திணிப்பது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும் என்கிற கருத்து எழுகிறது. மேலும், கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஒத்திசைவுப் பட்டியலுக்கு சென்றிருக்கிறதே தவிர, மத்திய அரசு பட்டியலில் கல்வி இல்லை. மத்திய அரசுப் பட்டியலில் கல்வி முழுமையாக இருப்பதைப் போல, மாநில உரிமைகளின் மீது கல்லெறிந்து எதேச்சதிகாரமாகப் பேசுவது மொழிக் கொள்கையின் ஆணிவேரில் அமிலத்தை ஊற்றுவதைப் போலாகும்.
நன்றி: தினமணி (19 – 02 – 2025)