முல்லை பெரியாறு விவகாரம்: ஒத்துழைப்பு அளிக்கட்டும் கேரளம்
- முல்லை பெரியாறு அணைப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்பை உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவிடம் ஒப்படைப்பதா அல்லது அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள குழுவிடம் ஒப்படைப்பதா என்பது பற்றி ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில், இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை எட்ட வேண்டியது அவசியமாகிறது.
- முல்லை பெரியாறு அணையைப் பலப்படுத்தவும் பராமரிக்கவும் மரங்களை வெட்டத் தமிழ்நாடு அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில்தான் மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கில் முல்லை பெரியாற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதைத் தடுப்பதே கேரளத்தின் நோக்கமாக இருப்பதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- கேரள மண்ணில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான அணை இருப்பதாகவும், அதைக் கவனித்துக்கொள்ளத் தமிழக அரசு விரும்பவில்லை என்றும் கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டபோது, அதற்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாகக் கூறி அந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
- அணையின் பாதுகாப்பை உறுதிசெய்வது உச்ச நீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவா அல்லது 2021 அணைப் பாதுகாப்புச் சட்டத்தின்படி சட்டபூர்வக் குழுவா என்பதுதான் கேள்வி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- எனவே, முல்லை பெரியாறு அணையைப் பற்றி கேரளத்தின் வழக்கமான வாதங்களைவிட அடுத்தகட்ட நகர்வுக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர முடிகிறது. எந்த மேற்பார்வைக் குழு தேவை என்பது குறித்துத் தமிழ்நாடு, கேரள அரசுகள் அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டிய தேவை தற்போது எழுந்திருக்கிறது.
- இது ஒருபுறம் இருக்க, 129 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணையைப் பலப்படுத்திப் பணிகளை முடிக்க 2014இல் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது. எந்தவொரு அணையின் ஆயுள்காலமும் அதன் காலம் தவறாத பராமரிப்பையும், அவ்வப்போது கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அணையை நவீனப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டது.
- 2006 உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லை பெரியாற்றில் பேபி அணையைப் பலப்படுத்தி அணியின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கேரள அரசு முல்லை பெரியாற்றில் பேபி அணையைப் பராமரிக்கவும் பலப்படுத்தவும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
- 2021இல் பேபி அணையில் 15 மரங்களை வெட்ட முதலில் அனுமதி அளித்த கேரள அரசு, பின்னர் அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றது. முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டது என்று ஒருபுறம் கேரளம் கூறுவதும்; மறுபுறம் அணையைப் பலப்படுத்திப் பராமரிக்க முட்டுக்கட்டை போடுவதும் முரணானது. இது முல்லை பெரியாறு பழைய அணையை இடித்துவிட்டுப் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்கிற கேரள அரசின் எண்ணத்தையே அம்பலப்படுத்துகிறது.
- கேரளத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். எனவே, மேற்பார்வையிடுவது எந்தக் குழுவாக இருந்தாலும், முல்லை பெரியாறு பேபி அணையைப் பலப்படுத்திப் பராமரிக்கத் தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2025)