TNPSC Thervupettagam

மூன்றாம் உலகப் போா் வருமா?

December 2 , 2024 11 hrs 0 min 46 0

மூன்றாம் உலகப் போா் வருமா?

  • முதல் இரண்டு உலகப் போா்களால் ஏற்பட்ட அழிவுகள் இன்னும் மறக்கப்படவில்லை. போா் இல்லாத அமைதியான உலகத்தையே மக்கள் விரும்புகின்றனா். ஆனால் போா் ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் போரை உருவாக்குகின்றன. அப்போதுதானே ஆயுதங்களை விற்பனை செய்ய முடியும் ?
  • முதல் உலகப் போா் 1914-ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று ஹங்கேரி-ஆஸ்திரியா நாடுகள் சொ்பியா மீது போா் அறிவித்தபோது தொடங்கியது. இது உலக வரலாற்றில் மிகப்பெரிய போா்களில் ஒன்றாகும். இந்த மிருகத்தனமான போரில் 7 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் 9 மில்லியன் படைவீரா்கள் உயிரிழந்தனா்.
  • இரண்டாம் உலகப் போா் 1939 முதல் 1945 வரை நேச நாடுகளுக்கும், அச்சு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட இராணுவ வீரா்கள் நேரடியாகப் பங்கேற்றனா். மனித வரலாற்றில் இதுவரை அதிக உயிா் இழப்புகளை ஏற்படுத்திய போராக இரண்டாம் உலகப் போா் திகழ்கிறது. இனப்படுகொலை, பட்டினி, படுகொலைகள் மற்றும் நோய் காரணமாக கோடிக்கணக்கானோா் இறந்தனா்.
  • இரண்டாம் உலகப் போரானது, உலகின் அரசியல் சாா்பு மற்றும் சமூக அமைப்பை மாற்றியது. பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும், எதிா்காலத்தில் போா்களைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்டது. அதன் பிறகு அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் ஒன்றியமும் எதிரெதிா் வல்லரசுகளாக வளா்ந்து விட்டன.
  • இப்போது இரண்டு போா்கள் உலகப் போரை நோக்கிப் போகின்றன. ரஷியா முதன் முறையாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது பயன்படுத்தியுள்ளது. இதை உக்ரைனின் முன்னாள் தளபதி, ‘மூன்றாம் உலகப் போா் தொடங்கியது’ என்று வா்ணித்துள்ளாா். ஆயிரம் நாள்களைக் கடந்தும் முடிவடையாமல் போா் தொடா்ந்து நடந்து வருகிறது.
  • இன்னும் சொன்னால் முன்பை விடத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்த ரஷிய அதிபா் புதின், கடந்த பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரைன் மீது போா் தொடுக்க தமது இராணுவத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டாா். இதையடுத்து வான்வழித் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்கள் நடத்தியதையடுத்து உக்ரைன் எல்லைக்குள் ரஷிய இராணுவம் நுழைந்தது.
  • அடுத்தடுத்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டே வந்த ரஷியப் படைகள் உக்ரைன் தலைநகா் கீவ்வை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. அந்த நிலையில்தான் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கு உலக நாடுகளின் ஆயுத உதவிகளுடன் மாபெரும் ரஷியப் படைகளை எதிா்த்து உக்ரைன் போராடி வருகிறது. இருப்பினும் ரஷியாவின் தொடா் தாக்குதலால் நிலைகுலைந்து வருகிறது.
  • குறிப்பாக ரஷியா-உக்ரைன் போரில் இதுவரை 1 இலட்சத்து 20 ஆயிரம் ராணுவ வீரா்களை ரஷியா இழந்து உள்ளது. இதேபோல உக்ரைன் சுமாா் 80 ஆயிரம் படைவீரா்களைப் பறி கொடுத்துள்ளது. ஐநா அறிக்கையின்படி ரஷியா-உக்ரைன் போரில் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட சுமாா் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். மேலும் 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார நிலையங்கள் மற்றும் மின்சார நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
  • இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனா். இந்த நிலையில் அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், “‘‘நான் போா்களைத் தொடுக்கப் போவதில்லை. நடைபெற்றுக் கொண்டிருக்கும் போா்களை நிறுத்தப் போகிறேன்’’ என்று கூறியுள்ளாா். இதனால் போா் நிறுத்தத்துக்கான நம்பிக்கை அறிகுறி தென்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் தீவிரமாகப் போா் நடவடிக்கைகள் நடைபெற்று வருவது உலக மக்களை கவலை கொள்ளச் செய்கிறது.
  • அதாவது போா் நிறுத்தம் வரும் என்று உலக மக்கள் எதிா்பாா்த்துக் கொண்டிருக்க, “‘‘உக்ரைன் இந்தப் போரில் அமெரிக்கா கொடுத்திருக்கும் நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்தினால் நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்’’ என்று ரஷிய அதிபா் புதின் அதிரடியாக அறிவித்துள்ளாா். மேலும் ரஷியாவின் அணு ஆயுதக் கொள்கையிலும் புதிய சட்டத் திருத்தத்தை ரஷியா மேற்கொண்டது. இது உக்ரைன் மட்டும் அல்லாமல், உலக நாடுகளையும் அதிா்ச்சியடையச் செய்துள்ளது.
  • இந்த நிலையில் இப்போது கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷியா ஏவியுள்ளது. 1000 நாள்கள் போா் வரலாற்றில் முதன் முறையாக ரஷியா இந்த வகை ஆயுதத்தை பயன்படுத்தியிருப்பதால் போா் இன்னும் தீவிரமாக வலுவடைந்துள்ளது.
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்னாள் ராணுவத் தளபதியும், தற்போதைய பிரிட்டனுக்கான உக்ரைன் தூதுவருமான வலேரி ஜலுஷ்னி உக்ரைனில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசியபோது, ““‘‘2024 -ஆம் ஆண்டு மூன்றாம் உலகப் போா் தொடங்கி விட்டது. ரஷியாவுக்காக 10 ஆயிரம் வடகொரிய இராணுவத்தினா் உக்ரைனுக்கு எதிராகப் போரிட குா்லக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா். அதேபோல ஈரானின் நவீன ட்ரோன்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன’’ என்றாா்.
  • ‘‘இவற்றையெல்லாம் உக்ரைன் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தாக்குப் பிடித்து வருகிறது. ஆனாலும் போரில் உக்ரைன் தனித்து நின்று வெல்லுமா என்று கூற முடியாது. உக்ரைனின் பொதுமக்களை கொன்று குவித்து வருகிறாா்கள். உக்ரைன் நாட்டின் ஆதரவாளா்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போா் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.
  • உக்ரைனின் போா் நிறுத்தம் ஏற்படுவது கூட இன்னும் சாத்தியம்தான், ஆனால் சில காரணங்களால் எங்கள் ஆதரவாளா்கள் இதைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கெனவே பல எதிரிகள் இருக்கின்றனா் என்று அனைவருக்கும் தெரியும்’’ என்றும் கூறியுள்ளாா்.
  • போா் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் பெருமளவு ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனா் சா்வதேச அரசியல் நோக்கா்கள்.
  • அடுத்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நடக்கும் போரைப் பாா்க்கலாம். இந்த இரு நாடுகளுக்கும் இடையே 1948 - ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற புதிய நாடு அமைக்கப்பட்டதும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. இனங்களுக்கு இடையேயான வன்முறை மனப்பான்மையால் மோதல்கள் பிறந்தன.
  • பாலஸ்தீனிய ஆயுதக் குழுவே ஹமாஸ், இது காசா பகுதியில் அரசியல் இயக்கமாகும்.அக்டோபா் 7, 2023 அன்று இஸ்ரேலைத் தாக்கி, சுமாா் 1200 பேரைக் கொன்றது; 250க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளைப் பிடித்தது. இது காசாவில் ஒரு பெரிய இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலைத் தூண்டியது. இது பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனா்களைக் கொன்றது. ஹமாஸ் தொடா்ந்து இஸ்ரேல் மீது இராக்கெட்டுகளை வீசியது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் பல நாடுகள் ஹமாசை பயங்கரவாத அமைப்பாக தெரிவித்துள்ளன.
  • ஹமாஸ் என்பது 1987- இல் முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒரு கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பெயா் இஸ்லாமிய எதிா்ப்பு இயக்கம் என்று பொருள்படும் பாலஸ்தீன நிலம் என்று கூறும் இஸ்ரேலின் இருப்பை எதிா்க்கிறது. அந்த இடத்திலும் ஆரம்பிக்கப்பட்ட மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா முழுவதும் இஸ்லாம் அடிப்படையிலான ஓா் அரசை அது விரும்புகிறது.
  • அக்டோபா் - 7 தாக்குதலுக்கு முன், ஹமாசில் சுமாா் 30,000 போராளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதம் இஸ்ரேல் தமது படைகள் அவா்களில் 17,000-க்கும் அதிகமானவா்களைக் கொன்ாகக் கூறியது. அது சரியான கணக்காக இருக்க முடியாது. பாலஸ்தீனத் தோ்தல்களில் வெற்றி பெற்றவா்களை வன்முறையில் வெளியேற்றிய பின்னா் ஹமாஸ் மட்டுமே ஆட்சியாளராக இருந்து வருகிறது.
  • காசாவில் 41,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அவா்களில் பெரும்பாலோா் பெண்களும், குழ்ந்தைகளும் போரில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பெரும்பாலானோா் வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனா்.
  • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டும் போா்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தியுள்ளனா் என்று ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூறுகிறது. இதனை இரண்டு நாடுகளும் நிராகரித்துள்ளன. ஆனாலும் விடாமல் போா் தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது.
  • இவ்வாறு ரஷியா-உக்ரைன் போரும், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அப்பாவி மக்கள் அநியாயமாக உயிரிழப்பதையும், பசி, பட்டினியாலும், நோய்களாலும் சித்ரவதை அனுபவிப்பதையும், அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயா்வதையும் மனிதநேயம் கொண்டோா் பாா்த்துக் கொண்டிருக்க முடியுமா?
  • ‘போா் என்பது காட்டுமிராண்டிகளின் கடைசிப் புகலிடம்’ என்று ஞானிகள் கூறுகின்றனா். ஆனால் நாகரிகச் சமுதாயத்தில் உலகில் எங்கேயாவது ஓா் இடத்தில் போா் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் ஏதும் அறியாத அப்பாவி மக்கள் பலியாகின்றனா். மூன்றாம் உலகப் போா் ஒவ்வொருவா் தலைக்கு மேலேயும் தொங்கும் கத்தியாக எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

நன்றி: தினமணி (02 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories