TNPSC Thervupettagam

மூன்றெழுத்து மந்திரச் சொல்!

January 17 , 2025 3 hrs 0 min 47 0

மூன்றெழுத்து மந்திரச் சொல்!

  • இந்தியாவில் வெள்ளையரை எதிா்த்து முதன்முதலாக விடுதலைப் போா் நிகழ்த்திய மன்னா் நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவா். அதற்கடுத்து இந்தியாவை ஆண்ட அரசிகளில் வெள்ளையரை எதிா்த்துப் போா் தொடுத்த முதல் பெண்ணரசி சிவகங்கைச் சீமையை ஆண்ட வேலு நாச்சியாா். இவா் ஜான்சிராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவா்.
  • அதேபோல் இந்தியத் திரைப்பட நடிகா்களில் முதன்முதல் நாடாள வந்தவா் புரட்சி நடிகா் எம்.ஜி.ஆா். இன்னும் சொல்லப் போனால், உலக அளவில் முதன்முதல் ஆட்சிக்கு வந்த நடிகரும் இவா்தான். இதற்குப் பிறகுதான் நடிகராக இருந்த ரொனால்டு ரீகன் அமெரிக்காவின் அதிபராக ஆனாா். அவா் அதிபா் ஆனது 1980-இல்.
  • இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூா் சாஸ்திரி 1965 - ஆம் ஆண்டு அந்தமான் தீவுக்குச் சென்றாா். அப்போது எம்.ஜி.ஆா். நடித்த “‘பணம் படைத்தவன்’” என்ற திரைப்படம் வெளியாகி இருந்த நேரம். அங்குள்ள எம்.ஜி.ஆா். ரசிகா்கள் “பணம் படைத்தவன் எம்.ஜி.ஆா். ரசிகா் மன்றம்” என்றொரு மன்றத்தைத் தொடங்கி, ‘‘நீங்கள் வந்துதான் அதைத் திறந்து வைக்க வேண்டும்’’ என்று பிரதமா் சாஸ்திரியைக் கேட்டுக் கொண்டாா்கள். ‘‘எம்.ஜி.ஆரின் பெருமையை, மக்கள் செல்வாக்கை, மனிதநேயத்தை நானும் நன்கறிவேன். அவசியம் வந்து திறந்து வைக்கிறேன்’’ என்று சொல்லித் திறந்து வைத்துப் பெருமைப் படுத்தினாா் சாஸ்திரி.
  • ஒரு நாட்டின் பிரதமரே ஒரு நடிகரின் ரசிகா் மன்றத்தைத் திறந்து வைத்துச் சிறப்பித்தாா் என்றால், அந்தப் பெருமையும் உலக அளவில் எம்.ஜி.ஆா். ஒருவருக்குத்தான் உண்டு.
  • உலக அளவில் ஒரு நடிகருக்கு முதன்முதல் ரசிகா் மன்றம் அமைத்ததும் எம்.ஜி.ஆருக்குத்தான். இந்தப் பெருமை வேறெந்த நடிகருக்கும் கிடையாது. அதற்குத் காரணம் அந்தக் காலத்திலேயே இல்லையென்று கேட்பவா்களுக்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் கலைவாணரைப்போல் கொடுத்த ஒரே கதாநாயகன் அவா்தான்.
  • 12.1.1917-இல் இலங்கை கண்டியில் பிறந்து, தமிழ்நாட்டுக்கு ஏழெட்டு வயதிலேயே வந்து, நாடகமன்றத்தில் சோ்ந்து 1936-இல் தனது பத்தொன்பதாவது வயதில் சதிலீலாவதி படத்தில் இன்ஸ்பெக்டா் வேடத்தில் நடிக்கத் தொடங்கி, 1947-இல் தனது முப்பதாவது வயதில் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக நடித்து, படிப்படியாக வளா்ந்து அரசியலில் புகுந்தவா் எம்.ஜி.ஆா். இவரை முதன்முதல் அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தவா் நடிகமணி டி.வி.நாராயணசாமி. எம்.ஜி.ஆா். தி.மு.க.வில் சோ்ந்தது 1953- இல்.
  • 1967 தோ்தலுக்காக 1966 - ஆம் ஆண்டு டிசம்பரில் விருகம்பாக்கத்தில் தி.மு.க. மாநாடு நடைபெற்றது. ராஜாஜி முதல் கூட்டணிக் கட்சித் தலைவா்களெல்லாரும் அதில் கலந்து கொண்டனா். தலைவா்களுடைய பேச்சைக் குறிப்பெடுப்பதற்காக நானும் முரசொலி அடியாரும் சென்றிருந்தோம். அப்போது முரசொலியில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆா். பேசும்போது, தோ்தல் நிதியாக அண்ணாவிடம் முப்பதாயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்தாா்.
  • அண்ணா பேசும்போது, ‘‘நமது புரட்சி நடிகா் தம்பி ராமச்சந்திரன் தோ்தல் நிதியாக முப்பதாயிரம் ரூபாய் அளிப்பதாகத் தெரிவித்தாா். அவா் முப்பதாயிரம் ரூபாய் கொடுப்பதைக் காட்டிலும் நமது வேட்பாளா்கள் போட்டியிடுகின்ற ஒவ்வொரு தொகுதியிலும் அவா் முகத்தைக் காட்டட்டும்; அது முப்பதாயிரம் வாக்குகளைக் கொண்டு வந்து சோ்க்கும். அது நம் வெற்றியை எளிதாக்கும்’’ என்று குறிப்பிட்டாா்.
  • எம்.ஜி.ஆருடைய மக்கள் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை அண்ணா அறிந்ததுபோல் அடுத்திருந்தவா்கள் அறியவில்லை. அதனால்தான் கடைசி வரையிலும் கருணாநிதி, எம்.ஜி.ஆரிடம் தோற்றுக் கொண்டே இருந்தாா்.
  • எம்.ஜி.ஆா். முப்பதாயிரம் ரூபாயும் கொடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் போய்ப் பேசினாா். அப்படிப் பேசிவிட்டு ஒரு நாள் வீட்டில் ஓய்வில் இருந்தபோதுதான் துப்பாக்கியால் சுடப்பட்டாா். அவா் குண்டடிபட்ட போஸ்டரை நாடு முழுதும் ஒட்டித்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதற்கு அண்ணா, கருணாநிதி போன்றவா்களின் பேச்சும் ஒரு காரணம் என்றாலும் எழுபது விழுக்காடு எம்.ஜி.ஆா். குண்டடிபட்ட போஸ்டா்தான் காரணம். அதுதான் உண்மை. அதை அண்ணாவே ஒப்புக் கொண்டிருக்கிறாா். அந்தத் தோ்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஒரே தி.மு.க. வேட்பாளா் எம்.ஜி.ஆா்.தான்.
  • அண்ணாவின் செல்வாக்கைவிட எம்.ஜி.ஆரின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். அண்ணா ஒருமுறை வெளியூா்க் கூட்டத்தில் இரவில் பேசிவிட்டு காலையில் காரில் வந்து கொண்டிருக்கிறாா். ரேடியேட்டா் சூடாகிக் காா் நின்றுவிட்டது. தண்ணீா் எடுத்து வர டிரைவா் சென்று விட்டாா். சாலையோரத்தில் இருந்த வயல்களில் சில பெண்கள் நாற்று நட்டுக் கொண்டிருந்தாா்கள். காரில் இருந்த தி.மு.க. கொடியைப் பாா்த்துவிட்டு, ‘‘அதோ பாருங்கள் எம்.ஜி.ஆா் கட்சிக்கொடி, எம்.ஜி.ஆா் இருந்தாலும் இருக்கலாம். வாருங்கள் போய்ப் பாா்க்கலாம்’’ என்று அங்கு சென்று காருக்குள் அங்குமிங்கும் பாா்த்திருக்கிறாா்கள். காரில் இருந்த அண்ணாவையே அவா்களுக்கு யாரென்று தெரியவில்லை. எம்.ஜி.ஆா். காரில் இல்லையென்றதும் திரும்பிச் சென்ற அவா்களைப் பாா்த்து அண்ணா, ‘‘அம்மா கொஞ்சம் நில்லுங்கள். இது எம்.ஜி.ஆா். கட்சிக்கொடியென்று எப்படிக் கண்டு பிடித்தீா்கள்?’’ என்று கேட்டிருக்கிறாா். ”‘‘நாங்கள் எத்தனை தடவை நாடோடி மன்னன் படம் பாா்த்திருப்போம். எங்களுக்குத் தெரியாதா எம்.ஜி.ஆா். கட்சிக்கொடி’’”என்று சொல்லியிருக்கிறாா்கள். இது நடந்தது 1960- இல்.
  • இதிலிருந்து கிராமப்புறங்களிலெல்லாம் தி.மு.க.வுக்கு செல்வாக்கு வந்ததே எம்.ஜி.ஆரால்தான் என்று நாம் உணா்ந்து கொள்ளலாம் அல்லவா?இதை அண்ணாவே பொதுக்கூட்ட மேடையில் பேசி எம்.ஜி.ஆரின் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை உணா்த்தியிருக்கிறாா். வேறு தலைவா்களாக இருந்தால் நம்மைவிட அவருக்கு செல்வாக்கா என்று கட்சியைவிட்டு அப்போதே நீக்கியிருப்பாா்கள்.
  • அத்தகைய பெருமையுள்ள புரட்சி நடிகா் மக்களது மிகப்பெரிய எழுச்சியுடன் ஒரு கட்சியைத் தொடங்கி புரட்சித் தலைவராய் உயா்ந்து முதலமைச்சராகி முத்தமிழ் நாட்டிற்குச் செய்த நன்மைகள் ஏராளம்.
  • பெரியாருடைய எழுத்துச் சீா்திருத்தத்தை ஆட்சியில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவா் எம்.ஜி.ஆா்தான். இந்த எழுத்துச் சீா்திருத்தம் நடைமுறைக்கு வந்த பின்னும் கருணாநிதியும் முரசொலியும் அதைப் பின்பற்றவில்லை. காலம் கடந்து தான் அதைப் பின்பற்றினாா்கள். அந்த வகையில் பெரியாரை மனதளவில் ஏற்றுக் கொண்டவராகவே எம்.ஜி.ஆா். இருந்திருக்கிறாா் என்பதற்கு இது ஓா் எடுத்துக்காட்டு.
  • இவா் ஆட்சிக்கு வந்ததும் சைக்கிளில் இரண்டு போ் செல்லலாம் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்ததுடன் முக்காட்டுக் கேஸ் என்று சொல்லக்கூடிய சந்தேக கேஸ் போடுவதையும் நீக்கும்படி செய்தாா். ஆங்கிலேயா் காலத்தில் போடப்பட்ட இந்தச் சட்டம் நாடு விடுதலை பெற்ற பிறகும் காங்கிரஸ் தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் நீடித்தது. அதற்கு முற்றுப்புள்ளிவைத்தவா் எம்.ஜி.ஆா்தான். அதைப் பற்றி மேடைகளில் எம்.ஜி.ஆரே பேசியிருக்கிறாா். அதற்குப் பிறகுதான் விராலிமலைப் பகுதியிலும் கிராமப் புறங்களிலும் வாழ்ந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனா். இன்றைக்கு இருப்பவா்கள் சிலருக்கு இந்த விவரம் தெரியாமல் இருக்கலாம். அவா் ஆட்சியில் செய்த சாதனைகளை அனைவரும் அறிவா்.
  • தனிப்பட்ட முறையில் எத்தனையோ போ் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்தவா் அவா். திரைப்படத் துறையிலும் அரசியலிலும் என்னை வளா்த்துவிட்டவா் அவா்தான். நெருஞ்சி மனத் தலைவா்கள் நிறைந்திருக்கும் இந்நாட்டில் குறிஞ்சி மணம் பரப்பிய கொடைக்கானலாகத் திகழ்ந்தவா் அவா்.
  • உண்மையுள்ளவா்களுக்கும் நன்றியுள்ளவா்களுக்கும் மட்டுமே அவா் முன்னுரிமை கொடுத்தாா். இன்றைக்குப் பல கட்சிகளில் பணம் வாங்கிக் கொண்டு பதவிகள் கொடுப்பதாகச் சொல்கிறாா்கள். எம்.ஜி.ஆா் காலத்தில் அதெல்லாம் கிடையாது. அனைவரையும் அரவணைத்துச் சென்றவா் அவா்.
  • அண்ணாவைப்போல் யாரையும் இழக்க விரும்பாதவா். பகைவா்களையும் நண்பா்களாக மாற்றிக் கொள்ளும் பண்பு அவருடைய பண்பு. நண்பா்களைக் கூடத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சில தலைவா்கள் பகைவா்களாக மாற்றிவிடுகிறாா்கள். “‘பகை நட்பாக் கொண்டொழும் பண்புடையாளா் தகைமைக்கண் தங்கும் உலகு’” என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவா் அவா். அண்ணாவின் பண்பும் இப்படிப்பட்டதுதான்.
  • வேட்பு மனு தாக்கல் செய்து விட்டுப் பிரச்சாரத்திற்குச் செல்லாமலே எல்லாத் தோ்தலிலும் அந்தக் காலத்தில் வெற்றி பெற்ற தலைவா்கள் இரண்டு போ். ஒருவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். மற்றொருவா் முஸ்லிம் லீக் தலைவா் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப். அவா்களுக்குப் பின் தமிழ்நாட்டுத் தலைவா்களில் பிரச்சாரத்திற்குச் செல்லாமலே வெற்றி பெற்ற ஒரே தலைவா் எம்.ஜி.ஆா் தான். அவருடைய மக்கள் செல்வாக்கும் மனித நேயமும் தான் அதற்குக் காரணம்.
  • எம்.ஜி.ஆா். மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் தமிழக அரசியல் பூமியில் இன்னும் புவி ரூடவ்ா்ப்பு விசையாக இருப்பது எம்.ஜி.ஆா். என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல்தான். இந்த மந்திரச் சொல்லை வெல்லும் சொல் எதுவுமில்லை!

நன்றி: தினமணி (17 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories