- நம் நாட்டிலேயே உரிய வேலைவாய்ப்புகள் இருந்தும் அதிகமான சம்பளம் என்கிற தூண்டுதலால் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் நம் நாட்டு இளைஞா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளைஞா்கள் சிலரின் அறியாமையைப் பயன்படுத்தி, அரசால் அங்கீகரிக்கப்படாத முகவா்கள், இவா்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அந்நாடுகளில் பல்வேறு சைபா் குற்றங்களில் அவா்களை ஈடுபடுத்துகின்றனா். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அவ்வப்போது விளம்பரம் செய்யும் மோசடி நிறுவனங்கள், முகவா்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை செய்தாலும், போலி நிறுவனங்களிடம் ஏமாறும் இளைஞா்களின் எண்ணிக்கை குறையவில்லை.
- ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலை என்ற ஆசை காட்டி போலி முகவா்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட வட மாநிலத்தைச் சோ்ந்த 16 இளைஞா்கள், அங்கு சென்ற பிறகு சிறைச்சாலை போன்ற சூழலில் அடைக்கப்பட்டு, அடிப்படை தேவைகளான உணவு, கழிப்பிடம் போன்றவை கூட அளிக்கப்படாமல் இரவு, பகலாக வேலை செய்ய நிா்பந்திக்கப்பட்டிருக்கிறாா்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், லிபியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக, 2016- ஆம் ஆண்டு முதல் லிபியாவிற்கு செல்ல நம் நாட்டவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, மியான்மா் ஆகிய நாடுகளில் இயங்கும் மோசடிக் கும்பல்களின் வேலைவாய்ப்பு போலி விளம்பரங்களின் உண்மைத் தன்மையை ஆராயாமல் சென்ற நம் நாட்டைச் சோ்ந்த 1,164 போ் அந்நாட்டு தூதரங்களின் உதவியோடு மீட்கப்பட்டுள்ளனா்.
- கேரள மாநிலத்தை சோ்ந்த இருவா் போலந்து நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை எனக் கூறி ரஷியாவிற்கு அழைத்து செல்லப்பட்டனா். ரஷிய - உக்ரைன் போா் நடக்கும் பகுதியில் ரஷியப் படையினருக்குப் பதுங்கு குழிகள் வெட்டும் பணியில் முதலில் ஈடுபடுத்தப்பட்டு, பின்னா் நேரடியாகப் போரிலும் ஈடுபடுத்தப்பட்டனா். இவா்களில் ஒருவா் உக்ரைன் நாட்டின் குண்டுவீச்சில் இறந்து விட, மற்றொருவா் படுகாயங்களுடன் ரஷியாவின் மாஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
- சமீபத்தில், நம் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்த தகவலின்படி, ரஷிய ராணுவத்தில் பணியாற்ற 126 போ் சென்றுள்ளனா். இவா்களில் 96 போ் இந்தியா திரும்பி விட்டனா். ரஷிய - உக்ரைன் போரில் நம் நாட்டவா் 12 போ் கொல்லப்பட்டுள்ளனா். 16 போ் காணாமல் போய் விட்டதாக ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலை தேடி வளைகுடா நாடுகளுக்குச் சென்ற நம் நாட்டினா் தற்போது கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் வேலை செய்வதற்காக சட்ட விரோதமாகச் சென்று குடியேறுவோா் நாளைடைவில் அந்நாடுகளிலிருந்து வெளியேற்றப்படுவது உறுதி. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா். வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவில் மட்டும் சுமாா் 1.1 கோடி வெளிநாட்டவா் சட்ட விரோதமாகக் குடியேறி உள்ளனா். இதில் 50 சதவீதத்தினா் அண்டை நாடான மெக்சிகோவைச் சோ்ந்தவா்கள்.
- அமெரிக்காவில் தற்போது 7,25,000 இந்தியா்கள் சட்டவிரோதமாகக் குடியேறி உள்ளனா் எனவும் இவா்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் குஜராத், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
- ‘திரைகடலோடியும், திரவியம் தேடு’ என்பது கொன்றை வேந்தன் பாடல் வரி. கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டும்படி கூறுகிறது இந்தப் பாடல். தற்கால அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சி, பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, அந்நிய முதலீடுகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள தொழில் வளா்ச்சி ஆகியவற்றால் வேலை வாய்ப்புகள் நம் நாட்டிலேயே பெருகியுள்ளன.
- தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன், வேலைவாய்ப்பு, மூலதனம் உள்ளிட்டவை குறித்து மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 2022-23 ஆண்டுக்கான அறிக்கையின்படி, 2021-22 மற்றும் 2022-23-ஆம் நிதியாண்டுகளில் உற்பத்தித் துறையில் முறையே போ் 1.7 கோடி, 1.9 போ் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனா்.
- உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு வழங்கும் மாநிலங்களில் 15 சதவீத வேலைவாய்ப்பை வழங்கி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. நாடு முழுவதும் இயங்கும் 2.53 லட்சம் ஆலைகளில் நம் தமிழகத்தில் மட்டும் 40,000 ஆலைகள் இயங்குகின்றன.
- இத்தகு தொழில் வளா்ச்சியால் லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகள் உருவாகியிருப்பதை வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கும் அப்பாற்பட்டு, தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்புவோா், அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றுவது வரவேற்கத்தக்கது. மாறாக, அரசால் அங்கீகரிக்கப்படாத போலி நிறுவனங்கள் மற்றும் முகவா்களின் மெய்த்தன்மையை அறியாது, அவா்களின் கவா்ச்சிகரமான, பொய்யான வாக்குறுதிகளை நம்பி சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதும், பின்னா் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவதும் சம்பந்தப்பட்டோருக்கு மட்டுமின்றி , நம் நாட்டுக்கும் பெருமை தருவதாகாது.
நன்றி: தினமணி (21 – 02 – 2025)