TNPSC Thervupettagam

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

September 28 , 2021 1200 days 644 0
  • கற்று அறிதல் வேறு, ஆராய்ந்து அறிதல் வேறு. எதிலும் உண்மையைக் கண்டறிதல்தான் அறிவியலின் அடிப்படை.
  • தரவுகளின் பகுப்பாய்வு மிக முக்கியம். உள்நாட்டுப் பொருள்களையே புதிதாக வாங்குவது என்றால் குறைந்தபட்ச முறையான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளுக்குப் பிறகுதான் ஏற்றுக் கொள்கிறோம்.
  • வெளிநாட்டிலிருந்து வரும் உணவுப் பண்டங்கள், மருந்துகள் விஷயத்தில் கூடுதல் பரிசோதனைகள் அவசியம்.
  • சோதனைக்கான மாதிரிகளை ஒரே ஆய்வாளரிடம் ஒப்படைத்தல் நல்லதல்ல. அவா் தனது முந்தைய ஆய்வில் தெரிவித்ததையே - அது சரியோ தவறோ - அறிவித்தால் ஆபத்து.
  • ஆய்வு மாதிரிகளை ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வாளா்கள் பரிசோதிக்க வேண்டும். அதனால், இன்னொரு ஆய்வகத்திலும் அதே பரிசோதனை மாதிரியைத் தந்து முடிவைப் பெற வேண்டும்.

தகவல் பெறும் உரிமை நாள்

  • ஒருமுறை இந்திய விண்வெளி ஆய்வகத்தில், திட உந்து பொறிக்கான பாகுநிலை மூலப்பொருள் (பாலிமா்) ஒன்று அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
  • ஒப்பந்த முன்பணமும் டாலா்களில் செலுத்தப்பட்டுவிட்டது. 200 லிட்டா் பீப்பாய்களாக 10 டன் அளவுக்கு வந்து இறங்கியது சரக்கு.
  • அதிலிருந்து உரிய புள்ளிவிவரவியல் முறையில் மாதிரிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்ததில் அந்த பாலிமரில் செயல்படு சிறப்பு வேதிக்கூறு இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது.
  • மீண்டும் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்த பின்னரும் அதே முடிவுதான். வேறு ஆய்வாளரிடம் கொடுத்தும், வேறு ஆய்வுக்கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியும் அதே முடிவே கிடைத்தது. இறுதியில் இறக்குமதியான அந்நியச் சரக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
  • இங்கும், தடுப்பூசி மருந்துகள் என்றாலும், அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்கள் என்றாலும் ஒரே ஆய்வகம் மட்டுமின்றி, வேறு நாடுகளிலுள்ள ஒன்றிரண்டு ஆய்வகங்களிலும் ரகசியமாகப் பரிசோதிக்க நேரும்.
  • கரிம உயிரி மூலக்கக்கூறுகள் அன்றி, கதிரியியக்கக் கரி முறையில் மண், பீங்கான் மாதிரிகளின் வயதைக் கண்டுபிடிக்க இயலாது. மண் பானையில் கரி படிந்திருந்தால் அதனைச் சுரண்டி ஆராய முடியும்.
  • பழங்கரித் துண்டுடன், நேற்று எரித்த கரியையும் வேண்டுமென்றே ‘போலி’ மாதிரிகளாகத் தனித்தனியே வெறும் எண்ணிட்டுப் பரிசோதனைகளுக்கு அனுப்ப வேண்டும். அது ஆய்வின் தரத்தையும், ஆய்வகத்தின் நம்பகத்தன்மையையும் உறுதி செய்ய உதவும்.
  • கிடைத்த தரவுகளை வெளிப்படையாக பல்துறை அறிஞா்களுடன் கலந்து விவாதிக்க வேண்டும். அங்கும் சொன்னவரை விடு; சொன்னதை எடு என்பதுதான் அறிவியல் பார்வை.
  • ஆய்வு முடிவுகளை பன்னாட்டு அறிவியல் இதழ்களில் பொது விவாதத்திற்காக வெளியிட வேண்டும்.
  • வட பிராமி, தென் பிராமிக் குறியீடுகள் இத்தகைய அறிவியல் பகுப்பாய்வு வழிமுறையில் பல ஆண்டுகளுக்குப் பின்னரே உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னமே ஆய்வு முடிவுகளில் அவசர அறிவிப்புகள் தேவையற்றவை.
  • ஒவ்வொரு தகவலையும் பன்முகப் பார்வையுடன் அணுக வேண்டும். ஆய்வுத் தரவுகளையும் மானுடவியல், வரலாறு, புவிசார் அறிவியல், உயிரியல், மொழியியல் எனப் பல்வேறு பரிமாணங்களின் பின்னணியில் ஆராய வேண்டும்.
  • இருவேறு தரவுகளைப் பொருத்திப் பார்த்தால் புதிய சிந்தனை பிறக்கும். எந்தவொரு அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் இது பொருந்தும்.
  • கூட்டன்பா்க் தனது 40-ஆம் வயதில் அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு எந்த ஆராய்ச்சிக் கூடத்திற்கும் செல்லவில்லை. அச்சும் வார்ப்பும் நாணயங்கள் தயாரிப்பில் கையாளப் படும் முறையைக் கண்டார்.
  • இந்த உத்தியைத் தெருவோரம் திராட்சை ரசம் நசுக்கிப் பிழிந்து விற்பவரின் இயந்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார். கூடன்பா்க்கின் அச்சு இயந்திரம் பிறந்தது.
  • வான் சறுக்கியில் பெட்ரோல் பொறியைப் பொருத்தி விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரா்கள், முதன்முதலில் மணிக்கு 50 கிலோமீட்டா் வேகத்தில் 120 அடி தூரம் வரை 12 வினாடிகள் வானில் பறந்து காட்டியபோது, ஓா்வில் ரைட்டுக்கு வயது 32; வில்பா் ரைட் வயது 36.
  • பொதுவாகவே விஞ்ஞானியின் வயதிற்கும் அவருடைய மேதைமைக்கும் இடையே ஒரு உளவியல், உயிரியல் தொடா்பு இருப்பதாக ‘அறிவாண்மைக் கையேடு’ (‘ஹாண்ட் ஆஃப் ஜீனியஸ்’) என்னும் நூலில் தீன் சிமொந்தன் என்னும் அறிஞா் குறிப்பிடுகிறார்.
  • நோபல் விஞ்ஞானிககளைப் பொறுத்தவரை 1935-ஆம் ஆண்டு வரை, 93 சதவீதம் போ் 26 வயதுக்குப் பின்னா்தான் அறிவியலில் சாதனை புரிந்தார்கள். ஒவ்வொரு சிறந்த கண்டுபிடிப்பும் 30 முதல் 40 வயதுக்குள் நிகழ்ந்து விடுகிறதாம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே

  • 1965-இன் புள்ளிவிவர அடிப்படையில் ஆராய்ந்ததில் சற்று தாமதமாக 35 முதல் 45 வயது வரையான காலகட்டத்தில்தான் புதுப்புனைவுகள் நிகழ்கின்றன என்று தெரியவந்தது.
  • பொதுவாக, 30 வயதுக்கு முன்னரும் 60 வயதுக்குப் பிறகும் வெளிப்படும் கண்டுபிடிப்புகள் மிகவும் சொற்பம். ஆராய்ச்சித் திறன் என்பது தனிமை, குடும்பச்சூழல், மனநிலை, கல்வி, அறிவு, அனுபவ முதிர்வு, பேச்சுத் திறன், சிந்தனை ஆற்றல் போன்றவற்றைப் பொறுத்ததுதான் என்றாலும், வயது முக்கியப் பங்காற்றுகிறது.
  • அறிவியல், அரசியல், இலக்கியம் என இன்றைக்கு எந்த விவாதத்திலும் அதிகபட்சமாக உச்சரிக்கப் படும் வாக்கியம் ‘உங்கள் காலத்தில்’ என்பது.
  • அறிவற்ற ஜனங்கள் என்று இழிவு செய்து வெள்ளையா் நம்மிடம் விட்டுச்சென்ற தேசத்தைக் கட்டி வளா்த்த கதை இப்போது எதற்கு? முக்கால் நூற்றாண்டுக் காலம் ஊா்ந்து, எழுந்து, விழுந்து, நடந்து தடுமாறி இருக்கலாம். ‘ஆதாம் ஏவாள் காலத்தில்...’”என்று ஆரம்பித்து பழைமையான மேற்கோள்கள் வேறு.
  • ‘சா் சி.வி. ராமன் என்ன சொன்னார்’, ‘அப்துல் கலாம் என்ன சொன்னார்’ என்றெல்லாம் உரையாடுவது பிற்போக்காகக் கருதப்படுகிறதா?
  • ‘பல்வேறு ஆராய்ச்சிகளில் மேனாட்டவா் முன்னணியில் நிற்பதற்கு, தலைமுறை இடைவெளியே காரணம்’ என்கிறார் எம்.ஜி.கே. மேனன் என்னும் இயற்பியல் அறிஞா். இந்தியா, சீனாவுக்கு மிகவும் பின்னால் இருப்பதாகவும் அவா் தெரிவிக்கிறார்.
  • 20 ஆண்டுகளுக்கு முன், இந்தியா வளா்ந்த நாடாக வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டதை நாம் அறிவோம்.
  • அந்த காலகட்டத்தில் எழுந்த விஞ்ஞான தலைமைத் தட்டுப்பாடு இன்றும் நீடிக்கிறது. உலகளாவிய அறிவியல் இதழ்களில் வெளிவந்த இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, 1980-களில் இருந்ததை விடவும் அடுத்த 20 ஆண்டுகளில் 24 சதவீதம் குறைவாக இருந்ததாம்.
  • ஆய்வுத்தரத்திலும் உலகில் 8-ஆம் இடம் வகித்த இந்தியா 15-ஆம் இடத்திற்கு இறங்கிற்றாம். நெஞ்சு பொறுக்குதில்லையே!

முழக்கத்தில் மட்டும்தானா

  • 1997-ஆம் ஆண்டு, இந்திய விடுதலையின் பொன்விழாவை ஒட்டி, மத்திய அரசு 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு மாத ஊதியம், பயணப்படி வழங்கியதோடு, அவா்களின் ஆராய்ச்சிகளுக்கு மானியம் வழங்கவும் முன்வந்தது.
  • என்ன காரணமோ, 114 போ் விண்ணப்பித்திருந்தாலும் 25-க்கு 5 இடம்கூட நிரப்பப்படவில்லை. அரசின் விருப்பத் தலைப்புகளே மாணவா்களிடம் திணிக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  • அப்படியானால், வயது உச்ச வரம்பினை சற்று உயா்த்தி, வயதான, அனுபவம் மிக்கவா்களையும் சோ்த்துக்கொள்ளலாம் என்று அந்நாள் அணுவியல் அறிஞா் வி.எஸ். ராமமூா்த்தி கருத்து தெரிவித்தார்.
  • அந்நாளில், அணுசக்தித்துறை நீங்கலாக, ஏனைய அறிவியல், தொழில் நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி, கடல்வழி மேம்பாடு, அறிவியல் தொழில்துறை ஆய்வுக் குழுமம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தலைமைப் பொறுப்புகள் வகித்தோருக்கு அதே நிலையில் பணி ஓய்வு காலம் முடிந்தும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
  • இன்றைக்கும் அரசுப் பணி நிறைவுக்குப் பின்னரும், நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் பஞ்சப்படி, பயணப்படி எல்லாம் பெற்றபடி வெள்ளி விழா கொண்டாடும் மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள்.
  • அதனால் திறமை, தகுதி, அனுபவ அடிப்படையில் வரிசையில் காத்திருக்கும் அடுத்த இளம் விஞ்ஞானிகளுக்குத் தலைமைக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலமும் நோ்கிறது.
  • தாம் வாழ்ந்த காலத்தில் ஜாதிப்ரஷ்டம் ஆனதால்தானோ என்னவோ மகாகவி பாரதியின் பெயா் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை.
  • அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் அந்நாள் இயக்குனரும் பன்கூறு ‘பாலிமா்’ விஞ்ஞானியுமான ஆா்.ஏ. மஷெல்கா் ‘இந்தியாவில் குறைந்த செலவில் அறிவியல் பொறியியல் பட்டங்கள் படித்து, தம் மூளையை வெளிநாட்டிற்கு அடகு வைக்கும் தேச பக்தா்களை இங்கு வரவழைக்கலாம்’ என்று கருத்து உரைத்தார்.
  • சீனா, தைவான், தென்கொரியா, சிங்கப்பூா் போன்ற நாடுகள் இந்த உத்தியைக் கையாண்டு தங்கள் தொழில் நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் வளப்படுத்தி வருகின்றனவாம்.
  • 20 ஆண்டுகளுக்கு முன், ‘டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையம்’ தன் தலைமைப் பொறுப்புக்கு ஆள் தேடி, அமெரிக்க வாழ் இந்தியரான 51 வயது சுபா பட்டாச்சார்யா என்பவரைத் தோ்வு செய்தது.
  • அந்நியப் பொருளாதார முதலீடு போலவே, அந்நிய மூளை முதலீடுகளை ஈா்க்க நினைக்கிறோம்.
  • ‘திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தோ்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே’ என்ற மகாகவி பாரதியாரின் உறுதிமொழி, முழக்கத்தில் மட்டும் தானா?
  • இன்று (செப். 28) உலக தகவல் பெறும் உரிமை நாள்.

நன்றி: தினமணி  (28 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories