மொழிகளும் மொழி அரசியலும்
- தற்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் ‘மொழி அரசியல்’ தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டி விரிவடையுமா என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சி எனத் தமிழ்நாடு அரசு முன்வைத்து வரும் முழக்கங்களையும் தாண்டி, மொழி அரசியலில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
மொழியியல் ஆய்வு:
- உலகில் ஆப்ரிக்காவுக்கு அடுத்ததாக அதிகமான மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா. அதிகமான பழங்குடியினர் வாழும் நாடும்கூட. இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 10% பேர் பழங்குடிகள். ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றபோது, முதன்முறையாக ‘இந்திய மொழியியல் ஆய்வு’ 1894 முதல் 1928 வரையில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
- 733 மொழிகளும் அவற்றின் வட்டார வழக்குகளும் கண்டறியப்பட்டன. அவை முழுமையானவை அல்ல. அதன் பின்னர் 50 ஆண்டுகாலமாக எதுவும் நடக்கவில்லை. அவற்றை மறுஆய்வு செய்யும் பணிகளை, இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரகம் 1984இல் தொடங்கியது. 2010இல் முடித்தாக வேண்டும் என இலக்கு நிச்சயிக்கப்பட்ட இந்தப் பணிகளில், இதுவரை 40 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.
மொழியியல் கிளர்ச்சி:
- அரசின் போக்கால் அதிருப்தியடைந்த பேராசிரியர் ஜி.என்.தேவி உள்ளிட்ட சில சமூக உணர்வுள்ள கல்வியாளர்கள் இணைந்து ‘இந்திய மொழிகள் பற்றிய மக்களின் ஆய்வு’ என்னும் முயற்சியை 2010இல் தொடங்கினர். 2,000 மொழியியல் வல்லுநர்கள் உள்ளிட்ட 3,500 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். இந்த ஆய்வு முதன்மையாகக் ‘குற்றப் பழங்குடிகள்’ என ஆங்கிலேயர்களால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள், நாடோடிப் பழங்குடிகளின் அழியும் நிலையில் உள்ள மொழிகள் மீது கூடுதல் கவனத்தோடு நடத்தப்பட்டது.
- 2012இல் நிறைவுபெற்ற இந்த ஆய்வில் 780 மொழிகள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள் 35 ஆயிரம் பக்கங்களில், 50 தொகுதிகளாக வெளியாகியிருக்கின்றன. நாடு விடுதலை பெற்ற 50 ஆண்டு காலத்தில் சுமார் 220 மொழிகள் அழிந்துவிட்டன என இந்த ஆய்வு அறிவித்தது.
- இதையடுத்து, அரசு செயல்படத் தொடங்கியது. இந்திய மொழிகளைப் பற்றிய ஆழமான ஆய்வு நடத்துவதற்கான ஒரு திட்டமிடல், 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் கடைசியில் (2007 - 2012) நடத்தப்பட்டது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் 1969 முதல் மைசூரில் இயங்கிவரும் ‘இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவன’த்தின் வழியாக 54 பல்கலைக்கழகங்கள், 2 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், 10 ஆயிரம் மொழியியலாளர்களை ஈடுபடுத்தி, 10 ஆண்டு காலக்கெடுவில் ஒரு ஆய்வை நடத்த வேண்டும் என்றும் பேசப்பட்டது. அழியும் அபாயத்தில் உள்ள மொழிகள் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஆய்வுசெய்வதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவே இல்லை.
இந்தியாவின் தாய்மொழிகள்:
- 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மொழிகளும் கணக்கெடுக்கப்படுகின்றன. 1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு, இந்தியாவில் 1,652 மொழிகள் பேசப்படுவதாக அறிவித்தது. 10 ஆயிரம் பேரைவிடவும் குறைவானோர் பேசும் மொழிகளைக் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை என்று 1971ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவு எடுத்துவிட்டது. உடனடியாக மொழிகளின் எண்ணிக்கை 108 ஆகக் குறைந்தது.
- 1991ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் தாய்மொழிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. ‘தனியான இலக்கணக் குறிப்புகள் கொண்ட தாய்மொழிகள்’ என்ற வகைமையில் 1,576 மொழிகளும், ‘பேச்சுவழக்காக உள்ள தாய்மொழிகள்’ என்ற வகைமையில் 1,796 மொழிகளும் இந்தியாவில் இருப்பதாக அப்போது அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, அவற்றை மொழிக் குழுக்களாகத் தொகுத்து 114 மொழிகள் இந்தியாவில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 122 மொழிகள் இருப்பதாகவும் அவற்றில் 22 அரசமைப்பு அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. முன்னுக்குப் பின் முரணான இத்தகைய அணுகுமுறையைத்தான் இந்தியாவின் மொழிகளிடத்தில் நாம் கொண்டுள்ளோம்.
தாய்மொழிகளும் ஆங்கிலமும்:
- “ஒரு மொழி பேசும் சமூகத்தின் வாழ்வாதார வளங்கள் அழியும்போது அந்த மொழி அழிகிறது” என்கிறார் பழங்குடி மக்களின் மொழியியல் போராளி பேராசிரியர் ஜி.என்.தேவி. பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களின் மீதான இரக்கமற்ற, அறம் அற்ற கொடூரமான தாக்குதல்கள்தான் இந்தியாவின் மொழிகளைக் கொன்றுகொண்டிருக்கிறது. இந்தி பேசாத இந்தியர்களின் பண்பாட்டுச் செல்வங்களின் மீதான, திட்டவட்டமான ஒடுக்குமுறை இது. லாப வெறி கொண்ட சந்தையை உருவாக்குவதற்காக இந்தியாவின் பண்பாட்டுச் செல்வங்களின் குரல்வளைகள் நெரிக்கப்படக் கூடாது.
- ஆங்கிலம் கற்பது என்பது சில நூறு ஆண்டுகளாக உலகில் நிலவிவரும் புதிய பாணி. இந்தியாவில் ஒடுக்கப்படுகிற மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் போர்வாளாக இன்றும் ஆங்கிலம் திகழ்கிறது என்கிறார் பேராசிரியர் காஞ்சா ஐலையா. உண்மையில், இந்தியாவின் தாய்மொழிகளை ஆற்றல்படும்வகையில் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவதே இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும்.
- வேறு மொழி இந்த இடத்தை அடைவது கடினம். மற்றொருபுறம் ஒரு மொழி அழியும்போது பல நூறு ஆண்டுகள் அதற்குள் சேமிக்கப்பட்டிருந்த தனிவகையான அனுபவங்களும் அறிவும் சேர்ந்தே அழிகின்றன. இந்திய நாகரிகத்தின் நலிந்த பச்சிளம் குழந்தைகளைப் போன்ற பழங்குடி மொழிகளை நாம் தாக்கி அழித்துள்ளோம். அந்தத் துணிச்சல்தான் தமிழ் மொழியையும் தொடுவதற்கான முயற்சியாக மாறுகிறது. தமிழ், உலகின் முக்கிய செம்மொழிகளில் ஒன்று.
செம்மொழி அரசியல்:
- ‘சம்ஸ்கிருதமும் தமிழும் செம்மொழிகள்’ என்பது சில நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் அறிவுலக விவாதம். மறைந்த அறிஞர் கால்டுவெல் முதலாக இஸ்ரேலைச் சேர்ந்த தற்கால அறிஞர் டேவிட் ஷுல்மன் வரை தமிழின் வரலாறு, தனித்தன்மை பற்றி நடத்தியுள்ள ஆய்வுகள் ஏராளம். தமிழுக்கு உரிய மரியாதை ஏன் இந்தியாவுக்குள் கிடைக்கவில்லை என்று வெளிநாடுகளில் குரல்கள் கேட்கின்றன.
- இத்தகைய நெருக்கடியால்தான் தமிழ் மொழியைச் செம்மொழி என்று 2004இல் அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய அரசு உள்ளானது. முதன்முதலாகச் செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்ட பிறகுதான் 2005இல் சம்ஸ்கிருதம் அறிவிக்கப்பட்டது. இரண்டுக்கும் ஏன் சம மரியாதை, சம நிதி ஒதுக்கீடு தரப்படவில்லை என்னும் கேள்வி தமிழ்நாட்டின் கேள்வி மட்டும் அல்ல, உலக அளவில் மொழியியலாளர்களின் கேள்வி இது.
- செம்மொழித் தகுதியே இந்தியாவில் அரசியலாக மாறிவிட்டது. எங்கள் மொழிகளும் செம்மொழிகள்தான் என்று வரிசையில் நின்றவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக ‘இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை’ எனும் அளவுகோல் உருவாக்கப்பட்டது. அதன்படி, 2008இல் கன்னடமும் தெலுங்கும் அறிவிக்கப்பட்டன. மலையாளம் 2013இலும் ஒடிய மொழி 2014இலும் அறிவிக்கப்பட்டன. அசாமி, வங்காளி, மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய 11 மொழிகள் 2024ஆம் ஆண்டு வரை செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஆனால், மத்தியக் கல்வி அமைச்சகத்தின் சார்பில் மைசூரில் செயல்படும் ‘இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவன’த்தின் இணையதளத்தில் செம்மொழிகள் என்ற வகைமையில் இன்னமும் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மட்டுமே உள்ளன; மாநில மொழியாக மட்டுமே தமிழ் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பரவலாகக் கவனிக்கப்படவில்லை.
சிந்துவெளியும் தமிழும்:
- தமிழ்நாட்டுக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்குமான ஒற்றுமைகள் பற்றிய விவாதமும் பழமையானதுதான். வரலாறு பற்றிய விருப்பு வெறுப்பற்ற ஆய்வுப் பார்வை மத்திய அரசுக்கு இருந்திருக்குமானால், ‘சிந்துவெளி நாகரிக எழுத்துகளின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்போருக்குப் பரிசு அளிப்போம்’ என்று முன்பே அறிவித்திருக்க வேண்டும்.
- தற்போது கிளம்பியிருக்கும் ‘மொழி அரசியல்’ தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள் முடங்கக் கூடாது. வரலாற்றில் ஒரு நிகழ்வு அச்சு அசலாக மறுபடி நடப்பதே இல்லை. இந்தியப் பழங்குடிகளின் தாய்மொழிகளோடு தமிழ் இயக்கம் தோழமைக் கூட்டணிகளை அமைக்க வேண்டும். மொழிப் போரின் தேசிய எழுச்சிக்கான காலம் இது.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 03 – 2025)