மோடி என்னும் பிரம்மாண்ட ஆளுமை
- இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர் நரேந்திர மோடி. தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமராக அரியணை ஏறியிருக்கிறார். மோடியின் அரசியல் வாழ்க்கையையும் அறியாத தனிப்பட்ட வாழ்க்கையையும் இந்த நூல் அலசி ஆராய்ந்துள்ளது. இதன் வழி பெரும்பான்மையானோர் அறியாத தகவல்கள் நம்மால் அறிய இந்த நுல் வழிகோல்கிறது.
- மோடியின் சொந்த ஊரான வாட்நகர் பற்றிய சித்தரிப்பில் இந்த நூல் தொடங்குகிறது. குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவடத்தில் அமைந்துள்ள ஊர் இது. இந்த ஊரின் அருமை பெருமைகளையும் இந்த நூல் கூறுகிறது. மோடியின் தாய், தந்தையரையும், உடன் பிறந்தோரையும் புகைப்படங்கள் வழியாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.
- அவரது தந்தை வாட்நகர் ரயில் நிலையத்தில் வைத்திருந்த தேநீர்க் கடையின் புகைப்படத்தையும் இந்த நூல் காட்சிப்படுத்தியுள்ளது. அதன் வழி அங்கு சிறுவயதில் மோடி வேலை பார்த்த சித்திரத்தை மனது உருவாக்கிக்கொள்கிறது. சிறுவயதில் மோடிக்கு இருந்த நல்ல குணங்கள், தீர மனம் எல்லாவற்றையும் காட்சி விவரிப்புகளாகவே இந்த நூல் பதிவுசெய்துள்ளது சிறப்புக்கு உரியது.
- வாட்நகரில் பகவதாச்சார்யா நாராயணாச்சார்யா பள்ளியில் மாணவனாக இருந்த மோடியை புகைப் படத்துடனும் அவரது பள்ளிக்காலத் திறனுடனும் நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இளம் வயதிலேயே ஆன்மிக அறிவும் அரசியல் அறிவும் பெற்றவராக மோடி திகழ்ந்துள்ளார். அவர் அகமதாபாத்தில் அரசியல் அறிவியலில் பட்டப் படிப்பு முடித்துள்ளார். கல்வி ஒரு பக்கம் தொடர்ந்தாலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கச் செயல்பாட்டாளராக அவர் சம காலத்தில் செயலாற்றிவந்தார். விவேகானந்தர், கர்மயோகத்தைப் பின்பற்றியது போல் மோடியும் மக்கள் சேவை வழியாக மகேசனைக் கண்டார் எனலாம்.
- இந்தியாவில் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நெருக்கடிநிலை, நாட்டின் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியது. அந்தக் காலக் கட்டத்தில் அதற்கு எதிராகப் போராடிய தலைவர்கள் பலர். ஜெய்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் முன்களத்தில் இருக்க, அவர்களுக்குப் பின்னே களமாடிய இளைஞர்களில் மோடியும் ஒருவர்.
- குஜராத் லோக் சங்கர்னஷ் சமிதி என்னும் ஒரு இயக்கத்தைத் தொடங்கி இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்துள்ளார் மோடி. அந்தக் காலக்கட்டத்தில் ஜனநாயகமற்ற முறையில் பல தலைவர்களைக் கைதுசெய்து அரசு சிறையில் அடைத்துவந்தது. மோடி நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் தலைமறைவாக இருந்து அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டார். அதாவது மாறுவேடமிட்டுச் செயல்பட்டார். அந்தப் புகைப்படங்களையும் இந்த நூல் காட்சிப்படுத்தியுள்ளது.
- மோடி, பிரதமராகப் பதவி ஏற்ற காலத்தில்தான் உலகம் பொருளாதார நெருக்கடி, கரோனா பொது முடக்கம் எனப் பல இன்னல்களைச் சந்தித்தது. அதை மோடி, ஒரு இந்தியப் பிரதமராகவும், ஒரு உலகத் தலைவராகவும் எதிர்கொண்ட விதம் உண்மையில் பாராட்டுக்கு உரியது.
- அதை இந்த நூல் விரிவாகச் சொல்கிறது. அந்தக் காலகட்டத்தில் பல ஐரோப்பிய நாடுகளுக்கே இந்தியாதான் மருந்துகளை விநியோகம் செய்தது என்பது கவனம் கொள்ளத்தக்கது. இந்தியப் பிரதமர்களில் அதிகம் வெளிநாடுகளுக்குச் சென்றவர் மோடிதான். அதன் வழி இந்தியாவில் வெளிநாட்டுறவைப் பலப்படுத்தியுள்ளார். அதுவும் இந்த நூல் வழித் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
- மோடி தன் ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த மக்கள் நலத் திட்டங்கள், தேசியப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவை எல்லாம் அது கொண்டுவரப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நூல் மோடி என்னும் ஆளுமையின் முழுமையை உணர்த்தும் விதத்தில் ஆதாரமான புகைப்படங்களுடன் ஆழமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2025)