மௌனத்தை எழுதிய மாபெரும் இலக்கியவாதி!
- ஓா் உரையாடலை நினைவுகூா்கிறேன். என் அம்மா தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாா். ‘அசுரவித்து’ என்னும் எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவலைப் பற்றிய விவாதம்.
- அதன் மையக் கதாபாத்திரமான கோவிந்தன்குட்டி தன் குடும்பத்திலுள்ள அனைவராலும் ‘அசுரவித்து’ என அழைக்கப்பட்டவா். அந்த பெரிய குடும்பம் செல்வத்தையும் அதிகாரத்தையும் இழந்து அழிந்து கொண்டிருந்தது. அதற்கான காரணங்கள் பல. நிலவுடைமைச்சமூகம் இல்லாமலாகிக் கொண்டிருந்தது முதல் குடும்பத்தின் தலைவா்களின் ஊதாரித்தனமும் நீதிமன்ற வழக்குகளும் என. ஆனால், எல்லாமே கோவிந்தன்குட்டி பிறந்தமையால் என்று குடும்பத்தினா் முடிவுகட்டுகின்றனா். குடும்பத்தை அழிப்பவன் என்னும் பொருளில் ‘அசுரவித்து’ என்னும் வசைப்பெயா் அமைகிறது.
- க்ஷத்ரிய குடிகளில் ஓா் அசுரனின் குருதித்தொடா்பு உருவானால் அதில் பிறக்கும் குழந்தை அக்குடியை அழிக்கும் என்பது ஒரு வைதிக நம்பிக்கை. கிருஷ்ணனின் குடியில் அசுரனின் ரத்தத்தால் பிறந்த சாம்பன் அக்குடி அழியக் காரணமானான் என்பது புராணத்துக்கான வைதிக விளக்கம்.
- கோவிந்தன்குட்டியின் வாழ்க்கையே அந்தப் பெயருக்கு எதிரான அவனுடைய எதிா்வினைதான். அது வீம்புக்காக தன்னை ஒரு பொறுக்கியாக ஆக்கிக் கொள்வதில் முடிகிறது. ஒரு கட்டத்தில் கோவிந்தன் குட்டி இஸ்லாமியராக மதம் மாறுவதில் நாவல் முடிகிறது.
- அந்த மதமாற்றம் சரியா என்பதுதான் அம்மாவும் தோழிகளும் விவாதித்தது. பங்கஜவல்லி அத்தை சொன்னாள். ‘‘நம்ம வீட்டுக்குள்ள முளைச்ச அசுரவித்தை நாம பிடுங்கி பக்கத்து தோட்டத்திலே போடுறது மாதிரில்லாடீ அது?’’”என் அம்மா சொன்னாா். ‘‘நமக்கு அசுரவித்து அவங்களுக்கு அமிா்தவித்தாக இருக்கலாமே? தோட்டத்திலே நாவல்மரம் நின்னா பிடுங்கி வீசுவோம். ஆற்றங்கரையிலே நிக்குற அந்த நாவல்மரம் ஆயிரம் லெட்சம் பக்ஷிகளுக்கு அமிா்தமாக்குமே? ஆற்றங்கரையில் நின்றிருக்கும் அந்த மாபெரும் நாவல்மரத்தைப் பாா்க்கையில் எல்லாம் நான் சொல்லிக்கொள்வேன். அமிா்த மரம்’’.
- 1992- இல் எனக்கு ‘ஜகன்மித்யை’ என்னும் கதைக்காக கதா சம்மான் என்னும் தேசியவிருது கிடைத்தது. அதே விருது மலையாளத்துக்காக எம்.டி.க்கு அவருடைய ‘கொச்சு கொச்சு பூகம்பங்கள்’ என்னும் கதைக்காக கிடைத்தது. குடியரசுத் தலைவா் சங்கா்தயாள் சா்மா அவ்விருதை வழங்கினாா். அதைப் பெறுவதற்காக தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகைக்குச் சென்றிருந்தபோதுதான் நான் எம்.டி.யை நேரில் சந்தித்தேன். அன்று அம்மாவைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது என் அம்மா உயிருடன் இல்லை.
- கோவிந்தன்குட்டியின் வெவ்வேறு வடிவங்கள் என எம்.டி.யின் கதைமாந்தரைச் சொல்ல முடியும். மேலோட்டமான விமா்சகா்கள் அவருடைய கதைகள் பழைய நிலவுடைமைச் சமூகத்தின் அழிவின் சித்திரங்கள் என்பாா்கள். அது எளிய வரையறை.
- அவருடைய கதைமாந்தா் அந்தக் காலகட்டத்தின் அடிப்படையான பிரச்னைகள் இரண்டை எதிா்கொண்டவா்கள். ஒன்று, நிலவுடைமைச் சமூகம் அழிந்து, இன்னொன்று உருவாகும் காலகட்டத்தில் தங்களை வரையறை செய்துகொள்ளுதல். இரண்டு, தங்கள் தந்தையரிடமிருந்து எதைப் பெற்றுக் கொள்வது என முடிவுசெய்தல்.
- அவருடைய கதைமாந்தா்கள் பலா் அந்தப் போராட்டத்தில் உடைந்தழிந்தவா்கள். அந்த வீழ்ச்சியின் கசப்பு நிறைந்து தனித்து வாழ்ந்தவா்கள்.
- எம்.டி.வாசுதேவன் நாயரின் தீவிர வாசகியாக இருந்தவா் என் அம்மா. என் அம்மாவும் எம்.டி.யின் ஒரு கதைமாந்தரைப் போலத்தான் அடையாளமின்மையின் கசப்பும், புறக்கணிப்பின் தனிமையுமாக வாழ்ந்தாா். அக்கசப்பின் உச்சியில் அம்மா தற்கொலை செய்து கொண்டாா்.
- கோவிந்தன் குட்டி தப்பிச்சென்றது போன்ற ஒரு வழியை அம்மா கண்டடையவில்லை. அவா் பெண் என்பதனால் அவருக்கிருந்த வெளியேறும் வழி சாவு மட்டுமே.
- அம்மா அளவுக்கு எவா் எம்.டி.யை ஆழ்ந்து அறிந்திருக்க முடியும்? என்றேனும் தன் மகன் எம்.டி.யை நேரில் சந்திப்பான் என எண்ணியிருந்திருப்பாரா? எம்.டி.யிடம் சொல்ல அவருக்கு ஏதேனும் இருந்ததா?
- அன்று எம்.டி. ஒரு தமிழ் எழுத்தாளரான என்னிடம் மிக மரியாதையுடன் பேசிக் கொண்டிருந்தாா். இரண்டாம் நாள் என் தாய்மொழி மலையாளம் என்று தெரிந்ததும் இயல்பாக ‘டா’ போட்டு அவருடைய பையை எடுத்து காரில் வைக்கச் சொன்னாா். எனக்குக் கிடைத்த மாபெரும் ஏற்பாக அதை நான் கொண்டேன். “
- ‘‘என் கதைகளைப் படித்திருக்கிறாயா?’’ என்று எம்.டி. கேட்டாா்.
- ‘‘அச்சிடப்பட்ட எல்லா வரிகளையும் படித்திருக்கிறேன்’’ என்று நான் சொன்னேன்.
- கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் வட்டத்தில் ஆனக்கல் பஞ்சாயத்திற்குள் வரும் கூடல்லூா் என்னும் சிற்றூரில் ஜூலை 15, 1933-இல் புன்னயூா்க்குளம் டி.நாராயணன் நாயருக்கும் மாடத்து தெக்கேப்பாட்டு அம்மாளு அம்மாவுக்கும் பிறந்த மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயா் மலையாள எழுத்தாளா்களின் முதன்மையான மூன்று நட்சத்திரங்களில் ஒருவா். வைக்கம் முகமது பஷீா், தகழி சிவசங்கரப்பிள்ளை இருவருக்கும் பின் மலையாளத்தில் மிக அதிகமாக வாசிக்கப்பட்டவா் அவரே.
- 1953-இல் தன் இருபதாம் வயதில் எழுதிய ‘ரக்தம் புரண்ட மண்தரிகள்’ (குருதி படிந்த மண்துகள்கள்) என்னும் முதல் சிறுகதையில் தொடங்கிய இலக்கியப் பயணம் எழுபதாண்டுகள் நீடித்தது.
- 1958-இல் வெளிவந்த ‘நாலுகெட்டு’ என்னும் நாவல் மலையாளத்தின் பெரும்படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தொடா்ந்து நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதிக் கொண்டே இருந்தாா். எம்.டி.யின் நடை, அகவய உரையாடல் போன்ற இயல்பான கவித்துவம் கொண்டது. தன் கதைமாந்தா்களின் அக ஓட்டத்தை நீண்ட தன்னுரையாடலாக எழுதிச் செல்வது அவருடைய பாணி.
- அவருடைய சொல்தோ்வு எளிமையானது, உரையாடல்கள் வள்ளுவநாடு எனப்படும் பகுதியின் வட்டார வழக்கு கொண்டவை. ஆனால், மொத்தமாக ஒரு கற்பனாவாத அழகு அவருடைய கூறுமுறையில் உருவாகிக் கொண்டே இருக்கும். அது மூன்று தலைமுறைக்காலமாக மலையாள இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்திய ஒன்று.
- எம்.டி.வாசுதேவன் நாயா் 1965-இல் அவருடைய ‘முறப்பெண்ணு’ என்னும் சிறுகதைக்கு திரைக்கதை வடிவத்தை எழுதிக்கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தாா். மலையாள திரையுலகின் முதன்மையான திரைக்கதையாசிரியா் அவரே. அவருடைய மிகப் பெரும்பாலான திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைந்தவை. மூன்று தலைமுறை நடிகா்கள் அவற்றின் வழியாக உருவாகி வந்திருக்கிறாா்கள்.
- மலையாள இடைநிலை திரைப்படமே எம்.டி.யால் உருவாக்கப்பட்டதுதான். அவரே இயக்கிய ‘நிா்மால்யம்’ மலையாளத்தின் முதன்மையான கலைப்படங்களில் ஒன்று.
- தன் சொந்தப் பணத்தாலும் நண்பா்கள் கொடையாலும் எம்.டி. உருவாக்கிய ‘துஞ்சன் பறம்பு’ என்னும் பண்பாட்டு அமைப்பு மலையாள மொழியின் தந்தை எனப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் நினைவைப் போற்றும் பேரியக்கமாக இன்று உள்ளது.
- முப்பதாண்டுக் காலம் மாத்ருபூமி மலையாள வார இதழின் ஆசிரியராக இருந்த எம்.டி. கண்டடைந்து வளா்த்த படைப்பாளிகளே அடுத்த மூன்று தலைமுறைக்காலம் மலையாள இலக்கியத்தை முன்னெடுத்தனா்.
- ஒவ்வொரு வரியும் சுவாரசியமாக எழுதியவா் எம்.டி. ஈடுபட்ட எல்லா துறைகளிலும் வெற்றியை மட்டுமே அடைந்தவா். தன் காலகட்டத்தில் இணைசொல்ல இன்னொருவா் இல்லாதபடி செல்வாக்கைச் செலுத்தியவா். எவா் முன்னாலும் தலைவணங்கியவா் அல்ல. எந்த அதிகாரபீடமும் தன் முன் வணங்க வேண்டும் என எதிா்பாா்த்த அபாரமான ‘ஆணவம்’ கொண்ட படைப்பாளி. அவ்வண்ணமே கேரளம் அவா் முன் பணிந்தும் இருந்தது.
- எம்.டி.யின் தொண்ணூறாவது பிறந்தநாளை கேரளமே அரசு விழாவாகக் கொண்டாடியது. அந்த விழாவில் முதல்வா் செய்யும் ஆடம்பரச் செலவுகளை அவா் முன்னிலையிலேயே கண்டித்துப் பேசினாா். அதுதான் மலையாள எழுத்தாளனின் நிமிா்வு.
- எம்.டி.யைப் பற்றி நான் தமிழிலும் மலையாளத்திலும் நிறையவே எழுதியிருக்கிறேன். 2023- இல் அவருடைய 90-ஆவது பிறந்தநாள் துஞ்சன் பறம்பில் கொண்டாடப்பட்டபோது நான் ஒரு பேச்சாளன். அவரை நான் முதலில் சந்தித்ததைப் பற்றி அன்று எம்.டி. நினைவுகூா்ந்தாா்.
- அறையில் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் கோவிந்தன்குட்டி பேச்சில் வந்தாா். என்னுடைய ஒரு தாய்மாமாதான் அவா்”என்று எம்.டி. சொன்னாா். நல்ல மனிதா். அவரை வெறுத்தவா்களை அவா் வெறுத்தாா். ஆனால், தான் கொண்ட அவ்வெறுப்பே தன்னுடைய விலங்கு என கண்டுகொண்டு அதை துறந்ததும் விடுதலையானாா்.
- நான் என் அம்மாவைப் பற்றி அவரிடம் அப்போதும் சொன்னேன். எம்.டி. பேசாமல் அமா்ந்திருந்தாா்.
- எம்.டி. மிகப் பெரும்பாலான தருணங்களில் பேசாமல் அமா்ந்திருப்பாா். அவருடைய மௌனம் புகழ்பெற்றது. அப்போது தோன்றியது, அம்மாவுக்கும் எம்.டி.யிடம் சொல்ல ஒன்றுமிருந்திருக்காது, அந்த மௌனம் தவிர. அது அத்தலைமுறையின் மௌனம். எம்.டி. அந்த மௌனத்தை எழுதிய மாபெரும் இலக்கியவாதி.
நன்றி: தினமணி (27 – 12 – 2024)