TNPSC Thervupettagam

யானையின் மகிழ்ச்சியும் வருத்தமும்

August 18 , 2024 3 hrs 0 min 4 0

யானையின் மகிழ்ச்சியும் வருத்தமும்

  • இந்த நூற்றாண்டில் சூழலியல் இலக்கியம் என்றே தனிப்போக்கு உருவாகிறது. சங்க இலக்கியத்தில் சூழலியல் குறித்துப் பல விவரிப்புகள் உண்டு. சங்க காலப் பெண் கவிஞர்களில் ஒருவரான நல்வெள்ளியார் கவிதைகளில் சூழலியல் குறித்த விவரிப்புகள் அதிகம். இவரது நான்கு பாடல்கள் சங்கக் கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. மனதின் உணர்வுகளை வெளிப் புறத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளுடன் உவமைப்படுத்தி எழுதும் போக்கு இவரது கவிதைகளில் விசேஷமான அம்சம்.
  • ‘சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்/பெருவரை அடுக்கத் தருவி யார்ப்பக்/கல்லலைத் திழிதருங் கடுவரற் கான்யாற்றுக்/கழைமாய் நீத்தங் காடலை யார்ப்பத்/தழங்குகுர லேறொடு முழங்கி வானம்/இன்னே பெய்ய மின்னுமால் தோழி/வெண்ணெ லருந்திய வரிநுதல் யானை/தண்ணறுஞ் சிலம்பின் துஞ்சுஞ்/சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே’ என்கிற இந்த நற்றிணைப் பாடல் அவரது சிறந்த பாடலாக இந்தத் தன்மைக்கு முன்னிறுத்திக் காட்டலாம்.

இயற்கையின் விவரிப்பு

  • தோழி, தலைவியிடம் உரைப்பதாக வெளிப்பட்டிருக்கும் இந்தப் பாட்டில் யானை மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் விவரிக்கப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தின் காட்டின் மகிழ்ச்சியும் இந்தப் பாட்டில் பதிவாகியுள்ளது. மூங்கில் வளர்ந்து அரிசி விளைந்திருக்கிறது. இந்த மூங்கில் அரிசியைத் தின்று அந்த யானை சந்தன மரங்களால் நறுமணம் கமழ்கிற காட்டில் உறங்கும். சிறு விலங்குகளின் மகிழ்ச்சியை இந்தப் பாட்டில் கவிஞர் சொல்ல விரும்பவில்லை. மகிழ்ச்சியின் பிரம்மாண்டத்தைக் காட்ட அவர் யானையை ஒரு பெரிய உருவமாகக் கொள்கிறார். பூமியின் மிகப் பெரிய விலங்காகிய யானை, அந்த நாட்டிலே வயிராறத் தின்று, நறுமணம் கமழும் சூழலில் உறங்குகிறது. அந்த நாட்டின் அந்தச் சூழலின் செழிப்பு இதன்வழி பதிவாகியுள்ளது. இந்தச் சிறிய இலையுடைய சந்தன மரக் காட்டின் உள்ளே மழை பெய்ததால் சுனையில் நீர் பெருகி நிறையும். மூங்கில்கள் அடர்ந்த மலை அருகே அருவிகள் ஆர்ப்பரிக்கும். கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவரும் விசையுடைய கானியாறு என்கிற ஒரு கவித்துமான விவரிப்பு இந்தப் பாட்டில் இருக்கிறது. ஆற்று வெள்ளத்தின் பச்சையான மூர்க்கத்தை இந்தப் பாட்டில் அழகாகச் சொல்கிறார் கவிஞர். மூங்கில் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்து செல்கிறது. வானம் மழை பெய்யவேண்டி மின்னும். இந்தக் கார் காலத்தைப் பார்க்கும்போது உன் காதல் தலைவன் வந்து உன்னைக் கொள்வான் நீ வருந்தாமல் இரு என்கிறாள் தோழி. ஒரு காலத்தைச் சுட்டிப் பாடும் பாடல் என்பது இதன் இன்னொரு முக்கிய அம்சமாகும்.

கைவிடப்பட்ட தலைவி

  • ‘பெருங் களிறு உழுவை அட்டென’ எனத் தொடங்கும் இன்னொரு நற்றிணைப் பாடலிலும் ஒரு காட்டு வாழ்க்கையைக் காட்சிப்படுத்துகிறார் இவர். இந்தப் பாடலிலும் ஒரு யானை வருகிறது. யானையின் பெரிய மகிழ்ச்சி, மேற்சொன்ன பாடலில் வெளிப்பட்டதுபோல் இந்தப் பாடலில் அதன் பெரிய வருத்தத்தைக் கவிஞர் சித்தரிக்கிறார். ஆண் யானை புலியால் கொல்லப்பட்டுவிட்டது. பெண் யானை வருத்தத்தில் இருக்கிறது. இந்தப் பாடலில் வெளிப்படும் பிரிவு சார்ந்த வருத்தம், தலைவியின் வருத்தமாகப் பகிரப்பட்டுள்ளது. இந்த வருத்தம் போக்க முருகக் கடவுளுக்கு ஒரு நேர்ச்சை வைக்கிறார்கள். இதன் வழி ஒரு பண்பாட்டையும் இந்தப் பாடல் பதிவுசெய்கிறது. பசுமையான நெய்தல் இலைபோல் காதுகளைக் கொண்ட தன் குட்டியுடன் நின்றுகொண்டிருந்தது. புண்பட்டு வருந்துபவர் போன்று வருந்திக்கொண்டு நின்றது. ‘கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்’ என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலிலும் காடு பதிவாகியுள்ளது. இந்தப் பாடலில் உயர்ந்த மலைகள் உள்ள காடு. அந்த மலை மீது முரசு ஒலியைப் போல் அருவிகள் ஆரவாரத்துடன் விழுகின்றன. இது போன்ற அருவிகளையும் பலா மரங்களையும் உடைய மலை நாடன் தலைவன். அவனால் விரும்பப்படும் தலைவியின் சங்குகள் கொண்டு செய்த வளையல்கள் கழன்று விழுகின்றனவாம். அவளுடைய கண்கள் உறங்காதிருக்கின்றனவாம். அந்தக் கண்களில் எப்போதும் நீர்த்துளிகள் நீங்காதிருக்கின்றனவாம். அவரது இன்னோர் அகநானூற்றுப் பாடலின் வெளிக் காட்சிகள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • நல்வெள்ளியாரின் இந்த நான்கு பாடல்களில் அகநானூற்றுப் பாடல் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டுள்ளது. அவரது மற்ற மூன்று பாடல்களிலும் ஒரு மகிழ்ச்சியான நிலக் காட்சியைக் கொண்டு அதற்கு நேர் எதிரான வருத்தத்தை அவர் உருவகப்படுத்துகிறார். இந்த விநோதம் கவிதைக்குரிய லட்சணமாக வாசகர்களை ஆட்கொள்கிறது. இந்த நவீன காலக்கட்டத்தில் நல்வெள்ளியாரை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த விசேஷமான தன்மை வலியுறுத்துகிறது எனலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories