ரத்தசோகையைக் கட்டுப்படுத்த உதவும் உடற்பயிற்சிகள்
- அனீமியா எனப்படும் ரத்தசோகை பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆய்வுகளின்படி, தமிழகத்தில் 10-15 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினர் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 25% வளரிளம் பருவத்தினர் ரத்தசோகை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு, இரும்புத் தாது குறைபாடு ஆகியவை ரத்தசோகை ஏற்படுவதற்கு முதன்மைக் காரணங்களாக உள்ளன.
- 2023 மே மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை தமிழக அரசின் பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்திய கணக்கெடுப்பில் ஆண்கள் 41% பேர், பெண்கள் 54.4% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உடற்பயிற்சி தேவை:
- ரத்தசோகைப் பாதிப்புக்கு உள்ளான அனைத்து வயதினருக்கும் உடற்பயிற்சிகள் அவசியம் தேவை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் ஆக்ஸிஜனை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கடத்திச் செல்லும் ரத்தத்தின் ஆற்றலில் பற்றாக்குறை ஏற்படும். உடற்பயிற்சிகள் எரித்ரோபொயட்டின் (Erythropoietin) என்கிற ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டுகின்றன. இந்த ஹார்மோன் ரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்தியைப் பெருக்க உதவுகிறது. இதன் மூலம் ஆக்ஸிஜன் ரத்தத்தில் உடல் முழுவதும் சீராக, எளிதாகச் சென்றடைய முடிகிறது.
- இரும்புச்சத்தைக் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலை உடற்பயிற்சிகள் மூலம் பல மடங்கு அதிகரிக்க முடியும். அதே வேளையில் உடலின் உள்பகுதியில் ஏற்படக்கூடிய அழற்சியை இது குறைக்கிறது. ரத்தசோகை பொதுவாக உடல் தசைகளில் அழற்சியை, பலவீனத்தைத் தரும். ஏரோபிக், எடைகளைக் கொண்டு செய்யும் பயிற்சிகளால் உடல் இயக்கத்தை, அன்றாட வாழ்வை இயல்பாக நடத்திச் செல்லலாம்.
பிசியோதெரபியின் நன்மைகள்:
- உடல் இயக்கங்களில், தசைகளில், மூட்டு இணைப்புகளில் அனீமியா ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற பிசியோதெரபி சிகிச்சைகளும் ரத்தசோகைக்குத் தற்போது வழங்கப்படுகின்றன. ரத்தசோகையைக் கட்டுப்படுத்தச் செயல்படுத்தப்படும் மருத்துவத் திட்டங்களில் பிசியோதெரபி மருத்துவர்களை ஈடுபடப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 11 – 2024)