TNPSC Thervupettagam

ரீல்ஸ் கலாச்சாரம் வடிவமைக்கும் சமூகவெளி

March 14 , 2025 10 hrs 0 min 13 0

ரீல்ஸ் கலாச்சாரம் வடிவமைக்கும் சமூகவெளி

  • ரீல்ஸ் எனப்படும் காணொளிக் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது... ஓய்வு நேரத்தையெல்லாம் ரீல்ஸே அபகரிக்கிறது என்கிற குரல்கள் அன்றாடத்தின் சாதாரண உரையாடல்களில்கூட ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பெற்றோர் சொல்லி வருத்தப்படும் விஷயங்களின் பட்டியலில் ரீல்ஸ் உச்சத்தில் இருக்கிறது.
  • ரீல்ஸ் உள்ளிட்டவற்றுக்காகச் சமூக வலைத்தளங்களில் அளவில்லாமல் நேரத்தைச் செலவிடுவதை ஒரு சமூகச் சிக்கலாகவும் நோயாகவும் (Mobile Addiction) கருதுகிற நிலைக்குச் சமூகம் வந்துவிட்டிருக்கிறது. உண்மையிலேயே ரீல்ஸ் சிக்கலுக்கு உரியதுதானா?

ரீல்ஸின் தனித்​தன்மை:

  • இணையப் பயன்பாடு, தரவிறக்​கத்தின் நேரம், வேகம், சில நிமிடங்​களுக்குள் மாறிவிடும் பார்க்​கக்​கூடிய மனநிலை (Visual Mind) ஆகியவற்றை அடிப்​படை​யாகக் கொண்டு மிகக் குறுகிய நேரத்தில் கண்டு​களிக்​கக்​கூடியதாக 2020இல் அமெரிக்​காவில் ரீல்ஸ் உருவாக்​கப்​பட்டது. அதே ஆண்டு உலகம் முழுமைக்கும் பரவிவிட்டது.
  • ஒரு ரீல்ஸ்க்கு 90 விநாடிகள் என்று வரையறுக்​கப்​பட்​டிருந்த நேர அளவு, 2025 ஜனவரி முதல் 180 விநாடிகளாக அதிகரிக்​கப்​பட்​டிருக்​கிறது. 12 நிமிடங்கள் வரை இருக்கும் சில காட்சித்துணுக்​கு​களையும் ரீல்ஸ் என்கிறார்கள். அது குறும்​படமா, ரீல்ஸா என்கிற விவாதம் இன்னும் முடிந்த​பாடில்லை. ரீல்ஸின் முக்கிய அம்சமே அதன் குறைந்த அளவு நேரம்​தான்.
  • ரீல்ஸ் தொகுப்பில் குறிப்​பிட்ட நேரத்தில் கலவையான விஷயங்​களைப் பார்த்துவிட முடியும். அதில் உள்ள ‘கலவை’தான் அதன் தனித்​தன்மை. காரணம், டிஜிட்டல் யுகத்தில் ‘கலவை’க்கு ஒருவிதச் சமூக மதிப்பு உருவாகி​விட்​டிருக்​கிறது. பெருநிறு​வனங்​களின் வேலைக் கொள்கையில் தனித்துச் செயலாற்று​வதைவிட, இணைந்து கலவையாகச் செயலாற்றுதல் கூடுதல் வெற்றியைத் தரும் என்று குழு வேலையே (Team work) விரும்​பப்​படு​கிறது. தவிர, இயல்பு வாழ்க்கையின் கூறுகளான விருந்து, உடை, வண்ணம், சடங்கு, கல்வி என எல்லா​வற்றிலும் ‘கலவை’ அதிகரித்து​வரு​வதைப் பார்க்க முடியும்.
  • கூடுதல் சான்றாக, கடந்த 20 ஆண்டு​களில் அறிவும் அறிவுத்​தேடல் என்பதும் கலவையானவற்றைத் தெரிந்து​கொள்​வதாக, வெளிப்​படுத்து​வ​தாகப் புரிந்து​கொள்​ளப்​பட்​டிருப்​பதைச் சொல்ல முடியும். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகு​தியில் தொழில்சார் உற்பத்தி, அதற்கான பணியாளர்கள் உருவாக்கம் என்கிற செயல்​பாட்டில் திறனோடு இருப்பது அறிவு என்பதாக இருந்தது மாறி, இப்போது கூடுதல் திறனோடு இருப்பது அறிவாகக் கருதப்​படு​கிறது.
  • அதன் அடிப்​படை​யில்தான் மொழிப் பயன்பாட்டில் ‘ஆளுமை’ (Personality) என்பதன் அடுத்த கட்டமாக ‘பன்முக ஆளுமை’ (Multi Personality) என்ற சொல் கவர்ச்சிகர​மானதாக இடம்பெற்றது. கல்விப்பு​லத்தில் பாடத்​திட்​டத்​துக்கு உட்பட்ட செயல்பாடு (Activity) இயல்பாக்​கப்​பட்டுக் கூடுதல் செயல்பாடு தேவையாக்​கப்​பட்டது (Extra Activity). போட்டி, தகுதித் தேர்வு​களின் வினாக்​கள்கூட கலவையாகத்தான் அமைக்​கப்​படு​கின்றன.
  • இவையெல்லாம் ‘கலவை’தான் அறிவு என்றாக்​கப்​பட்டதன் விளைவுகள். ‘ரீல்ஸ்’ வெற்றி​பெற்ற இடம் இதுதான். அதில் உள்ள கலவைத்​தன்மை உலகின் முதன்​மையான காட்சி வடிவமாக ரீல்ஸை உருவாக்கி​யிருக்​கிறது. 2023ஆம் ஆண்டு ‘டேட்டா ரிப்போர்ட்டல்’ (Data Reportal) அமைப்பு வெளியிட்ட தரவின்படி, உலக அளவில் சராசரியாக 72.68 கோடி மக்கள் ரீல்ஸ் பார்வை​யாளர்களாக இருப்பது தெரிய​வரு​கிறது. இவ்வளவு மக்களைப் பார்வை​யாளர்​களாகக் கொண்ட ஒரே காட்சி வடிவம் சமகாலத்தில் ரீல்ஸ் மட்டுமே.

ரீல்ஸ் தேவையா?

  • டிஜிட்டல் சார்ந்த அறிதலில் ரீல்ஸின் பங்கு அளப்பரியது. கணினி சார்ந்த வேலைகளில் வந்து​கொண்​டிருக்கும் புதிய மேம்பாட்டு நுணுக்​கங்களை முதலில் அறிவிக்கும் காட்சி வடிவமாக ரீல்ஸே இருக்​கிறது. செய்யும் தொழில் சார்ந்து ஒருவர் தம்மை மேம்படுத்​திக்​கொள்​வதற்கு அவர் துறைசார்ந்து கிடைக்கும் ரீல்ஸே போதுமானது.
  • அடிப்படை அறிதலைத் தரும் ரீல்ஸை வைத்துக்​கொண்டே முயற்​சி​யுள்ள ஒருவர் மேம்படலாம். பட்டா பெறுவது, ஆதாரில் முகவரி மாற்றம், குடிமை உரிமைகளை அறிந்து​கொள்​வது, புகார் அளிக்கும் வழிமுறைகள் என எளிய விஷயங்கள் முதல் வீணான பொருளை மற்றொரு பயன்பாட்டுப் பொருளாக மாற்றும் நுணுக்கம் வரை ஏராளமான தகவல்களை ரீல்ஸ் அறியத் தருகிறது.
  • எளிய மக்கள் விழிப்பு​ணர்வு அடைவதற்கும் வேலைகளை எளிதாகச் செய்வதற்கும் கற்பிக்கிறது. சுற்றுலாத் தலங்களின் வசதிகள் குறித்து வழிகாட்டுவது, பருவகால நோய்த்​தடுப்பு வழிமுறைகளை விளக்குவது என ரீல்ஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்​கிறது. புதிய மொழியைக் கற்றுக்​கொள்​வதற்குப் பெரும் செலவு செய்ய வேண்டி​யிருந்தது. அந்த நிலையை ரீல்ஸ் மாற்றி​விட்டது.
  • அனைத்து மொழிகளுக்கும் ரீல்ஸ் உண்டு. தெரியாத மொழியை அதன் அடிப்​படையி​லிருந்து தெரிந்த மொழிவழியாக ரீல்ஸ் கற்றுக்​கொடுக்​கிறது. குறிப்​பிட்ட மொழியை மட்டும் கற்பிப்பதாக இருக்கும் ரீஸ்ல் தொகுதிகள் அதைச் சாத்தி​ய​மாக்கு​கின்றன. இசை, நடனம், ஓவியம் ஆகியவற்​றையும் கற்றுக்​கொள்ள முடியும். கல்வெட்டுகளை வாசிப்​ப​தற்கான கற்பித்​தலுக்​குக்கூட ரீல்ஸ் வந்து​விட்டது.
  • ரீல்ஸ் அறிதிறனை வளர்த்தல், பொழுது​போக்கு ஆகியவற்றுக்குத் துணையாக இருக்​கின்றன என்று சொல்லப்​படும் அதேநேரத்​தில், சமகாலச் சமூகத்தின் பிரதிபலிப்​பாகவும் இருக்​கின்றன. உலகளவில் மக்களின் கலாச்சார ஒற்றுமைகள், வேற்றுமைகள், இனக் குழுவினருக்கு இடையிலான தொடர்​புகள் பற்றிய ஆய்வு​களுக்கான தரவுகளாகவும் ரீல்ஸைப் பயன்படுத்த முடியும்.
  • சான்றாக, இந்தியர் ஒருவர் தம்முடைய கலாச்​சாரக் கூறுகளி​லிருந்து வேறுபடும் ஐரோப்​பியர்​களின் கலாச்​சாரம் தொடர்பான தகவல்​களைப் பெறுவதற்கான திறப்புகள் ரீல்ஸில் கிடைக்​கின்றன. பெரிய அளவில் இல்லை​யென்​றாலும் ஆய்வுக்கான தொடக்​கத்தை ரீல்ஸில் பெற முடியும். ஒருவகை​யில், மின்நூலகம் போன்ற​வைதான் ரீல்ஸ் தொகுதிகள். நூலகத்தில் புத்தகத்தைத் தேடும் பொறுமை ரீல்ஸைத் தேடுவ​திலும் வாய்த்து, ஒருமுறை கண்டடைந்து​விட்​டால், போது மென்று சொல்கிற அளவுக்குத் தகவல்கள் அதுவாகவே கிடைக்கத் தொடங்கி​விடும்.
  • தனித்​திறன்களை வெளிப்​படுத்து​வதற்கான வாய்ப்புகள் அற்றவர்​களின் களமாகவும் ரீல்ஸ் இருக்​கிறது. ரீல்ஸில் தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம். அது இல்லாதவர்கள் சமூகக் கவனிப்பை இழந்து​விடு​கிறார்கள். பயனுள்ள தொடர்ச்சியான செயல்​பாடுகள் பலருக்கு மிகப்​பெரிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்​திருக்​கின்றன. பெருநிறு​வனங்​களின் விளம்​பரங்​களோடு போட்டியிட முடியாத சிறு-குறு வணிகர்கள், உற்பத்​தி​யாளர்கள் தங்களுடைய பொருளைச் செலவே​யில்​லாமல் விளம்​பரப்​படுத்த ரீல்ஸ் உதவுகிறது. இவையெல்லாம் சில சான்றுகள்​தான்.

ரீல்ஸ் உருவாக்கும் சமூகவெளி:

  • நவீன அறிவியல் கண்டு​பிடிப்புகள் வழக்கம்போல உருவாக்கும் புதிய சமூகவெளியை ரீல்ஸும் உருவாக்கத் தவறவில்லை. ஏற்கெனவே மொழி, இனம், நிலம் சார்ந்து வடிவமைக்​கப்​பட்​டிருக்கும் ஒற்றை மனப்பான்மையை மாற்றி, பன்முகத்​தன்​மையைப் புரிந்து​கொண்டு ஏற்றுக்​கொள்​வதற்கான சமூகவெளியை ரீல்ஸ் உருவாக்கி​யிருக்​கிறது. இது பன்மைத்துவம் குறித்த புரிதலில் கடந்த ஐந்தாண்​டு​களில் நடந்திருக்கும் மிகப்​பெரிய மாற்றம்.
  • உத்தராகண்ட் பெட்ரோலியம் - எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்​கழகத்தின் ஊடகவியல் துறைப் பேராசிரியர் சாக்ஷி சனானா ‘சமூக வலைத்தள ரீல்ஸின் வழி சமூக - கலாச்​சாரப் பார்வை’ (The socio – cultural lens: Insights from social media reels) என்னும் தம்முடைய கட்டுரை​யில், எந்த ரீல்ஸ் எப்படி வைரலாகிறது? அனைத்து பிரபலமான ரீல்ஸிலும் அதன் உள்ளடக்க வடிவங்​களைக் கவனிக்க முடியுமா? சமூகத்தின் சூழ்நிலை, அரசியல் உள்நோக்கம் அல்லது கலாச்​சாரக் கூறுகளைப் பற்றி ரீல்ஸ் ஏதாவது கூறுகிறதா? சமூக ஊடகப் பயன்பாடு ஏன் கவர்ச்சிகர​மானதாக இருக்​கிறது? - இப்படியான கேள்வி​களைக் கேட்டால் கிடைக்கும் பதில்கள் உலகைப் பார்க்கும் விதத்தை மாற்றலாம்’ என்று குறிப்​பிடு​கிறார்.
  • ரீல்ஸ் மீதான எதிர்​மறைப் பார்வையை மாற்று​வதற்கான செயல்​பாட்டில் சாக்ஷி சனானாவின் கருத்துகள் குறிப்​பிடத்​தக்கவை. உண்மையான சிக்கல், சமூக வலைத்​தளங்​களில் இல்லை என்பது அவரின் நிலைப்​பாடு. காலந்​தோறும் புதிய விஷயங்கள் சமூகத்​துக்குள் நுழையும்​போதெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்திருக்​கின்றன. ரீல்ஸ் குறித்த விமர்​சனங்​களையும் அப்​படித்தான் புரிந்து​கொள்ள வேண்​டும். நல்​ல​வற்றைச் சமூகம் தக்​கவைத்​துக்​கொள்ளத்​ தவறியதில்​லை.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories