TNPSC Thervupettagam

ரூ.4.25 கோடியில் 17 மரகத பூஞ்சோலைகள்: தமிழக வனத்துறை தகவல்

March 9 , 2025 4 hrs 0 min 10 0

ரூ.4.25 கோடியில் 17 மரகத பூஞ்சோலைகள்: தமிழக வனத்துறை தகவல்

  • சென்னை: தமிழக வனத்துறை சார்பில் ரூ.4.25 கோடியில் 17 மதரகப் பூஞ்சோலைகள் அமைக்கப்பட இருப்பதாக வனத் துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர், 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம பசுமை மரப்பூங்காக்கள்) உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களைச் சார்ந்து இருப்பதை குறைக்கவும், இத்திட்ட செயலாக்கத்தில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கான மாற்று வருவாய் வாய்ப்பு ஏற்படுத்தவும், மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.25 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மரகதப்பூங்காக்கள் உள்ளூர் மக்களுக்குத் தேவையான இயற்கை வளங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். மரகதப்பூஞ்சோலைகள் மாநில அரசின் தனித்துவமான முன்னெடுப்பாக திகழ்வதுடன் கிராம மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாகவும், எதிர்வரும் காலங்களில் நிலத்தடி நீர் சேகரிப்பு கட்டமைப்பாகவும், காலநிலையை பாதுகாக்கவும் உதவியாக இருக்கும்.
  • தமிழக அரசால் ஏற்கெனவே 83 மரகதப்பூஞ்சோலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு, இதுவரை 75 மரகதப்பூஞ்சோலைகள் 29 மாவட்டங்களில் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் 8 மரகதப் பூஞ்சோலை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
  • ஒவ்வொரு மரகதப் பூஞ்சோலையும், 1 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கம் செய்யப்பட்டு அதில் பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் கதவு, நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேசைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடிமரம், எரிபொருள், தீவனம், காய், கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை அனைத்து மரகதப் பூஞ்சோலைகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளன.
  • தற்போது, மேலும் 17 மரகதப் பூஞ்சோலைகள் 5 மாவட்டங்களில் மொத்தம் ரூ.4.25 கோடியில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கலில் 5, பெரம்பலூரில் 4, கள்ளக்குறிச்சியில் 3, திருப்பத்தூர் 3, திருவண்ணாமலையில் 2 இடங்கள் என மொத்தம் 17 இடங்களில் மரகதப்பூஞ்சோலைகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories