TNPSC Thervupettagam

ரூபாய் மதிப்பு சரிவும்.. அதன் தாக்கமும்..

January 22 , 2025 6 hrs 0 min 7 0

ரூபாய் மதிப்பு சரிவும்.. அதன் தாக்கமும்..

  • சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 83.22 ஆக இருந்தது. இது செப்டம்பரில் 84 ஆகவும், டிசம்பர் தொடக்கத்தில் 85 ஆகவும் சரிந்தது. இப்போது 86-ஐ தாண்டிவிட்டது. குறிப்பாக டிசம்பரில் மட்டும் ஒரு ரூபாய் சரிந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? சரிவால் ஏற்படும் தாக்கம் என்ன? நன்மைகள் என்ன? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
  • கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோ ரூ.400-ஐ தாண்டியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம். எனினும் அடுத்தடுத்த நாட்களில் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இது உள்நாட்டு பற்றாக்குறையின் விளைவு.
  • இதுபோல ஒரு பொருளின் பற்றாக்குறை நீடித்தால் அதன் விலை உயரும். அதனால் பணத்தின் உள்நாட்டு மதிப்பு குறையும். பணப்பெருக்கமும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கிறது. 'அதிக பணம் குறைவாக கிடைக்கும் பொருட்களைத் துரத்துகிறது' என்று ஆங்கிலத்தில் சொல்வது உண்டு. ஏனெனில், உற்பத்தியை குறுகிய காலத்தில் அதிகரிக்க முடியாது.

சரிவுக்கான காரணங்கள்

  • உலக நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மூலமாகவே நடைபெறுகிறது. இதனால், உலக நாடுகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும்பகுதியை அமெரிக்க டாலராகவே வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதன் மதிப்பு உயர்ந்தால் மற்ற நாடுகளின் மதிப்பு சரியும். இதுதான் இப்போது நடக்கிறது.
  • மேலும் ஒரு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி (வர்த்தக பற்றாக்குறை), மத்திய வங்கியின் கொள்கைகள், பணவீக்கம், அந்நியச் செலாவணி கையிருப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை, பங்குச் சந்தை ஏற்ற இறக்கம், வட்டி விகிதம், சர்வதேச நிலவரம் உள்ளிட்டவையும் அந்த நாட்டின் பண மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் மந்த நிலை உருவாவதாக உணர்ந்த அந்நாட்டு மத்திய வங்கி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வட்டி விகிதத்தை 5.5-லிருந்து 5% ஆக குறைத்தது. பின்னர் நவம்பர் 7-ல் 4.75% ஆகவும் டிசம்பர் 18-ல் 4.5% ஆகவும் அடுத்தடுத்து குறைக்கப்பட்டது.

ட்ரம்ப் வெற்றி:

  • இதனிடையே நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் “அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்” என அறிவித்தார். மேலும் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என்றும் சீனாவில் செயல்படும் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களை அமெரிக்காவுக்கு இடம்பெயரச் செய்வேன் என்றும் அறிவித்தார்.
  • வட்டி குறைப்பு மற்றும் ட்ரம்பின் அறிவிப்பால்அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேநேரம் சீனா (2.96%), இந்தோனேசியா (4.54%), ஜப்பான் (11.25%), கொரியா (13.81%), வியட்நாம் (5.06%), தென் ஆப்பிரிக்கா (3.02%), மெக்சிகோ (22.24%) ஆகிய நாடுகளினன் நாணய மதிப்பும் 2024-ம் ஆண்டில் சரிவை சந்தித்துள்ளன. இந்திய ரூபாயின் வீழ்ச்சி 2.8% மட்டுமே.

வர்த்தக பற்றாக்குறை:

  • இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி) நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் 37.8 பில்லியன் டாலராக (ரூ.3.24 லட்சம் கோடி) அதிகரித்தது. பொருட்கள் (சேவை தவிர்த்து) இறக்குமதி 69.95 பில்லியன்டாலராக (ரூ.6 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. ஆனால் பொருட்கள் (சேவை தவிர்த்து) ஏற்றுமதி 32.1 பில்லியன் டாலராக (ரூ.2.75 லட்சம் கோடி) குறைந்துள்ளது. இதுவும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு மற்றொரு முக்கிய காரணம்.இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி)) 1.2% ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதி:

  • நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுபோல தங்கம் இந்த ஆண்டில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது. இவை இறக்குமதி அதிகரிக்க முக்கிய காரணங்களாக அமைந்தன. இதுவும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாக அமைந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு:

  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி முன் எப்போதும் இல்லாத வகையில் 705 பில்லியன் டாலராக (ரூ.60 லட்சம் கோடி) உயர்ந்தது. அன்றைய தினம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.79 ஆக இருந்தது. ஆனால் அதன் பிறகு படிப்படியாகக் குறைந்து 644 பில்லியன் டாலரானது (ரூ.55 லட்சம் கோடி).

பங்குச் சந்தை சரிவு:

  • இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 3 மாதங்களாக சுமார் 10% சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த பணத்தை அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் வெளியில் எடுத்தனர். இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்க டாலர் வெளியேறியதும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.

சரிவால் ஏற்படும் தாக்கம்

இறக்குமதி செலவு அதிகரிக்கும்:

  • இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவை கட்டணங்களை டாலராக செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில் ரூபாய் மதிப்பு சரிவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும். இது நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரிக்கும்.
  • இதனால் எரிபொருள் விலை உயர்ந்து காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரித்து பணவீக்கம் அதிகரிக்கும். இது சாமானிய பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். செல்போன், கேமரா, இயந்திரங்கள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் அதிகரிக்கும்.

அந்நிய முதலீடு குறையும்:

  • ரூபாய் மதிப்பு சரிவதால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுவார்கள். இதனால் பங்குச் சந்தை மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

யாருக்கு லாபம்

  • பொதுவாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை டாலரில்தான் விற்பார்கள். இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவதால் ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கும். குறிப்பாக, ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வருவாயும் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள்:

  • ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கையிருப்பில் உள்ள டாலரை விற்று அதற்கு சமமான ரூபாய்களை வைத்து பத்திரங்களை வாங்குவதன் மூலம் சந்தையில் தலையிடுகிறது.
  • “கிருமி நீக்கம் செய்யப்பட்ட (SterIlized) தலையீடு” என அழைக்கப்படும் இந்த செயல்முறை, பொதுமக்களுக்கு கடன் கிடைப்பது பாதிக்கப்படாமல் இருப்பதையும், பணவியல் கொள்கை மாறாமல் இருப்பதையும் உறுதி செய்யும். அதே வேளையில், தேவையான பணப்புழக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
  • இதுபோல உலக நாடுகளுடன் டாலருக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
  • ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை அதன் சுதந்திரமான பணவியல் கொள்கை நோக்கங்களுக்கு ஏற்ப விலை நிலைத்தன்மை மற்றும் மாற்று விகித ஸ்திரத்தன்மை இரண்டையும் பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறது. தாராளமய சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இந்தியா மற்றும் வளரும் பொருளாதாரங்கள் இந்த வகையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டித்தான் வரும். வேறு வழியில்லை. ‘வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும்' என்பது பழமொழி.

புதிய முயற்சிகள் தேவை:

  • டாலர் வருமானத்தைத் தரும் தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். ஏற்றுமதியை அதிகரித்து வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வேண்டும். இதற்கு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டும்.
  • வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து டெபாசிட்டை ஈர்க்க கூடுதல் வட்டி தர வேண்டும். இதனால் அதிகப்படியாக டாலர் இந்தியாவுக்குள் வரும். கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். இதற்கு மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories