TNPSC Thervupettagam

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்...

July 29 , 2024 11 hrs 0 min 3 0
  • காந்தி இறந்த பின் அவரது உடலை ஏன் தைலப் பாடம் செய்ய​வில்லை என்ற சந்தேகம் திடீரென்று எழுந்தது. தைலப் பாடம் என்றால் தெரியுமா என்று ஊடக நண்பர் (40 வயது) ஒருவரிடம் கேட்டேன். “தைலம் என்றால் தைலம்; பாடம் என்றால் பாடம்” என்றார் வடிவேலு பாணியில். தெரிய​வில்லை என்பதை இப்படியும் சொல்லலாம் போலும். இறந்தவரின் உடலை ஒருவகை மருந்தெண்​ணெயில் பதப்​படுத்தி நீண்டகாலம் பாதுகாத்​தலைத் தைலப் பாடம் என்று சொல்வர்.
  • இன்றைக்கு எவரும் அதைச் செய்வதில்லை; அரசும் அனுமதிக்காது. பழங்காலத்​தில் அரசர்கள் இறந்த பின் அவர்களது உடலைத் தைலப் பாடம் செய்து பாதுகாத்​த​தாகத் தெரிகிறது. நம் நாட்டில் ஒரு பேரரசரைப் போல் மக்கள் செல்வாக்​குடன் வாழ்ந்த காந்தி காலமானபோது, தைலப் பாடம் செய்ய​லாம் என்கிற வேண்டுகோள் எழாமல் போகவில்லை.

காந்தியின் கண்டிப்பு:

  • “உடலைப் பதப்​படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை மிகுந்த பிரயாசைப்பட்டுத்​தான் தவிர்த்​தோம். இந்துக்​களின் நம்பிக்கை அதற்கு இடங்கொடுக்காது. நாங்கள் ஒப்பு​க்​கொண்​டால் பாபு ஒருபோதும் எங்களை மன்னிக்க மாட்டார்” என்று காந்தி​யின் மகன் தேவதாஸ் காந்தி நாட்டு மக்களிடம் இது குறித்து விளக்​கமளித்​தார் (வானொலி உரை, 5 பிப்ரவரி 1948).
  • பிரதமர் நேருவும், “லட்சக்​கணக்கான மக்கள் மகாத்​மாவைத் தரிசித்து தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்​தும் பொருட்டு, அவருடைய சரீரத்​தைத் தைலப் பாடம் செய்து இன்னும் சில தினங்​களுக்​குப் பாதுகாத்து வைக்கலாம் என்று நண்பர்கள் சிலர் யோசனை கூறினர். ஆனால், தமது பிரேதத்​தைத் தைலப் பாடம் செய்ய​வோ பாதுகாத்து வைக்கவோ கூடாது என்று மகாத்மா பல தடவை சொல்லியிருக்​கிறார்.
  • காந்தி அதை விரும்​பியதில்லை; பிறர் எவ்வளவு ஆசைப்​பட்டாலும் இவ்விடத்​தில் மகாத்​மாவின் விருப்​பத்​திற்கு மாறாக எதையும் நாங்கள் செய்ய விரும்​பவில்லை” என்றார் (‘சக்தி’, 1948 பிப்ரவரி). காந்தி​யின் மறைவையொட்டி ஆற்றிய இரங்கல் உரையில் அண்ணா இது போன்ற அயலக சம்பவம் ஒன்றை நினைவு​கூர்ந்​தார். “சில காலத்து​க்கு முன்பு பர்மாவில் நடந்த ஒரு துப்பாக்​கிச்​சூட்டில் சிலர் இறந்தனர்.
  • இன்றும் குண்டு பாய்ந்த அந்த உடலங்களை வைத்து​க்​கொண்​டுள்​ளனர்” (‘காந்தி படுகொலை’, கடற்கரய், ப.116). தைலப் பாடத்து​க்கான கோரிக்கையை இவ்வாறு அண்ணா சூசகமாக எழுப்​பினார். “என் உடம்பு அநித்​தி​ய​மானது; அழியக்​கூடியது. ஆனால், நான் பின்பற்றிவந்த லட்சி​யங்கள் நித்தி​ய​மானவை. என்றும் அழியாதவை” என அடிக்கடி சொல்லிவந்த காந்தி​யின் பூதஉடல் எரியூட்டப்​பட்டது; தைலப் பாடம் செய்யப்​பட​வில்லை.

தைலப் பாடம் என்பது என்ன

  • இறந்த உடலைச் சில நாள்கள் வைத்திருப்ப​து என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு. நீண்ட காலம் பராமரிப்ப​து என்பது இன்னொரு நிலை. நீண்ட காலம் வைத்திருப்​ப​தற்​குத்​தான் தைலப் பாடம் உதவுகிறது. சில வாரங்கள் வரை உடல்களைச் சவக்கிடங்​கில் வைத்திருப்​பது, வெளிநாட்டில் இறந்தவர் உடலைத் தாய்நாட்டுக்​குக் கொண்டுவருவது போன்றவை இன்று மிக இயல்பாகிவிட்டன.
  • அவற்றுக்​குத் தைலப் பாட ஏற்பாடு அவசி​யமில்லை. பதனம் (Embalming) என்ற சாதாரண முறையே போதுமானது. அமெரிக்கா​வில் இறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உடல் 2005இல் இந்த முறையில்​தான் நாகர்​கோவிலுக்கு வந்தது. பதனத்​தில் நான்கு வகைகள் உண்டு, அவை வேறு.
  • 1924இல் தன் 53ஆவது வயதில் காலமான ரஷ்யத் தலைவர் லெனின் உடல், கிளிசரால் பொட்டாசியம் அசிட்டேன் என்ற வேதியியல் கலவை​யில் வைத்துப் பாதுகாக்​கப்​பட்டு வந்தது. அதற்கு மிகுந்த பொருள் செலவு ஏற்பட்டது. அதனால் 2016இல் லெனின் உடலைச் செஞ்சதுக்கத்தில் புதைக்க அன்றைய அரசாங்கம் முடிவு செய்து​விட்டது.
  • ‘போன உயிரைத் திருப்ப முடிகிற அளவுக்கு எதிர்​காலத்​தில் அறிவியல் முன்னேறி​விடும், அப்போது அதற்கு உடல் தேவைப்​படும் அல்லவா? அதற்காக உடலைப் பாதுகாக்​கிறோம்’ என்று 1924இல் காரணம் சொல்லப்​பட்ட​தாம்.
  • வைணவப் பெரியார் ராமானுஜர் உடல் திருவரங்​கத்​தில் பாதுகாக்​கப்​படும் செய்தி ஏன் பிரபலமாக​வில்லை என்று செந்தலை கவுதமன் சில மாதங்​களுக்கு முன் ஃபேஸ்புக்​கில் கேட்டிருந்​தார். பொ.ஆ. (கி.பி.) 1131இல் ராமானுஜர் திருவரங்​கத்​தில் திருநாடு அலங்கரித்​தார் - அதாவது காலமானார்.
  • அவர் திருமேனியைப் பள்ளிப்​படுத்தி​ய பின்னர், தானாகத் திருமேனி தோன்றிய​தாம். அதுவே தற்போது உடையவர் சன்னதியாக வழிபாட்டில் உள்ள​தாம். அதற்குத் திருமஞ்​சனம் கிடையாது. பதிலாகக் குங்குமப்​பூவும் பச்சைக் கற்பூர​மும் ஆண்டுக்கு இரண்டு முறை சாற்றப்​படு​கிறது. இந்தத் தகவல், கோயில் அறிவிப்​புப் பலகை வழி தெரிய​வரு​கிறது.
  • என் பள்ளிக் காலத்​தில் என் அப்பா கோவாவிற்​குச் சென்று வந்தார். பாம் ஜீசஸ் தேவாலயத்திலிருந்து ஒரு பெரிய மெழுகு​வத்​தியை வாங்கி வந்தார். அதை என் கிறித்துவ ஆசிரியருக்கு அன்பளிப்​பாகக் கொடுக்கச் சொன்னார். அந்தத் தேவாலயத்​தில்​,1553இல் இறந்த புனித பிரான்சிஸ் சேவியர் உடல் இன்றும் குறிப்​பிட்ட கால இடைவெளி​யில் காட்சிப்​படுத்​தலுடன் பாதுகாக்​கப்​பட்டுவரு​கிறது. ஒரு காட்சிப்​படுத்​தலின்போது சேவியர் கால் கட்டை​விரலை ஒரு பக்தை கடித்து வீட்டுக்​குக் கொண்டு​போய்​விட்டாராம். இந்தத் தகவலை முன்னாள் காவல் அதிகாரி திலகவதி பகிர்ந்​தார்.

ஏன் தொடரவில்லை

  • உயிரை இழந்த உடலை என்ன செய்கிறோம்? முதலில் அதன் பெயர் அழிகிறது; பின் சடலம் ஆகிறது. சிலர் அதை மண்ணில் புதைத்​தனர். இட்ட இடம் இடுகாடானது. சிலர் சுட்டனர், சுட்ட இடம் சுடுகாடானது. ஒரு குறிப்​பிட்ட மதத்தினர் இறந்த உடலைக் குன்றுகளின் மேல் கிடத்தி​விட்டுக் கீழே இறங்கினர். பறவைகளுக்கு அது உணவாகப் பயனானது. இன்று மருத்து​வ ஆய்வுக்​குச் சிலர் உடலைத் தருகின்​றனர். சிலர் கல்லறைகளில் வைக்கின்​றனர்.
  • இறந்த உடலங்​களைப் பதப்படுத்தி வைக்கும் முறைக்கு எகிப்​தியர் முன்னோடிகள். அரசர்கள் இறந்தவுடன் மறுஉல​குக்குச் செல்கிறார்கள்; அவ்வுலகில் வாழ இந்தப் பூவுலக உடல்கள் தேவைப்​படு​கின்றன - இறந்த சடலங்களை அழியாமல் பாதுகாத்​ததற்கு அவர்கள் சொன்ன காரணம் அது.
  • அவை மம்மிகள் எனப்பட்டன. இப்படிப் பல முறைகளுள் ஒன்றாக இருந்த தைலப் பாட முறை மட்டும் அருகி மறைந்தது ஏன்? உலகில் இறந்த முதல் மனிதனான ஆபெல் முதல் நேற்று எங்கள் குடியிருப்பில் காலமான பாட்டி வரை, வந்தவர் எல்லாம் உடலாகவாவது தங்கி​விட்டால் உயிர் உள்ள உடல்கள் வாழ இடம் குறைந்​து​விடும் என்​ப​தாலா?

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories