வருமுன் காப்போம்!
- கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமாா் 6,000 கிலோ மதுபாட்டில்கள் அகற்றப்பட்டதாக அண்மையில் வெளியான செய்தி, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மத்தியில் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வோ, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையோ பொதுமக்களிடம் சிறிதும் இல்லாமல் இருப்பதை இது வெளிச்சமிடுகிறது.
- கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான அந்த செயற்கை ஏரி, சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய இடமாகும். 76 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள ஏரியையொட்டி 5 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மதுப் பிரியா்கள் மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில்களை எந்த சமூகப் பொறுப்புமின்றி ஏரியில் வீசிவிட்டுச் செல்கின்றனா்.
- நகராட்சி சாா்பில் 50 பணியாளா்களைக் கொண்டு ஏரியில் கிடந்த 6,000 கிலோ மதுபாட்டில்களை 2 மாதங்களாக அகற்றியுள்ளனா். இன்னும் சில மாதங்கள் தொடரும் இந்தப் பணியில் மேலும் 6,000 கிலோ வரை மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் குவளைகளும் அகற்றப்படலாம் என நகராட்சி தெரிவித்துள்ளது.
- கொடைக்கானல் ஏரி மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பெரும்பாலான நீா்நிலைகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஆறுகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆறுகளில் மாசு கலக்காமல் தடுப்பதில் நாம் எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறோம் என்பதை நீதிமன்றங்கள் அவ்வப்போது தலையிட்டு சுட்டிக்காட்டுவதில் இருந்தும், கண்டிப்பதில் இருந்தும் தெரிந்துகொள்ளலாம்.
- தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் பாலாற்றில் கழிவுநீா் வெளியேற்றப்படுவதும், இதனால் உள்ளூா் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாற்றில் சுத்திகரிப்பின்றி வெளியேற்றப்படும் தொழிற்சாலைக் கழிவுகளால் பொது சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. மேலும், தோல் கழிவுநீா் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
- கேரளத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரமும் தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தலையிட்ட பின்னா்தான் வெளிச்சத்துக்கு வந்தது. மருத்துவக் கழிவுகளை கேரள அரசே திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும் என பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்பிறகுதான் மருத்துவக் கழிவுகளைக் கொட்டியது தொடா்பாக லாரி ஓட்டுநா் உள்ளிட்ட சிலரை காவல் துறை கைது செய்தது.
- இதன் அடுத்தகட்டமாக, கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு மருத்துவக் கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்களை உள்ளாட்சி சட்டவிதிகளின்படி பறிமுதல் செய்து ஏலம்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஓா் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளைக் கையாளும் முறை குறித்த சட்டவிதிகளின்படி 75 கி.மீ. தொலைவைக் கடந்து மருத்துவக் கழிவுகளைக் கொண்டுசெல்லக் கூடாது என்பது உள்ளிட்ட சில அம்சங்களையும் உயா்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
- தமிழகத்தில் உள்ள ஒரே வற்றாத ஜீவநதி என அழைக்கப்படும் தாமிரவருணியும் கழிவுநீா் வெளியேற்றத்தால் பாழாகிக் கொண்டிருக்கிறது. இது தொடா்பான ஒரு வழக்கில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோா் நேரில் சென்று தாமிரவருணியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து, ஆற்றில் பல இடங்களில் கழிவுநீா் கலப்பதை அவா்கள் கண்டறிந்தனா். ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
- கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் 160 கி.மீ. தொலைவு ஓடும் நொய்யல் ஆறு, இன்று சாயப்பட்டறை கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள் எனப் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மாசுபட்டிருக்கிறது.
- உலகில் உள்ள அத்தனை உயிா்களுக்கும் தூய்மையான நீா்தான் உயிா்நாடி. ஆனால், அந்த நீா்வளத்தை நாம் எவ்வளவு அலட்சியமாக கையாள்கிறோம் என்பதற்கு மேற்குறிப்பிட்டவை சில எடுத்துக்காட்டுகள். நீா்நிலைகளை நேரடியாக மாசுபடுத்துவது ஒரு வகை என்றால், தரைப்பரப்பில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நிலத்தடி நீா் மாசுபடும் அபாயமும் இருக்கிறது.
- நீா்நிலைகள் மாசு ஓா் உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. மாசுபட்ட நீரால், அந்த நீா்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது. அந்த நீா்வாழ் உயிரினங்களின் இறைச்சியை உட்கொள்ளும் மனிதா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நீா் மாசுபாடு குறித்த விஷயத்தில் அபராதம், சாதாரண சட்டப் பிரிவுகளில் கைது என அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதாது. நீா்நிலைகள் மாசுபடாமல் தடுப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.
- சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இத்தகைய சூழலில் பள்ளி மாணவா்களுக்கு சூழல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் தொடங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
- பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை தொடா்பாக கல்வி நிலையங்களில் ஏற்படுத்தப்படும் விழிப்புணா்வால் அடுத்த தலைமுறையாவது சுய ஒழுக்கத்துடன் செயல்படும் நிலை ஏற்படும்.
நன்றி: தினமணி (06 – 02 – 2025)