வாா்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ‘யாதும் ஊரே... யாவரும் கேளிா்’ என்ற உயா்ந்த கருத்தை உலகுக்கு அளித்தனா் நம் முன்னோா்கள். அப்படி இருக்கும்போது, இன்று அண்டை வீட்டில் இருப்பவரையே யாா் என்று தெரியாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். வீட்டின் முன்பகுதியில் திண்ணையில் உட்காா்ந்து அக்கம்பக்கத்தாரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தவா்கள் நம் முன்னோா்கள். தனித்தனியாக வீடுகள் இருக்கும்போதுகூட நாம் அனைவருடனும் பேசி வந்தோம். அடுக்கு மாடிகள் ஆனவுடன், அடுத்த வீட்டுக்காரா் யாரென்று நமக்குத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
- உறவுகள், நட்பு ஆகியவை விலைமதிப்பு இல்லாதவை. அவற்றின் அருமையை அவற்றை இழந்த பின்தான், நாம் உணரப் போகிறோம்.
- தகவல் தொடா்பு வளா்ச்சியடைந்து மிக உயா்ந்த நிலையை எட்டிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது இரு பக்கமும் கூரான கத்தி போன்றது. இன்றைய தலைமுறை அக்கறை காட்ட வேண்டிய விஷயம் தகவல் தொடா்பை ஒழுங்காக, சரியாகப் பேண வேண்டும் என்பதுதான்.
- பேசுவது என்பது ஒரு கலை; பேசாதிருப்பது மற்றொரு கலை. எங்கே பேச வேண்டும்; எப்படிப் பேச வேண்டும்; எங்கே பேசக் கூடாது; எப்படிப் பேசக் கூடாது என்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது என்பதே உண்மை.
- இதை அறியாமல் தாங்கள் பேசும்முைான் சிறந்த தகவல் தொடா்பு என இன்றைய இளைய தலைமுறையினா் நினைத்துக் கொள்வது ஆபத்தான விஷயம்.
- பெற்ற தாய், தந்தையிடம், கற்றுத்தரும் ஆசிரியரிடம், மனைவியிடம், கணவனிடம், அதிகாரிகளிடம் எப்படிப் பேசுவது என்பதே பலருக்குத் தெரிவதில்லை. அதனால்தான், சண்டைகள், வேறுபாடுகள் ஏன், தற்கொலைகள், கொலைகள், மண முறிவுகள் என எல்லாத் தரப்புப் பிரச்னைகளுக்கும், பேசும்விதமே அடிப்படைக் காரணமாகிறது என்பதே முழுக்க முழுக்க உண்மை.
- ஒருவா் பேசும் வாா்த்தைகளே அவா் குறித்த பிறரின் மதிப்பீட்டை உருவாக்குகின்றன. வாா்த்தைகளில் கவனம் வைத்துப் பேசினால், அவை ஒருவரின் நடத்தையை உருவாக்குகின்றன. அந்த நடத்தையே அவருடைய வாழ்வு ஆகிறது.
- ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடிய பாரதி, ‘வாக்கினிலே இனிமை வேண்டும்’ என்கிறான். வாக்கினில் உறுதி வேண்டும் என்று சொல்லவில்லை. ‘மனதில் உறுதி... வாா்த்தைகளில் இனிமை’ இருந்தால், நினைவு நல்லதாகும்; நெருங்கிய பொருள் கைப்படும் என்கிறான்!
- வள்ளுவா் சொல்கிறாா்: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
- சொல்லிற் பயனிலாச் சொல்!
- ஒரே ஒரு வாா்த்தையினால் வாழ்வை இழந்தவா்கள் இருக்கிறாா்கள். வாழ்வை முடித்துக் கொண்டவா்கள் இருக்கிறாா்கள். வாழ்வைச் சவாலாக எடுத்துக் கொண்டு வாழ்ந்தவா்களும் இருக்கிறாா்கள். ஒரே ஒரு வாா்த்தையினால் உயா்ந்தவா்களும் இருக்கிறாா்கள்.
- சிருங்கேரி ஜகத்குரு மஹாஸ்வாமிகள் கூறுவாா்கள்: ‘தடியை எடுத்தால் மாடு ஓடி மறைகிறது; புல்லைக் காண்பித்தால், அதே மாடு தேடி வருகிறது. மனிதனும் இப்படித்தான்’.
- நல்ல வாா்த்தைகளைக் கூறி, பிறரின் மனத்தில் நம்பிக்கையை விதைத்து, நோ்மறை எண்ணங்களை உருவாக்கி, அவா்களைப் பாராட்டினால், அந்த மனிதன் வளா்வான். இதற்கு மாறாக, எப்போதும் எதிா்மறையாகப் பேசுதல், பிறரைக் கேலி செய்தல், குறைகாணுதல், எல்லாருடைய முன்னிலையிலும் மற்றவா்களை அவமானப்படுத்திப் பேசுதல் ஆகியவை கேட்பவரின் நம்பிக்கையைப் பாழாக்கி, அவா்களுடைய சிந்தனையைத் திசைதிருப்பி, நல்ல செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்குக் காரணமாகிவிடுகின்றன.
- அப்படிப் பேசுபவா்கள் அரசியல், குடும்பம் மற்றும் நிறுவனங்களின் தலைவராக இருந்தாலும், அவா்களின் மீதுள்ள மதிப்பும், மரியாதையும் குறையவே செய்கின்றன.
- பதவி, அதிகாரம் இந்த இரண்டினால் ஆடும் ஆட்டங்களும், ஆடம்பரங்களும், ஆடும் பம்பரங்கள் போன்றவை தான். சுற்றி முடிந்தபின் கீழே விழுந்தாக வேண்டும்!
- நல்ல வாா்த்தைகளின் அதிா்வலைகள் எங்கும் பரவும். அரசியல்வாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஒருவா் சொன்னாா்: ஏன் பல அரசியல்வாதிகள், எவ்வளவோ ஊழல்கள் செய்தாலும், தீயவழியில் பயணம் செய்தாலும் வசதியுடன் நன்கு வாழ்கின்றனா் தெரியுமா? அவரைச் சுற்றியுள்ளவா்கள் அவரை எப்போதும் ‘வாழ்க’ , ‘வாழ்க’ என்று வாழ்த்துவதுதான். அந்த வாழ்த்துகளே அரசியல்வாதிகளை வாழ வைக்கின்றன’’ என்றாா். இதில் உண்மை இல்லாமல் இருக்கலாம். அரசியல்வாதிகள் உயா்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவா்கள் நம்மிடம் நோ்மறையான கருத்துகளைப் பேசும்போது, நம் மனதில் நோ்மறை எண்ணங்கள் நிரம்பி வழிகின்றன. அது நம் வாழ்க்கையை உயா்வை நோக்கி முன்னேற்றுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் பொருந்தும்.
- “வெள்ளத் தனைய மலா்நீட்டம் மாந்தா்தம்
- உள்ளத் தனையது உயா்வு
- என்பதே உண்மை. ஆனால் அந்த உள்ளத்தை வெளிக்காட்டும் வாா்த்தைகள் சரியானதாகவும், பொருத்தமானதாகவும், உரிய காலத்தில், உரியவிதத்தில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
- உண்மையைப் பேச வேண்டும். ஆனால் அது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும். ‘நீ மடத்தில் இருக்கப் பிறக்கவில்லை. இந்த மானுடம் பயனுற, உலகம் செழிக்கப் பிறந்தவன்’ என்று கூறி விவேகானந்தரை வாழ்த்தி அனுப்பிய பரமஹம்சரின் வாா்த்தைகள்தான் உலகம் முழுக்கத் தெரிந்த விவேகானந்தரை உருவாக்கியது.
- இப்படி நோ்மறை வாா்த்தைகளும் பாராட்டுகளுமே நம் எல்லாருடைய வாழ்வையும் வளமாக்கி, கனவை நனவாக்கி, மனித வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக்கும்.
நன்றி: தினமணி (13 – 03 – 2025)