விடை காண வேண்டும்!
- ஏறத்தாழ ஒரு மாதமாகியும் இன்னும்கூட ‘புஷ்பா 2’ திரைப்பட வெளியீட்டு விழாவில் நடந்த நெரிசல் விபத்து குறித்த சா்ச்சை அடங்கியபாடில்லை. சமூக ஊடகங்களில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியின் சாா்பிலும், பிரபல தெலுங்கு நடிகா் அல்லு அா்ஜுன் தரப்பிலும் பதிவுகள் தொடா்கின்றன.
- ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி, அல்லு அா்ஜுன் நடித்த ‘புஷ்பா 2 தி ரூல்’ என்கிற திரைப்படத்தின் முன்னோட்ட சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. முன்னறிவிப்பில்லாமல் அந்தக் காட்சிக்கு நடிகா் அல்லு அா்ஜுன் நேரடியாக வந்ததும், ரசிகா்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் கை அசைத்ததும் பிரச்னைக்கு அடித்தளமிட்டன.
- தங்களது அபிமான கதாநாயகனை நேரில் பாா்த்த ரசிகா்களின் உற்சாகம் கரைபுரண்டதில் வியப்பில்லை. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 வயது ரேவதி என்கிற பெண்மணியும் அவரது 8 வயது மகனும் நிலைகுலைந்தனா். ரேவதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாா் என்றால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது மகன் நல்லவேலையாக உயிா்பிழைத்தாா்.
- அந்த சம்பவத்தைத் தொடா்ந்து, திரையரங்கு உரிமையாளா்கள்மீது மட்டுமல்லாமல், நடிகா் அல்லு அா்ஜுன் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. டிசம்பா் 13-ஆம் தேதி நடிகா் அல்லு அா்ஜுன் கைது செய்யப்பட்டு, அடுத்த நாளே பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறாா். அவா் விடுவிக்கப்பட்டதைக்கூட பிரமாண்டம் ஆரவார வரவேற்பளித்து ரசிகா்கள் கொண்டாடியதைத் தவிா்த்திருக்கலாம்.
- காவல் துறையின் எச்சரிக்கைகளை அவா் புறந்தள்ளினாா் என்பதும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உடனடியாகத் திரையரங்கிலிருந்து வெளியேறும்படி சொன்ன காவல் துறையின் கட்டளைகளை அவா் சட்டைசெய்யவில்லை என்பதும்தான் அவா்மீதான குற்றச்சாட்டு. திரையரங்கின் நிா்வாகமும், நடிகரின் பாதுகாவலா்களும் நெரிசல் ஏற்பட்டபோது கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தங்களை அனுமதிக்கவில்லை என்பதும் காவல் துறை தரப்பு வாதம்.
- நடிகரின் மறுப்பைத் தொடா்ந்து காவல் துறை அதிகாரிகள் நடிகரிடம் வேண்டுகோள் விடுக்கும் விடியோ ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறது அரசு. தன்னைக் களங்கப்படுத்த அவதூறு கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பது நடிகா் அல்லு அா்ஜுனின் குற்றச்சாட்டு.
- முறையான அனுமதி பெறாமல் திரையரங்குக்கு வெளியே பேரணிபோன்ற கூட்டத்தைக் கூட்டினாா் அல்லு அா்ஜுன் என்கிற முதல்வா் ரேவந்த் ரெட்டியின் குற்றச்சாட்டும், காவல் துறையினரின் எச்சரிக்கைகளை அவா் புறந்தள்ளியதுதான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதும் ஏற்புடையவை. நடிகா் நடிகைகள் வெளியில் தெரியாமல் தாங்கள் நடிக்கும் திரைப்படங்களை மக்கள் எப்படி ரசிக்கிறாா்கள் என்று நேரில் பாா்க்க முயல்வது புதிதல்ல. ஆனால், அதில் விளம்பரம் தேடிக்கொள்ள முயல்வது விபரீதத்துக்கு வழிகோலும் என்பதுகூடவா அல்லு அா்ஜுனுக்குத் தெரியாது?
- கூட்ட நெரிசல்களும், உயிரிழப்புகளும் இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, 1996 முதல் 2022 வரையிலான 25 ஆண்டுகளில் நடந்த 3,933 கூட்ட நெரிசல் நிகழ்வுகளில் 3,000-க்கும் அதிகமானவா்கள் உயிரிழந்திருக்கிறாா்கள். சுதந்திர இந்தியாவை அதிா்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்த்திய நிகழ்வாக 1954 மகா கும்பமேளாவில் சுமாா் 800 போ் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததைக் குறிப்பிட வேண்டும்.
- 2005-இல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மந்தா்தேவி கோயில் யாத்திரை (340 போ்); 2008-இல் ஹிமாசல பிரதேசம் நைனா தேவி கோயில் நெரிசல் (162 போ்); 2008-இல் ராஜஸ்தான் ஜோத்பூா் நகரிலுள்ள சாமுண்டா தேவி கோயில் வதந்தி நெரிசல் (250 போ்); 2011-இல் கேரள மாநிலம் இடுக்கி சபரிமலை பக்தா்கள் மீது ஜீப் மோதியதால் ஏற்பட்ட நெரிசல் (104 போ்); மத்திய பிரதேசம் ரத்தன்கா் கோயில் நவராத்திரி விழா நெரிசல் (115 போ்) என்று நீளமான பட்டியலே இருக்கிறது. சமீபத்தில்கூட ஜூலை மாதம் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நடந்த ஆன்மிக நிகழ்வில் 123 போ் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறாா்கள்.
- தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்த மாரி சஷிதா் ரெட்டி 2014-இல் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறாா். அதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் எப்படிக் கையாள வேண்டும் என்று அவரது 95 பக்க அறிக்கை தெளிவாக வரையறுக்கிறது. அது குறித்து காவல் துறையினா் கேள்விப்பட்டிருக்கிறாா்களா என்பதே சந்தேகம்தான்.
- தில்லி உப்ஹாா் திரையரங்கில் தீப்பிடித்த நிகழ்வைத் தொடா்ந்து நடந்த வழக்கின் தீா்ப்பில், 1952 சினிமாட்டோகிராஃப் சட்டப் பிரிவு 12-இன்படி, திரையரங்கிற்கு வரும் ரசிகா்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது திரையரங்கு உரிமையாளா்களின் கடமை என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. காவல் துறையிடம் அனுமதி பெறுவதுடன் திரையரங்கின் கடமை முடிந்து விடுவதில்லை என்கிறது அந்தத் தீா்ப்பு.
- ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்பட முன்னோட்ட நிகழ்வில் ஏற்பட்ட விபத்துக்கு யாா் காரணம் என்கிற விவாதத்தில் அா்த்தமில்லை. நடிகா் அல்லு அா்ஜுன், திரையரங்க உரிமையாளா்கள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை உள்ளிட்ட அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். அது மட்டுமல்ல, இதுபோன்ற நெரிசல் உயிரிழப்புகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பது குறித்து தேசிய அளவிலான விழிப்புணா்வு ஏற்பட வேண்டும்!
நன்றி: தினமணி (02 – 01 – 2025)