விதைத்தால் மட்டும் போதுமா?
- பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. பல்லாயிரக்கணக்கான பனை விதைகளை நீா்நிலைக் கரையோரங்களில் ஆங்காங்கே விதைத்துவிட்டதாகத் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பனைமரத்தை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அறிவிப்பும் உள்ளது. இத்தனைக்கும் மேலே, ‘பனைமரத்தை வெட்டுவோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பனை ஆா்வலா் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனா். இவையெல்லாம் ‘பனைமரம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்ற உயா்ந்த எண்ணத்தைக் காட்டுகின்றன. இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப் போவதில்லை.
- ஆனால் கூடவே பனைவிதை விதைத்தால் மட்டும் போதுமா? பனைகளைப் பாதுகாத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்விகள் பனையைப் பற்றிப் புரிதல் உள்ளோா் மனத்தில் எழுகிறது. ஏனெனில் ‘பனையேற்றுத்தொழில் செய்வதற்கு ஆள்களில்லாமல் பனையை வளா்ப்பதால் அதன் பயனை எப்படிப் பெற முடியும்?’ என்பது அவா்களின் கருத்தாக இருக்கிறது.
- வறட்சியைத் தாங்கி எந்தவிதமான பூமியிலும் தானாக வளரக் கூடியது பனை என்பது உண்மை. ஆனால் இதனை வளா்ப்பதற்குத் தனிக்கவனம் தேவையில்லை என்று முன்வைக்கப்படும் கருத்து ஏற்புடையதாக இல்லை. பனைவிதை முளைத்து வடலியாகி (இளம்பனையின் பெயா்) முழுப்பனையாக (50 அடி உயரம்) ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் ஆகிவிடலாம். வடலியாக இருக்கும்போது ஆடுமாடுகள் கடித்து அதன் வளா்ச்சியைத் தடுத்துவிடக்கூடும். அந்தப் பருவத்தில் அதனைப் பாதுகாப்பது அவசியமாகும். பனை தானாக வளரும் என்று அதனை அப்படியே விட்டுவிட்டால், கருக்கு மட்டையும் காவோலையும் நிறைந்து பனை காட்சியளிக்கும். அதன் கருப்பு நிறம் கண்ணுக்குத் தெரியாது. வடலியாக இருக்கும்போது கருக்குமட்டையை வெட்டி, பத்தலை அறுத்துவிட்டால்தான் பனையின் கருமை பளிச்சென்று தோன்றும்.
- பத்தல் அறுப்பது, கவனமாகச் செய்ய வேண்டிய செயல். கொஞ்சம் ஆழமாக அரிவாள் பதிந்தாலும் குருத்தில் கீறல் விழுந்து வடலி பட்டுவிடும். பனைத்தொழிலில் அனுபவப் பட்டவா்தான் இதனைப் பக்குவமாகச் செய்ய முடியும். முளைத்த இடத்தில் வளருமே தவிர, தென்னை, மா, பலா போன்று கன்றைப் பிடுங்கி வேறிடத்தில் நட்டால் தழைக்காது. பெரிய பனையான பின்பும் ஓலைகளை அறுத்து, பழைய குலைஞ்சிகளைக் களைந்துவிட வேண்டும்.
- பனையால் பெறும் பயன்களோ பல. பனையிலிருந்து கிடைக்கும் பயன்களைப் பாா்த்தால் அதனை ஒரு பல்பொருள் அங்காடி என்று சொல்லத் தோன்றும். பனையின் மட்டை, ஓலை, பதநீா், நுங்கு, பழம், கிழங்கு, வளை (கட்டை) என்று எல்லாப் பாகங்களும் மனிதனுக்குப் பயனுள்ளதாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் பறவைகளின் வாழ்விடமாகவும் பல்லுயிா்களின் இனப்பெருக்கத்திற்கு ஆதாரமாகவும் விளங்குகின்றன. மேலும் பனை பாளைவிடும்போது வெளிவரும் ‘சில்வா் நைட்ரேட்’ மழைப்பொழிவுக்குக் காரணமாக அமைகின்றது என்கின்றனா். மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதோடு நீரைச் சேமித்து நிலத்தை வளப்படுத்தவும் துணையாகிறது பனை.
- பழங்காலம் தொட்டே, தமிழா்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது பனை. அதன் ஓலை எழுதிவைக்கும் ஏடாகப் பயன்பட்டது. அதுவே மழை,வெயிலிருந்து பாதுகாக்க வீட்டிற்குக் கூரை வேய்வதற்குப் பயன்பட்டது. பண்டங்கள் பரிமாறுவதற்குப் பெட்டிகள் (பிழாப்பெட்டி, கணியான் பெட்டி, கின்னிப்பெட்டி, மிட்டாயப் பெட்டி, ஓலைப்பெட்டி கருப்பட்டிக் கொட்டான் என்று பெட்டிகள்தான் எத்தனை), படுப்பதற்கும் தானியங்கள் உலா்த்தவும் பாய், இருப்பதற்குத் தடுக்கு, குழந்தைகள் மகிழ கிலுக்கு, கோடைப்புழுக்கம் போக்க விசிறி என்று பலவற்றிற்கு மூலப்பொருளே பனையோலைதான்.
- கட்டுவதற்குரிய கயிறாகப் பனைநாா் இருந்தது. பனைநாரினால் நாா்ப்பெட்டியும் முடையப்பட்டது. நாரால் பின்னப்பட்ட நாா்க்கட்டிலில் படுத்துறங்குவதே தனிச்சுகம். தானியங்கள் புடைப்பதற்குப் பயன்படும் சுளகு, பிழா போன்றவை பனை ஈா்க்கினால் முடையப்பட்டன. பனையின் வளை (கட்டை) கொண்டு வீடுகட்டப்பட்டது. அடுப்பெரிக்க விறகும் பனையிலிருந்து கிடைத்தது. வடலிமட்டைத் தட்டி வேலியடைக்கப் பயன்பட்டது. இப்படி, பழங்காலம் தொட்டு இக்காலம் வரை தமிழா் வாழ்வியலோடு இணந்துவிட்ட பனை தமிழ் மாநிலத்தின் மரமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
- பனையிலிருந்து கிடைக்கும் பதநீா், கருப்புக்கட்டி, கற்கண்டு, நுங்கு, கிழங்கு போன்றவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்துபவா் இன்றும் பலா் இருக்கின்றனா்.
- பனையின் இத்தனைப் பயன்களையும் பெறவேண்டுமானால், பனை ஏறுவதற்கு ஆள்கள் வேண்டும்.
- ஐம்பது அறுபது அடி உயரம் உள்ள பனையில் ஏறியிறங்கும் பனையேறுதல் என்னும் பனைத்தொழில் மிகவும் கஷ்டமானது. பனையேறுவதற்கு இளைஞா்கள் முன்வருவதில்லை. இந்த நிலையில் பனைத்தொழிலை விருத்தி செய்தால்தான் விதைவிதைப்பதற்கான பலன் கிடைக்கும். விருத்தி செய்ய வேண்டுமானால், பனை ஏறும் தொழிலுக்கு வசதியான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கேரளாவில் இத்தகைய இயந்திரம் பயன்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. அதனை எளிமைப்படுத்தி, விரும்புவோா் பயன்படுத்த வகை செய்தல் வேண்டும். இப்படி ஏதாவது புதிய முயற்சி செய்தால் பனையின் முழுப் பயன்களையும் பெறலாம். அப்படிப் பெற முடியாத போது, ‘விதைகளை விதைத்தால் மட்டும் போதுமா?’ என்ற கேள்வி எழுவது நியாயமாகத்தான் இருக்கும்.
நன்றி: தினமணி (17 – 02 – 2025)