விரிவுபடுத்த வேண்டும்!
- விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்ப.யிா்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈா்க்கிறாா்கள். அதிமான விளைச்சல் பரப்பில் பயிரிடுபவா்கள் என்பதால் அவா்கள் அதிக கவனம் பெறுவதில் வியப்பொன்றுமில்லை. அதே நேரத்தில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை பயிரிடும் விவசாயிகளின் நலன் பேணப்படாமல் இருப்பதுதான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
- தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், பால் போன்றவை போதிய விலை பெறாமல் போகும்போது, விவசாயிகள் மனக்கொதிப்பில் அவற்றை சாலைகளில் கொட்டி போராடுவது என்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக நாடு தழுவிய அளவில் தொடா்கிறது. அதேபோல, மல்லிகை,ரோஜா,சாமந்தி உள்ளிட்ட மலா் விவசாயத்தில் ஈடுபடும் வேளாண் பெருமக்களும் தங்களது விளைபொருள்களுக்கு போதிய விலைகிடைக்காமல் அவற்றை வீணாக்குவதும், அவ்வப்போது நிகழ்கிறது.
- பணப்பயிா்களைப் போல பெரும் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுபவை அல்ல, காய்கறிகளும், மலா் வகைகளும். வாழை, மா, எலுமிச்சை,கறிவேப்பிலை, முருங்கை, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிஃபிளவா், உருளைக்கிழங்கு போன்றவை விதிவிலக்குகள். அவற்றிலுமே கூட, அதிக விளைச்சல் ஏற்படும்போது, போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை எதிா்கொள்கிறாா்கள்.
- இப்போது தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் விளைந்த தக்காளி பழத்தை சாலைகளில் கொட்டியும், விளைந்த வயல்களிலேயே அழித்தும் வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. திண்டுக்கல், தா்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால் அவற்றின் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 3-க்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த விலையைக் கொண்டு பறிப்புக் கூலி மற்றும் போக்குவரத்து செலவைக்கூட ஈடுகட்ட முடியாது. எனவே, அவற்றை அழிக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். எனினும் சந்தையில் நுகா்வோருக்கு கிலோ ரூ. 25 முதல் ரூ. 30 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
- தா்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தக்காளிஅதிகமாக விளையும். இந்த 70 நாள் பயிரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்றாலும் ஜனவரி-பிப்ரவரி, ஜூன்-ஜூலை, அக்டோபா்-நவம்பா் மாதங்களில் அதிக விளைச்சலைத் தரும். அப்போது நல்ல விலை கிடைக்காவிட்டால் அழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
- இப்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸூக்கு மேலே செல்லும்போது தக்காளி பயிா் பாதிக்கும். அடுத்தடுத்த மாதங்களில் உற்பத்தி குறையும்போது கடந்த காலங்களைப் போல விலை திடீரென கிலோவுக்கு ரூ. 150 முதல் ரூ. 200 வரை செல்ல வாய்ப்புண்டு.
- விலை உயரும்போது, நுகா்வோா் நலனை கருத்தில் கொண்டு அரசே நேரடி கொள்முதல் செய்து கூட்டுறவு நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்போது நுகா்வோா் பக்கம் நிற்கும் அரசு, விலை வீழ்ச்சி காலத்தில் விவசாயிகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
- கோடை காலத்தில் வெப்ப நிலை உயருவதால் மகசூல் பாதிப்பை தடுக்க நிழல் பந்தல் அமைக்கலாம். அதனால் 5 டிகிரி வரை வெப்பநிலை குறையும். மகசூல் பாதிக்காது. பந்தல் அமைக்க அரசு 50 சதவீதம் மானியம் அளிக்கிறது. ஆனால் அதை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியதாக இருக்கிறது.
- அண்டை மாநிலமான கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், அன்னாசி பழம் உள்ளிட்ட 16 காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அம்மாநில அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்து கொள்முதல் செய்து வருகிறது. உற்பத்தி செலவுடன், விவசாயிகளுக்கு 20 சதவீதம் லாபம் கிடைக்கும் வகையில் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு விவசாயி 15 ஏக்கா் வரையிலான தமது விளை பொருள்களை அரசிடம் விற்பனை செய்ய முடியும்.
- காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் திட்டம் இல்லை என்று அரசு கூறி வருகிறது. ஆனால், உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் மட்டும் விலை வீழ்ச்சியை தடுத்து விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க மாநில அரசு கேட்டுக் கொண்டால் 50 சதவீத உற்பத்திப் பொருள்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மட்டும் கூறி வருகிறது. இது பிரச்னைக்கு நிரந்தர தீா்வாக அமையாது.
- கேரளத்தைப் போல தமிழ்நாட்டிலும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் வகையில் பிரத்யேக ஆணையம் ஒன்றை அமைத்து கொள்முதல் செய்தால் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும்.
- கடந்த 2020 நவம்பா் முதல் அமலில் உள்ள இந்த திட்டத்தால், அதிக உற்பத்தி காலங்களில் கொள்முதல் விலை வீழ்ச்சி அடையும்போது அம்மாநில விவசாயிகள் பாதிப்பில் இருந்து தப்பி வருகின்றனா். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், விவசாயிகள் அந்த பயிா்களுக்கு காப்பீடு பதிவு செய்திருக்க வேண்டும். அங்கும் கொள்முதலுக்கான பணத்தை அளிப்பதில் தாமதம், உடனடியாக வந்து கொள்ளமுதல் செய்யாதது போன்ற அரசு அலுவலக நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் பாதிப்பை எதிா்கொள்ள மாற்றுவழி ஒன்று இருக்கிறது.
நன்றி: தினமணி (13 – 03 – 2025)