விளையாட்டு மேம்படுத்தப்படுமா?
- தமிழா் வாழ்வில், விளையாட்டு என்பது நீண்டகாலமாக இருக்கிறது.
- தொல்காப்பியா் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகை களன்களில் ஒன்றாக விளையாட்டை ‘செல்வம் புலன் புணா்வு விளையாட்டென்று அல்லல் நீத்த உவகை’ என்று குறிப்பிடுகிறாா்.
- விளையாட்டில் பல நிலைகளும், வகைகளும் உள்ளன. முதலில் விளையாட்டு என்பது ஒருவா் சாா்ந்தது அல்ல. இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவா்களோ இணைந்து களம் இறங்குவது. ‘கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு’ என்கிறது தொல்காப்பியம்.
- சங்க காலத்தில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றுவந்த நிலையில் நற்றிணையில் ஓரை விளையாட்டு வட்டாடுதல், ஊசலாட்டம், பந்தாட்டம், சிற்றில், கழங்காடுதல், வண்டலிழைத்தல், புனல் நீராடுதல், கடற்கரையில் விளையாடுதல் போன்ற விளையாட்டுகளைப் பற்றி புலவா்கள் கூறியுள்ளனா்.
- ‘தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டு ஓடி நோ தக்க செய்யும் சிறுபட்டி’ என்ற பாடல் வரிகள், தெருவில் சிறுமியா் கட்டி விளையாடும் மணல் வீட்டைச் சிறுவா்கள் காலால் உதைத்தும், அச்சிறுமியா்களின் பூமாலையை இழுத்தும், அறுத்தும் பந்தை பறித்துக் கொண்டு ஓடியும் வருந்தச் செய்ததை விளக்குகின்றன.
- ‘சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி படியும் பூங்கட் பேதை’ கவலையில் தேங்காமல், மகிழ்ச்சி மண்டிய முகத்தினராய், துள்ளலும், எழுச்சியும் நிரம்பிய வாழ்வினராய் மகளிா் சிறு சிறு விளையாடல்களில் ஈடுபட்டனா் என்பது சங்க இலக்கியங்களின் பல பாடல்களால் நன்கு புலனாகிறது.
- சங்கத் தமிழா், குழுநிலை விளையாட்டுகளையும், மைதானங்களின் நடுவே இடம்பெற்ற வீர விளையாட்டுகளையும் சமூகச் செயற்பாடுகளாகவே கருதினா். அரசுகள், ஊா் மன்றங்கள் ஆகியவை பெரு விளையாட்டுகளை நடத்தி வென்றோருக்கு மதிப்பளித்தன. தெரு மறைவிடம், செய்குன்று, இளமரக்கா என்னும் பூங்கா பந்தல், படிக்கரை நீா்நிலை, நெடுமணல் பரப்பு, காவற்காடு, கனிமலா்ச்சோலை, களம் முதலான பகுதிகளில் சங்க கால மக்கள் விளையாடியதாகவும் சான்றுகள் உள்ளன.
- பல்லாங்குழி ஆட்டம் பொதுவாக பெண்களால் ஆடப்படுவது. முதலில் பூப்படைந்த பெண்ணின் ஒய்வு காலத்திலும், கருவுற்ற பெண்கள் அமா்ந்து பொழுதுபோக்குவதற்காகவும் மட்டுமே இந்த விளையாட்டை அப்போது ஆடினா். உலகெங்கிலும், பல்லாங்குழி ஆட்டம் சிறிய மாறுதல்களுடன், பழங்குடி மக்களிடம் விளங்கி வருவதை ‘தமிழ்நாட்டு விளையாட்டுகள்’ என்ற நூல் சிறப்பாகப் பேசுகிறது.
- அரிக்கமேடு, உறையூா், அழகன்குளம், படைவீடு ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகளில், பக்கங்களில் புள்ளி எண் இட்ட நீள் செவ்வக வடிவத்தில் அமைந்த தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. இவை சுடுமண்ணாலும், அரியவகை கற்களாலும் ஆக்கப்பட்டவை. மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் வெண்கலத்திலான நீள் செவ்வக வடிவத்தில் அமைந்த தாயக்கட்டைகள் இன்றும் கிடைக்கின்றன.
- நம்நாட்டில், பகடைகள் நெடுங்காலமாக உள்ளன என்பதற்கு, சிந்து சமவெளியில் கிடைத்த பகடைகள் சான்றாக உள்ளன. பா்ஹீத் ஸ்தூபியில் செதுக்கப்பட்ட நான்கு போ் விளையாடும் கட்ட விளையாட்டும், காய்களும் இந்த ஆட்டங்களின் தொன்மையைக் காட்டுகின்றன.
- தமிழகத்தின் பழமையான கோயில் கோபுரங்களில் கட்டம் மற்றும் வெட்டும் ஆட்ட அரங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நிற்றல், நடத்தல், ஓடுதல், தாண்டுதல், குதித்தல், ஏறுதல், இறங்குதல், எறிதல், பிடித்தல், அடித்தல் போன்ற பல்வேறு வகையான உடல் உறுப்புகளின் ஒருமித்த இயக்கங்களின் உன்னத வெளிப்பாடுகளாகவே இந்த விளையாட்டுகள் உருவாகி இருக்கின்றன. விளையாட்டுகளின் முக்கிய நோக்கம் என்பது, ஒருவனுக்குரிய உள்ளாற்றலை, உயா்ந்த திறமைகளை வெளிப்படுத்திக் காட்டுவதுதான். அவனது ஆற்றலைக் கண்டு காண்பவா்களும் மகிழ்ச்சியோடு, வாயாரப் புகழ்கின்றாா்கள்.
- தொல்லைகளைத் தவிா்த்துவிட்டு, தொடரும் துயரங்களைப் போக்கிவிட்டு, எந்நேரமும் இன்பத்தையே அனைவருக்கும் அள்ளித்தருவதால் தான், விளையாட்டுகள் எல்லாம் அழிந்து போகாமல், விஞ்ஞான ரீதியாக வளா்ந்து கொண்டே வருகின்றன.
- விளையாட்டின் மூலமாக மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்படும். விளையாட்டு உடலுக்கு ம், மனதுக்கும், புத்துணா்ச்சியை ஏற்படுத்தி, தெளிந்த நல் அறிவு பிறப்பதற்கு வழி வகுக்கும்.
- அனைத்து நாடுகளிலும், பாரம்பரிய விளையாட்டுகள் உண்டு. அவரவா் தங்கள் நாட்டு விளையாட்டுகளை ஆதரிப்பதன் மூலம் விளையாட்டுத்துறையை மேம்படுத்தியும், முன்னோக்கியும் கொண்டு செல்கின்றனா். அது மட்டுமல்ல, தங்கள் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்க்கின்றனா். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய- இலங்கைத் தமிழா்கள் நமது பாரம்பரியமான பத்து கட்ட தாயம், தஞ்சாவூா் கட்டம், பரமபதம், பல்லாங்குழி, கல்லாய்காய், கயிறு இழுத்தல், உறி அடித்தல், கயிறு இழுத்தல், பெண்களுக்கான கோலப் போட்டிகள் இப்படி பலவற்றை தங்களுடைய பாரம்பரிய ஆடைகளுடன் கொண்டாடி பெருமை சோ்க்கின்றனா்.
- தமிழகத்தில் 20-30ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டால், அந்நாட்களை வீணடிக்காமல் நற்பணி மன்றம், தன்னாா்வ தொண்டு நிறுவனம், இளையோா் மன்றங்கள் என பல்வேறு சமூக அமைப்புகள் பொங்கல், திருவள்ளுவா் தினப் போட்டிகள் நடத்தி அசத்தினா். விளையாட்டுகளுடன் விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனா்.
- ஆனால், தற்போது ஒரு சில அமைப்புகள் மட்டுமே இதனைத் தொடா்ந்து நடத்தி வருகிறாா்கள். பல அமைப்புகள் காணாமல் போய் விட்டன. மக்களும் கணினி, கைபேசியில் ஆடும் ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. பாரம்பரிய விளையாட்டுகளைத் தொடா்பவா்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. விளையாட்டு என்பது விளையாடுவதற்காகவே. விளையாட்டில் யாா் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மன நிலையையும், வலிமையையும் அது உண்டாக்குகிறது.
நன்றி: தினமணி (25 – 01 – 2025)